search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ban on taking soil"

    • நீர்நிலையில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கண்மாயில் குவாரி அமைத்து, கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. இந்த கிராவல் மண்ணை திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்த 25.2.2022 வரை காண்டிராக்டர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் சாலை அமைக்க கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, இரவும், பகலும் புளியங்குளம் கண்மாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர். இதற்காக கண்மாயில் இருந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வெளியேற்றினர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டோம். சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பின்பும், குறிப்பிட்ட கால அனுமதியை தாண்டி, தற்போதும் அந்த குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகி விட்டது.

    எனவே புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 மாதம் மட்டும் அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பலமாதங்களாக குவாரியில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிராவல் மண் எடுக்க அனுமதித்த அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக எதன் அடிப்படையில் மண் அள்ளப்படுகிறது? இதை ஏற்க இயலாது. அந்த குவாரியில் கிராவல் மண் எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×