என் மலர்
நீங்கள் தேடியது "boy knife attack"
ராயபுரம்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் சந்துரு (வயது7). 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவன் நேற்று மாலை தனது உறவினருடன் கடைக்கு சென்று விட்டு கோதண்டராமன் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக ஓடி வந்த 2 வாலிபர்கள் சிறுவன் சந்துருவின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். அவன் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை வெட்டியதாக தண்டையார்பேட்டை சேசாலையப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹேமந்த் (18), சேனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சபேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இருவரும் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
மாணவர்கள் ஹேமந்த், சபேசுக்கும் சக மாணவரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. சபேஷ் மீது சூர்யா தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
எனவே சூர்யாவை வெட்டுவதற்காக சபேசும், ஹேமந்தும் அரிவாளுடன் விரட்டி வந்தனர். அப்போது சூர்யா அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டார்.
இதனால் ஆத்திரமாக இருந்த அவர்கள் ரோட்டில் நடந்து வந்த சிறுவன் சந்துருவை வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹேமந்த், சபேசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






