search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhinathar Alwar"

    • ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி பூப்பந்தல் மண்டபத்தில் நடைபெற்றது.
    • வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நேற்று பூப்பந்தல் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு நம்மாழ்வார் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்து 16 ஆண்டுகள் கழித்து வாய்திறந்து திருவாய்மொழி பாடினார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பெருமாள் கோவிலில் உள்ள கருட வாகனங்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதிஅரவிந்தர லோசனர், தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன்,

    திருக்கோளூர் வைத்த மாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீமதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு 10 மணிக்கு 9 பெருமாள்களும் புஷ்ப அலங்காரத்துடன் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.

    வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார்.

    அதைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும், 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக இளநிலை உதவியாளர் பெருமாள் செய்திருந்தனர்.

    ×