என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 years ole"

    சேலத்தில் 100 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாய்க்கு பொதுமக்கள் விழா எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகில் சவுண்டம்மன் கோவில் தெரு உள்ளது.

    இந்த தெருவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1918-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி குருசாமி செட்டியார் என்பவர் இரட்டை குடிநீர் குழாய் அமைத்து அதனை பொது மக்களுக்கு தானமாக வழங்கினார்.

    100 ஆண்டுகள் ஆகியும் அந்த குழாயில் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். அந்த குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ? அது போலவே தற்போது உறுதியாக காட்சி அளிக்கிறது.

    இதனை நினைவு கூறும் வகையிலும், அந்த குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையிலும் சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் அந்த குழாய் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து வெள்ளை வர்ணம் அடித்து அழகு படுத்தப்பட்டு இன்று விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், குடிநீர் அவசியத்தை வலியுறுத்தியும் தங்களது கருத்துகளை கூறினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் அந்த குடிநீர் குழாயை தானமாக வழங்கியவர்களின் வாரிசுகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடிநீர் குழாய்க்கு விழா எடுத்தது சேலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளதாக அந்த பகுதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #Tamilnews
    ×