என் மலர்
வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை - நமக்காகவே பிறந்தார் இயேசு
- இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர்.
- இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கொண்டாடுவர். மத எல்லைகளைத் தாண்டி, அன்பு, கருணை, அமைதி ஆகிய மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பாவிகளை ரட்சிக்க பாலகனாய் இயேசு அவதரித்த நாள் இது. உலகத்தை இருளில் இருந்து மீட்டு, மக்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க அவதரித்தவர் இயேசு கிறிஸ்து. நமக்காகவே பிறந்த அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள், அவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கிய நாளாக இது அமைகிறது.
அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் என்ற தேவதை தோன்றி, அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. அதன்படி மேரி கருவுற்றாள்.
பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள்.
அவரும் அன்று இரவு தன்னுடைய ஆடு, மாடுகளை பாதுகாக்கும் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள்.
இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதர் அனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப்பூமியில் நல்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருக்குள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.
இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர். ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.
இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல அநியாயங்களும், தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றினார் இயேசு கிறிஸ்து.
இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு பலரும் தன் மகனை எப்படி வாழ வைக்க வேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்" -ஏசாயா (9 : 16)
கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா கூறிய தீர்க்க தரிசனம் இது.
"இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)
இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 என்பது முதன் முதலாக கி.பி.154-ம் ஆண்டு போப் ஜூலியசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்துவானவர் ஒவ்வொருவர் இருதயத்திலே பிறந்து, அவருடைய பண்புகளாலும், செய்கைகளாலும் அன்பும் கருணையும் நிறைந்தவர்களாய் காணப்படுவதே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உண்மையான நோக்கமாகும். இயேசுவானவர் பிறப்பினாலும், அவர் வார்த்தையினாலும் கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அறிவித்து உதவி செய்து வாழ்வதே உன்னதமாகும்.
`மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக மரித்தார்' என்று சொல்லும் வேளையில் அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்த நாளில் அவர் கூறிய பரிசுத்த வழியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் சேர்த்து கொண்டாடுவோம்.






