என் மலர்tooltip icon

    கோவில்கள்

    மாங்கல்ய பாக்கியம் அருளும் பழஞ்சிறை தேவி
    அகில உலகத்தையும் தோற்றுவித்த ஆதி முதல் கடவுள் சிவபெருமான். ஆக்கல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர் அவர் ஒருவரே! பிரம்ம தேவனாலும் மகா விஷ்ணுவினாலும் அடிமுடி காண முடியாமல் ஒளிப் பிளம்பாக நின்றவன். அப் பரம்பொருளான சிவபெருமானின் அன்புக்குரிய மனையாள் சக்தி சொரூபினியான பார்வதி தேவி.

    உயிர்களைப் பேணிக்காத்து, துன்பம் ஏற்படுகின்றபோது துயர்துடைத்து காப்பது அந்த தேவி தான். அருள் தேடி தன்னிடம் அபயம் நாடி வருவோருக்கு அருள் வழங்கி வருவதும் அன்னை பார்வதி தேவியே!

    அனந்தன் காடு :

    ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் நிறைய பெற்ற இடமாக திகழ்ந்த ‘மலையாளம்’ பகுதியில் திருவனந்தபுரம் என்ற இடம் காடாகக் கிடந்தது. இதனை ‘அனந்தன் காடு’ என்றே அழைத்தனர்.

    இந்த இடத்தில் பாய்ந்தோடிய நீலாற்றங்கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர், அன்னை பார்வதி தேவியை தியானித்து தவம் மேற்கொண்டார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்து செழித்திடவும், தான் முக்தி அடைந்திடவும் வேண்டி கடும் தவம் புரியலானார்.

    தேவி, முனிவரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தாள். ‘என்னை இவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடுக! வழிபடுவோர் அனைத்து நலனும் பெற்றிடுவீர்’ என ஆசி வழங்கி மறைந்தாள் அன்னை.

    பழஞ்சிறை அம்மன் :

    முனிவர், எந்த வடிவில் காட்சியளித்து அருள்புரிந்தாலோ, அந்த வடிவிலேயே அன்னையின் சிலையை வடித்து வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அன்னையை வெகு காலம் வணங்கி வழிபட்ட அவர் இறுதியில் முக்தியை அடைந்தார்.

    நாளாவட்டத்தில் காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை அமைக்கப்பட்டது. நாளடைவில் சிறைச்சாலையில் அழிந்து விட்டது. இதனால் இப்பகுதி பழஞ்சிறை என்று அழைக்கப்படுகிறது. கால மாற்றம் பல நிகழ்ந்தாலும், அம்மனின் ஆலயம் அருளால் பிரமாண்டமாய் வளர்ந்தது. இத்தல அம்மனின் முன்பாக யோகீஸ்வரரின் சிலை உள்ளது. கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

    பழஞ்சிறை தேவி (அம்மன்) குடியிருத்தப்பட்டுள்ள இந்த ஆலயத்தில், அழகு வண்ணச் சிற்பங்கள் கண்களையும், கருத்தையும் கவரும்படி உள்ளன. கர்ப்பக்கிரகத்தை யானைகள், ஆறு சிங்கங்கள் சிலை வடிவில் சுமந்தபடி காட்சியளிக்கின்றன. கர்ப்பக்கிரகத்தின் மேல் பகுதியில் மும்மூர்த்தி தேவியர் மற்றும் கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி, ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸன், மாடன் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திர தினத்தன்று ஆரம்பமாகும் திருவிழா சிறப்புடையதாகும். ஆரம்ப தினம் முதல் குறிப்பிடும் படியான சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் ‘தோற்றப்பாட்டு’ எனும் பாடலை பாடுகின்றனர். அன்னை பார்வதி தேவியின் அவதார மகிமை பாடும் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இப் பாடலை பாடுபவர் நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து பாடிவருகின்றனர். அம்மனின் வரலாற்றுப் பாடலை கேட்டாலே பக்தர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி நற்பயன் பெறுவர் என்பது ஐதீகம்.

    கன்னியர் பூஜை :

    மாசி மாதத்தில் ஆறாவது திருநாள் தினத்தில் இரவில் நடக்கும் ‘அத்தாழை பூஜை’ வேளையில், இந்த கன்னியர் பூஜை நடத்தப்படும். அம்மன் சின்ன வயது தோற்றத்தில் காட்சியளிப்பது போல், பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை கட்டி பூஜையில் கலந்து கொள்வார்கள். இதே தினம் சுமங்கலிப் பெண்கள் சார்பில், தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையும் நடத்தப்படுகிறது. இரவு 2 மணி அளவில் ஸ்ரீபூதபலி பூனை என்ற பூஜை நடைபெறும். அம்மன் அருள் பெற்ற பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி வாளுடன் பின் நோக்கி நடன மாடியபடி சென்று, பூத கணங்களுக்கு நேரடியாக காலத்திற்கேற்றபடி திக்குபலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த பூஜையின் போது ஆண்கள் மட்டுமே அனு மதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா வருகிற 12–ந் தேதி (செவ்வாய்) முதல் 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது. 12–ந் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்கப்படுகிறது. மூன்றாம் நாளான 14–ந் தேதி காலை சிறுவர் களின் குத்தியோட்ட விரதம் தொடங்கி நடைபெறும். ஐந்தாம் நாள் திருவிழாவான 16–ந் தேதி, கோவில் முன் களத்தில் நாகர் படம் வரைதல் (களம் எழுதுதல்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏழாம் திருவிழா 18–ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்திலும், தெருவோரங்களிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் அம்மனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டப்படும். 19–ந் தேதி இரவு தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறும்.

