search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "34 killing"

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியான நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளது.

    வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதமாக அதிகரித்துள்ளது.

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரத்தை பேணி பராமரிக்காத தொழிற் சாலைகள், நிறுவனங்கள், வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    டெங்கு கொசுக்கள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதமும் விதித்து வருகிறார்கள். என்றாலும் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மிக, மிக சவாலாக உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதலே டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு மாதமாக பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு டெங்கு பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. குறிப்பாக கடந்த மாத இறுதியில்தான் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக வேகமாக பரவி நிறைய பேரை நிலை குலைய செய்துள்ளது.

    கிராமங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள்தான் டெங்கு வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தி அதிகமாகி விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை அரசு பொது மருத்துவமனையில் பதிவான தகவல்களின்படி 917 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். தற்போது சுமார் 600 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. நேற்று அரசு மருத்துவமனைகளில் சுமார் 2700 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

     


     

    தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. பருவ மழை அதிக அளவில் பெய்வதால் டெங்கு பாதிப்பவர்கள் குறைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவுவது அதிகாரிகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார குறைவு காரணமாக பன்றிக் காய்ச்சல் மிக, மிக எளிதாக பரவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே வீட்டில் யாராவது ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலும் உடனே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள விழிப்புணர்வு பிரசாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எவ்வளவு விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் பன்றிக் காய்ச்சல் வந்த பிறகும் பலர் அசட்டையாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர். நேற்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முத்துகிருஷ்ணன், செல்வம் இருவர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் இது வரை 34 பேர் பலியாகி விட்ட நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதுமான மருந்து, மாத்திரைகள் கைவசம் இருப்பதால் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு சுமார் 3,600 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி கை கழுவுங்கள் என்ற பிரசாரம் தீவிரமாகி உள்ளது. #Swineflu #Dengue

    ×