search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2004 Grenade Attack On Hasina"

    வங்காளதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற குண்டுவீச்சு வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் உள்பட 19 பேருக்கு ஆயுள், 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #KhaledaZia #Hasina #GrenadeAttack
    டாக்கா:

    இந்தியாவின் அண்டைநாடான வங்காளதேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும், கலிதா ஜியாவும் உள்ளனர்.

    இவர்களில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் ஷேக் ஹசினா, மறைந்த முன்னாள் பிரதமரும் வங்காளதேசம் என்னும் தனிநாடு உதயமாக வித்திட்டவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் ஷேக் ஹசினா பதவி வகித்து வருகிறார்.

    மற்றொரு பெண் அரசியல் தலைவரான கலிதா ஜியா, வங்காளதேசம் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியாவார்.

    வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவராகவும், அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும் இருந்த ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் கலிதா ஜியா தீவிர அரசியலில் குதித்தார்.

    இந்நிலையில், 21-8-2004 அன்று ஆண்டு கலிதா ஜியா பிரதமராக பதவி வகித்தபோது எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியின்போது எதிர்க்கட்சி தலைவர் ஷேக் ஹசினாவை குறிவைத்து நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜில்லுர் ரஹ்மானின் மனைவியும் அவாமி லீக் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ஐவி ரஹ்மான் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஷேக் ஹசினா காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது காதுகளில் கேட்கும் திறன் பறிபோனது.

    இச்சம்பவம் தொடர்பாக அந்நாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், முன்னாள் உள்துறை மந்திரி லுத்ஃபோஸ்மான் பாபர் உள்ளிட்ட 49 பேர் மீது டாக்கா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


    தாரிக் ரஹ்மான்

    இவர்களில் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தற்போது லண்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். இவ்வழக்கில் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஹர்க்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்னும் பயங்கரவாத அமைப்பினரின் துணையுடன் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்றதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷாஹெத் நூருதீன்,  முன்னாள் உள்துறை மந்திரி லுத்ஃபோஸ்மான் பாபர் உள்பட 19 பேருக்கு மரண தண்டனையும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  #KhaledaZia #Hasina #GrenadeAttack

    ×