search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blazed"

    • ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.

    வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.

    பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

    ×