search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ANTI SOCIAL GANG"

    • திருச்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள அறிவியல் பூங்காவில் புகுந்து அட்டூழியம் செய்யும் சமூக விரோத கும்பலால் பொதுமக்கள் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்
    • இது ஒரு புறம் என்றால் சமூகவிரோதிகள் மாலை நேரங்களில் பூங்காவின் பின்புற சுவர் ஏறி குதித்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுகிறார்கள்.


    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அறிவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள அறிவியல் உபகரணங்கள் அனைத்தும் செயலிழந்து உபயோகமற்ற நிலையில் கிடக்கின்றன.

    இருப்பினும் நகரின் முக்கிய பகுதியில் பூங்கா அமைந்துள்ளதாலும், விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்ற காரணத்தினாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே சமீப காலமாக பூங்காவுக்கு வருகை தரும் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. பூங்கா உருவாக்கப்பட்டதற்கான நோக்கமே கேள்விக்குறியாகி விடும் நிலையில் பூங்காவின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பல்வேறு அத்துமீறல்களுக்கு உட்பட்டு வந்தது.

    இது ஒரு புறம் என்றால் சமூகவிரோதிகள் மாலை நேரங்களில் பூங்காவின் பின்புற சுவர் ஏறி குதித்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுகிறார்கள். இதனால் மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள்.

    பூங்காவின் பின்புற சுவரையொட்டி குடியிருப்புகள் இருக்கிறது. இந்த காம்பவுண்ட் சுவர் உயரம் குறைவாக உள்ளது. மேலும் போதிய லைட் வெளிச்சமும் இங்கு இல்லை. இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட காவலாளியை மது கும்பல் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது, தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் தற்போது ஆண் போலீசாரின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல் நிலைய அதிகாரிகள் போனை எடுக்க மறுக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு தில்லை நகர் போலீசாரை உடனடியாக வரவழைப்பது சவாலாக இருக்கிறது என்றார்.

    அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் முகமது கூறும்போது, மது குடிக்கும் சமூக விரோத கும்பலின் நடவடிக்கையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொழுதுபோக்கிற்காக பூங்கா வரும் பெண்கள் குழந்தைகள் நலன் பாதிக்கப்படுகிறது.

    சிறுவர்கள் அதிக அளவில் கூடி மது அருந்துவது, அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுவது என இருந்து வருகிறார்கள்.

    ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த பூங்காவுக்கு வரும் மக்களுக்கு குடிநீர் வசதியும் இல்லை. பூங்காவின் பின்புறம் உள்ள சுவரின் உயரத்தை அதிகப்படுத்தி நன்கு வெளிச்சம் உள்ள விளக்குகளை போட்டால் மது கும்பலை கட்டுப்படுத்த முடியும். மாநகராட்சி நிர்வாகமும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்


    ×