என் மலர்
நீங்கள் தேடியது "bar worker murder"
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்தவர் மகேந்திரன் (வயது60).
நேற்று முன்தினம் மதியம் மதுக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் மகேந்திரன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மகேந்திரனின் தலையில் பலமாக தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து பார் சூப்பர்வைசர் ராஜாவிடம் விசாரித்தனர்.
அவர் போலீசாரிடம் கூறும்போது, “நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற மகேந்திரன் வெகு நேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் மகேந்திரனை பிடித்து தள்ளினேன். குடிபோதையில் இருந்த அவர் தடுமாறி அருகில் இருந்த இரும்பு கேட் மீது மோதி கீழே விழுந்து இறந்து விட்டார். உடனே அவரது உடலை வாகன நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு சென்று விட்டேன்” என்றார்.
இதையடுத்து சூப்பர்வைசர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






