search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP women"

    பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை சென்ற ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    அதேசமயம் கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள்.

    அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்துவதால் சபரி மலையில் பரபரப்பு ஏற்படு கிறது.

    தற்போது பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். நேற்று ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றது. அந்த குழுவில் 50 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் 2 பேரும் இடம்பெற்று இருந்தனர்.

    இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதால் சபரிமலையின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SabarimalaTemple

    பம்பையில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஐயப்ப பக்தர்களில் போராட்டத்தால் அவர்கள் திரும்பி சென்றனர். #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் அவர்கள் சபரிமலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பம்பைக்கு வந்த 2 ஆந்திர பெண் பக்தர்களின் வயதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அந்த பெண்களை சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் கோ‌ஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து போலீசார் 2 பெண்களின் வயதையும் ஆய்வு செய்தனர்.அப்போது அவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. வழக்கமாக இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சபரிமலைக்கு வருவது வழக்கமாம். இந்த பெண்கள் 2 பேரும் பம்பையிலேயே தங்கி விடுவார்கள். மற்ற ஆண்கள் சபரிமலை சன்னிதானம் சென்று தரிசனம் செய்து விட்டு வந்ததும் இவர்கள் வீடு திரும்புவார்கள்.

    இன்றும் தாங்கள் சன்னிதானம் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். பக்தர்கள் போராட்டம் காரணமாக உடனடியாக ஊருக்கு திரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை (22-ந்தேதி) இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இன்று விடுமுறை நாள் என்பதால் சபரிமலையில் வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். போலீசார் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய காட்சி

    இன்று பக்தர்கள் கூட்டத்தோடு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் வரக்கூடும் என்று ஐயப்ப பக்தர்கள் கருதுகிறார்கள். இதனால் அவர்கள் அந்த பெண்களை தடுத்து நிறுத்த ஆங்காங்கே திரண்டு உள்ளனர். மேலும் சபரிமலை வனப்பகுதியிலும் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கூடாரம் அடித்து தங்கியிருந்து கண்காணிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதைதொடர்ந்து அவர்கள் இந்த தகவலை வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் வன ஊழியர்களும் வனப்பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழைந்துள்ளார்களா? என்பதை கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையில் நிலக்கல்லில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேசமயம் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் நடைபெறும் போராட்டம் இன்று தொடர்ந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணியினர் அறிவித்து உள்ளனர்.

    நேற்று இந்து முன்னணியினர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம் வீட்டை முற்றுகையிட சென்றபோது அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். அதே போல மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் நாமஜெப யாத்திரையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  #SabarimalaTemple

    ×