search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna University scam"

    அண்ணா பல்கலைகழக விடைத்தாள் முறைகேடு ஊழல் தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் இன்று ஆஜரானார்கள்.#AnnaUniversityScam

    சென்னை:

    அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் 500-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

    இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் செமஸ்டர் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மறுமதிப்பீட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா கைது செய்யப்பட்டார்.

    இதன் பின்னணி குறித்து விசாரித்த போது மறு மதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமானது.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் நடத்தினர்.

    திண்டிவனத்தில் உள்ள மறுமதிப்பீட்டு மையத்தில் வைத்தே இந்த முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. இதனை தொடர்ந்து மையம் செயல்பட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமாருக்கு ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று பேராசிரியர்கள் இருவரும் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் மறுமதிப்பீடு ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் பெண் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியது. #AnnaUniversityScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தமிழக கல்வித் துறை வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணம் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் தருகிறார்கள் என்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைத்தரகர்கள் மூலம் படையெடுத்தனர். அவர்களில் சிலர் கொடுத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், சில நூறு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120(பி), 167,201, 420, 468, 471 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 13(2), 13(1),(4) ஆகிய 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த முறைகேடு எப்படி நடந்தது என்பது பற்றிய தகவல்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-


    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், கட்டிடக் கலை மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் கல்வியை வழங்கி வருகிறது. 2012-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அதன் தலைமையில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் 13 கூட்டு கல்லூரிகள், 593 பொறியியல் கல்லூரிகள், நெல்லை, மதுரை, கோவையில் 3 மண்டல அலுவலகங்கள் உள்ளன.

    பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை நடத்தி வருகிறது. முறைகேடுகளை தடுக்க மறுமதிப்பீடு செய்யும் பணியையும் இந்த துறையே செய்து வருகிறது. ஆனால் அந்த துறையே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தனர். 23 மையங்களில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு பணி நடந்தது.

    விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் மாணவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 16 ஆயிரத்து 636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. மொத்தத்தில் 90 ஆயிரத்து 369 பேர் விடைத்தாள் மறு மதிப்பீட்டால் பயன்அடைந்தனர். இவர்களில் கணிசமானவர்கள் லஞ்சம் கொடுத்து கூடுதல் மதிப்பெண் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கூடுதல் மதிப்பெண் போடுவதற்காக மற்றும் அரியர்ஸ் இல்லாமல் பாசாக்கி விடுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 10 ஆயிரம் ரூபாயை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆவார்கள். இதன் மூலம் தேர்வு கட்டுப்பாட்டுத் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

    விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் அனைவருமே லஞ்சம் கொடுத்து இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பாதி பேர் லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வகையில் கணக்கிட்டால் தேர்வு கட்டுப்பாட்டு துறையினர் ரூ.45 கோடியை முறைகேடாக சம்பாதித்து ஊழல் செய்து இருப்பது உறுதியாகி உள்ளது.

    திண்டிவனத்தில் நடந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டு பணியில்தான் அதிக முறைகேடுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திண்டிவனத்தில் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது பல மாணவர்கள் எழுதிய விடைகளை விட கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது விடைத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்து இருப்பதை உறுதி செய்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், சிவக்குமார் இருவரும் முறைகேடுக்கு பெரிய அளவில் துணையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி டாக்டர் ஜி.வி.உமா, உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார், கண்காணிப்பாளராக இருந்த சுந்தரராஜன், மகேஷ்பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் கோட்டூர்புரம் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த விஜய குமார், சிவக்குமார் ஆகியோரது திண்டிவனம் வீடுகளிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமான ஆவணங்கள் சிக்கின. உமாவின் வீட்டில் இருந்து அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் அறிவித்துள்ளனர்.

    விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலான ஆவணங்களை உடனுக்குடன் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் சுமார் 10 சதவீத ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த ஆவணங்கள் இந்த ஊழலை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது கூடுதல் மதிப்பெண் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா மறுத்துள்ளார். இவர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 3.3.2015 முதல் 2.3.2018 வரை அந்த பதவியில் இருந்தார்.

    அவர் கூறுகையில், “நான் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக 3 ஆண்டுகளும் சட்ட விதிக்குட்பட்டு செயல்பட்டேன். எனது செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருந்தது. நான் எந்த தவறும் செய்யவில்லை. கடவுள் என் பக்கம் இருக்கிறார்” என்றார்.

    ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதற்கு தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறி உள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை பெற இயலாத சில பேராசிரியர்கள் இந்த முறைகேடுகள் குறித்து மேலும் ஏராளமான திடுக்கிடும் தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கூறியுள்ளனர்.

    அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அது போல குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேர் மீதும் அண்ணா பல்கலைக்கழகம் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் மேலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். அப்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டால் தேர்வுத்துறை முறைகேட்டில் மேலும் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #AnnaUniversityScam
    ×