என் மலர்
வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடுல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை உடலில் பூசியும், வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், சிவந்த சடைமுடியும், நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாக நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர், பொன்னும், மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் விரும்புவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!






