search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti set bore well"

    விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சென்னியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதில் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு சிறிது தூரத்தில் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நிலத்தின் உரிமையாளர் முடிவு செய்தார். இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மேலும் அதில் மின் மோட்டார் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நல்லம்பள்ளி-லளிகம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை அவர்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டு விடும். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். 

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராமமக்கள் சாலை மறியல் மற்றும் பஸ் சிறைப்பிடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×