search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "35 ton coins"

    திருப்பதியில் தேங்கி கிடக்கும் பயன்பாட்டில் இல்லாத 35 டன் நாணயங்களை சேலம் ஆலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து அதை திருமலைக்கு வந்து உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளில் நாணயங்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து தேவஸ்தானம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் வரவு வைத்து வருகிறது. நாணயங்களை தேவஸ்தானம் விரும்பும் போது கணக்கிட்டு வருகிறது.

    தற்போது தேவஸ்தானத்திடம் பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள் 35 டன் நிலுவையில் உள்ளது. இவற்றை உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி முதல் 25 பைசா மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களின் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது.

    ஆனால் தேவஸ்தானம் தன்னிடம் உள்ள நாணயங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அவை தேக்கமடைந்தன. நாணயங்களை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்று ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கடிதம் எழுதியது.

    அதற்கு ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் கேட்காமல் தனிப்பட்ட முறையில் எவ்வித விளக்கமும் அளிக்க முடியாது என்று பதிலளித்தது.

    மேலும் நிலுவையில் உள்ள நாணயங்களை சேலத்தில் உள்ள உருக்காலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியது. உடனே தேவஸ்தானம் சேலம் உருக்காலையை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தது.

    அதற்கு ஆலை நிர்வாகம் நாணயங்களை உலோகத்தின்படி (அலுமினியம், கப்ரோனிகல், ஸ்டீல், தாமிரம், பித்தளை) பிரித்து அளித்தால் மட்டுமே உருக்கி அளிக்க முடியும் என்றும், அதற்கான மதிப்பு பணமாக மாற்றி அளிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

    தேவஸ்தானம் ஏதாவது எந்திரம் செய்ய உருக்காலைக்கு ஆர்டர் அளித்திருந்தால் அதிலிருந்து கழித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது. இதற்கு தேவஸ்தானமும் ஒப்புதல் அளித்துள்ளது.

    நாணயங்களை மாற்றிக் கொள்ள தேவையான காலக்கெடு இருந்தபோதும் தேவஸ்தான அதிகாரிகள் அவற்றை மாற்றிக் கொள்ளவில்லை.

    நாணயங்களை உருக்கினால் கிடைக்கும் மதிப்பை விட அவற்றை மாற்றியிருந்தால் அதிக தொகை கிடைத்திருக்கும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இனியாவது பயன்பாட்டில் உள்ள நாணயங்களை தேக்காமல் உடனுக்குடன் கணக்கிட்டு வங்கியில் வரவு வைக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    ×