என் மலர்
வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தம் பூவும், வில்வ இதழும், வெண்மையான கபாலத்தை மாலையாகவும் அணிந்து, யாவருக்கும் வழிபடுவதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் போற்ற, சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைப் பாடும் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!






