என் மலர்
வழிபாடு

பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி புறப்படுகிறது
- திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்.
- சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சாமி ஐயப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அன்றைய தினம் மதியம் சாஸ்தா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பிறகு திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் சபரிமலை நோக்கி தலைச்சுமையாக ஊர்வலமாக புறப்படும். திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்.
திருவாபரணங்கள் 14-ந் தேதி அட்டத்தோடு வழியாக மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணங்களுக்கு தேவஸ்தான மந்திரி வாசவன், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு ஐயப்ப சாமிக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்வார்கள். மகர விளக்கையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கையொட்டி கோவிலில் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவுபெறும்.






