என் மலர்
வழிபாடு

திருவண்ணாமலையில் டிசம்பர் 3-ந்தேதி மகாதீபம்: நாளை பந்தக்கால் நடப்படுகிறது
- இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 10-ம் நாள் அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அப்போது கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் அர்ச்சகர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும். அதன் பின்னர் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






