search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank woman employee murder"

    புதுவை குயவர் பாளை யத்தில் வங்கி பெண் ஊழியர் அம்சபிரபாவை கொலை செய்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர் பாளை யத்தில் வங்கி பெண் ஊழியர் அம்சபிரபாவை கொலை செய்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்திய சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் சிறுவர்களாக கருதப்பட வேண்டும் என்பதால் அந்த வாலிபர் மீது சிறுவர் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

    ஆனால், அவரை பெரியவராக கருதுவதற்கு இன்னொரு வாய்ப்பு ஒன்று உள்ளது. அவருடைய உடல் வளர்ச்சியை ஆய்வு செய்து அவர் சிறுவர்தானா? அல்லது பெரியவரா? என்பதை முடிவு செய்யலாம்.

    இதற்காக ஒரு குழு ஒன்று உள்ளது. அந்த குழு நேரடியாக இதை ஆய்வு செய்யும். அதில், பெரியவருக்கான உடல் வளர்ச்சி அனைத்தும் தென் பட்டால் பெரிய நபராக கருதி அதற்கான சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம். அப்போது அவர் சீர்திருத்த பள்ளிக்கு பதிலாக ஜெயிலில் அடைக்கப்படுவார்.

    அம்சபிரபா கொலை நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு கொலையாளியை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் சிக்குவதற்கு அங்கிருந்த கண்காணிப்பு கேமரா முக்கிய காரணமாக இருந்தது. வீட்டின் முன் பக்கம் 2 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன.

    அதில் வீட்டுக்கு மிக அருகே இருந்த முதல் கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் காலி மனை பகுதி வழியாக அம்சபிரபா வீட்டு அருகே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி மதியம் 2.57 மணி அளவில் பதிவாகி இருக்கிறது.

    அதன் பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றதற்கான எந்த காட்சியும் இடம் பெறவில்லை. 3.50 மணி அளவில் அந்த வீட்டின் கீழ் இருந்த பெண்ணும், மற்ற சில பெண்களும் அங்கு நடமாடும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த கேமராவில் பதிவாகி இருந்த வாலிபர் உருவம் சரியாக தெரியவில்லை. எனவே, யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதன் பிறகு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள மற்றொரு சந்திப்பு சாலையில் இருந்த கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில், கொலை நடந்த பிறகு மாலையில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்திய காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

    அப்போது அதில் ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் விசாரிப்பதை அவர் ஓரக்கண்ணால் ரகசியமாக நோட்டமிடும் காட்சி பதிவாகி இருந்தது.

    எனவே, போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. அந்த நபர் யார்? என்று அம்சபிரபாவின் குடும் பத்தினரிடம் விசாரித்தனர். அவர் பின் வீட்டு வாலிபர் என்று கூறினார்கள்.

    எனவே, போலீசார் அவரை கண்காணித்தனர். அவருடைய நடவடிக்கைகள் அவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

    கொலை நடந்த போது, நீ எங்கிருந்தாய்? என கேட்டதற்கு ராஜா தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருந்தேன் என்று கூறினார்.

    உடனே போலீசார் கேமராவில் உள்ள காட்சிகளை காட்டி இதில் இருப்பது நீதானே என்று கேட்டார்கள். ஆமாம் என்று அந்த வாலிபர் கூறினார்.

    படம் பார்க்க போன நீ எப்படி இந்த இடத்துக்கு வந்தாய்? என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரித்தனர். வேறு வழியில்லாமல் நான்தான் கொலையாளி என்பதை கூறினார். அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

    அந்த வாலிபர் நீண்ட காலமாக மும்பையில் உள்ள அவரது பாட்டி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் புதுவை வந்தார்.

    இங்கு வந்ததும் புறா வளர்க்க ஆரம்பித்தார். அந்த புறா பிரச்சினைதான் கொலை வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவு காலம் மும்பையில் இருந்த அவர் ஏன் புதுவைக்கு வந்தார்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மும்பையில் ஏதேனும் தவறு செய்து இருப்பாரோ? என கருதி அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×