search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus and car accident"

    • சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரத்தில் இருந்து கோவை டவுன்ஹால் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் ஓட்டி வந்தார். வேடப்பட்டி பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கோவையில் இருந்து மாதம்பட்டி நோக்கி ஒரு கார் வந்தது. காரை மாதம்பட்டி அடுத்த தெனமநல்லூரை சேர்ந்த கோபி சங்கர் என்பவர் ஓட்டி வந்தார்.

    வேடப்பட்டி அருகே பஸ் வந்தபோது, எதிரே வந்த காரும், அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    பஸ் மீது மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி எறியப்பட்டது. இதில் கார் முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது.

    மேலும் அதில் இருந்த கோபி சங்கர் என்பவர் படுகாயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதற்கிடையே காரின் மீது பஸ் மோதியதும், டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். ஆனால் பஸ் எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீது ேமாதியது. இதில் அவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய கோபி சங்கர் மற்றும் பஸ் மோதியதில் காயம் அடைந்த சுப்பிரமணி ஆகியோரை மீட்டனர்.

    பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பஸ், காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×