search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "74 people arrested"

    • கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர்.
    • போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழங்குடி, இருளர் உள்ளிட்ட அனைத்து நலிந்த பிரிவினருக்கும் விரைவில் ஜாதி சான்றிதழ், மனைப்பட்டா, நல வாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சாதி சான்றிதழுக்கு இணையவழி அல்லாமல் நேரடியாக மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர் பாபு, தலைவர் சிவகாமி மற்றும் நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று திட்டமிட்டபடி சென்னைக்கு நடை பயணமாக செல்வோம் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, சட்ட ஆலோசகர் வக்கீல் திருமேனி, தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நடைபயணமாக செல்வதற்கு தயாரானார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பெண் மயக்கம் அடைந்து சாலையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு குடிநீர் வழங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர். இதில் 30 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×