search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappa devotees struggle"

    மேட்டுப்பாளையத்தில் சபரிமலையில் இளம் பெண்கள் பிரவேசிப்பதைத் தடுக்க கேரள அரசை வலியுறுத்தி பஜனை, ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. #Sabarimala
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்கள் குழு சார்பாக சபரிமலையில் இளம் பெண்கள் பிரவேசிப்பதைத் தடுக்கவும், மறுசீராய்வு மனுதாக்கல் செய்யக் கோரியும், புதியசட்டம் இயற்றக்கோரியும் கேரள அரசை வலியுறுத்தி பஜனை, ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி பஸ்நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் அய்யப்பபக்தர்கள் சரண கோ‌ஷங்களை முழங்கிக் கொண்டே ஊர்வலமாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் பஸ் நிலையத்தை அடைந்தது. குத்துவிளக்கு ஏற்றி வைத்து அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குழு ஒருங்கிணைப்பாளர் கே.வி.அச்சுதன்குட்டி தலைமை தாங்கினார். நகர சபை முன்னாள் தலைவர் சதீஸ்குமார் வரவேற்றுப் பேசினார்.

    சாக்தஸ்ரீவாராகிமணி கண்டசுவாமிகள், அகத்தியர் ஞானபீடாதிபதி சரோஜினி மாதாஜி, உண்ணி கிருஷ்ணன்குருசாமி, ஸ்ரீ அய்யப்பன் பஜன சமாஜ செல்வராஜ், துளசிதாஸ், உதயகுமார், எல்.ஐ.சி. பொன்னுசாமி, உமாசங்கர் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் சசி ரகுநாதன் நன்றி கூறினார்.

    இதேபோல் துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே இந்து மத பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள அய்யப்பன் கோவில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் அய்யப்பன் படம் ஏந்தி ஒன்று கூடி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து வந்தனர். இதில் இந்து மத பக்தர்கள் பேரவை, அய்யப்பா சேவா சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து துடியலூர் பஸ்நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பேசியவர்கள், ஆகம விதிப்படி குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் 48 நாள் விரதமிருந்து சபரிமலையில் தரிசனம் செய்ய இயலாது. பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் இந்த முறையை மாற்றி தரப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலினை செய்ய வேண்டும்.

    சில நாட்களில் கோவையில் ஒரு லட்சம் பேர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம் என்று பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் தியாகராஜன் வரவேற்று பேசினார். கோட்ட பொறுப்பாளர் பாலன் முன்னிலை வகித்தார். இந்து மத பக்தர்கள் பேரவை அமைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மகளிர் அணி சாருலதா சிறப்புரையாற்றினார். இதில் அசோக், ஜெய்கார்த்திக், சுதாகர் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #Sabarimala
    ×