என் மலர்
வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து
மாண்தங்கு நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது, அந்த மலையினாலேயே தண்டனை அளித்த, பெருமை உடைய நான்மறையோர் வணங்க திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளும் இறைவனே! உயர்ந்து நிற்கும் பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் இரவில் அழகிய தோள்களை அசைத்து நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தை விரும்ப என்ன காரணமோ? சொல்வாயாக!