    பஞ்ச பூதப்பொங்கல் :

    மாசித்திருவிழாவின் ஏழாவது நாளில் பூரம் நட்சத்திரத்தன்று இந்த பஞ்ச பூத பொங்கல் நடத்தப்படும். பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் ஆகும்.

    பூமியில் கிடைக்கக் கூடிய மண்ணினால் உருவாக்கப்பட்ட பானைகளில் கைக்குத்து அரிசியை போட்டு நீர் விடுகின்றனர். மூன்றாவது தத்துவப்பொருளாய் இடம்பெறும் நெருப்பினால் பொங்கல் தயாரிக்கப்படு கிறது. காற்று தன் சக்தியை காட்டும் வகையில் வீச, நெருப்பு சுடர்விட்டு எரிகிறது. வாயு தத்துவப்பொருளை உணர்த்தும் படி அம்மனின் வாழ்த்தொலி குரவையொலி எழு கிறது. ஐந்தாவது தத்துவப் பொருளான வானம் வழியே பொங்கல் பானைகள் மீது மலர் மாலை பொழியப்படுகிறது. இதில் ஐந்து தத்துவங்களும் அடங்கியுள்ளதல்லவா! பரந்த வெளியில் பொங்கல் போடப்படுவதை சிறப்பாக கொள்ளலாம்.

    பொங்கல் நைவேத்தியத்தை கனிவுடன் தேவி ஏற்றுக்கொள்வதால் பழஞ்சிறை தேவியை பெண்களின் பொங்கல் படையலை இனிதாக ஏற்றுக்கொள்ளும் ‘பொங்கல் பிரியை’ என்றே கூறலாம்.


    சிறப்புக்கள் :

    நவராத்திரி விழா காலத்தில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன் அணையாத ‘ஹோமம்’ நடைபெறும். நவராத்திரி ஒன்பது தினங்களிலும் சண்டி ஹோமம் நடத்தப்படும். மார்கழி மாதத்தில் தேவிக்கு பஞ்சாமிருத அபிஷேகம் சித்திரை புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும்.

    கோவிலின் வெளிப்பக்கம் அரசமரம் செண்பகமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகொடிகள் வளர்ந்து அழகு சோலையாக காட்சியளிக்கின்றது. இதனை ‘சர்ப்பக்காவு’ (நாகர் சோலை) என அழைக்கின்றனர். இங்குள்ள நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு–கேது தோஷம் நீங்கப்பெற்று நலன் பெறுவர்.

    பழஞ்சிறை தேவி கோவிலுக்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்குகிறது. தேவிக்கு வழிபாடாக மாங்கல்யம் அணிவிக்கும்போது மாங்கல்ய பாக்கியம் ஏற்படுகிறது. பழஞ்சிறை தேவிக்கு ஆடை அணிவித்து அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர். மேலும் தினசரி பொங்கல் படைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதும் உண்டு.

    பழஞ்சிறை தேவியை வழிபடுவோருக்கு இனி பிறவி இல்லை என்பதோடு இப்பிறவியில் தொல்லைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்வு அமையும் என்று நம்பப்படுகிறது.

    திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் பாதையில் ‘அப்பலத்தரா’ என்ற இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில்.
    இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.
    வேலூரைச் சேர்ந்த சதீஷ் திருமலைக்கோடி கிராமம் சென்று புற்றுக்கு 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7 புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்யும் போதுமஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது. அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.
    சக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.

    தங்கக் கோயில் உருவாக்கப்பட்டதன் காரணம் :

    மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை. மேலும் ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதுமில்லை. அதனால்தான் இந்த பிரமாண்டமான தங்கக்கோயிலை கட்டியிருக்கிறார்கள். இப்படி கட்டியதால் இந்தக்கோயிலை பார்க்க மக்கள் வருவார்கள். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

    தங்க கோயிலின் சிறப்பம்சம் :

    நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோயிலை கட்ட 600 கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 55000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது.

    மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். இந்த கோயில் 100 ஏக்கர் பரப்பளவிள் உள்ளது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர்.

    இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது. கோயிலை சுற்றிலும் புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளே செயற்கையான மலைகளும், குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோயிலுக்குளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று அருமையாக காட்சியளிக்கின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செல்போன் மற்றும் கேமரா ஆகியனவும், லக்கேஜ், மற்ற பொருட்களையும் வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று போர்டு வைத்துள்ளனர். கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள அனைத்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ மிக அருமையாக அமைந்துள்ளது
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் யாக சாலை பூஜைகள் கடந்த 25–ந்தேதி அன்று தொடங்கியது. தினமும் பூஜைகள் நடைபெற்றன.

    கபாலீசுவரருக்கும், கற்பகம்பாளுக்கும், தனித்தனியாக பூரண கும்பம் வைத்து தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. யாகமும் நடத்தப்பட்டது.

    இதில் கபாலீசுவரர் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிவன் கோவில் குருக்கள் உள்ளிட்ட 150–க்கும் மேற்பட்ட சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரித்து யாகம் நடத்தி பூஜை செய்தனர். இப்படி தொடர்ச்சி யாக 11 நாட்கள் பூஜை நடத்தப்பட்டது. கோவிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

    இன்று கும்பாபிஷேகத்தை யொட்டி, அதிகாலை 5 மணிக்கு 12–வது காலபூஜை நடந்தது. காலை 7.15 மணி அளவில் யாகம் பூர்த்தி அடைந்தது.

    இதன் பின்னர் யாக சாலையில் இருந்து கலசங்கள் புனித நீருடன் எடுத்துச் செல்லப்பட்டன. காலை 8.50 அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கலசங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கலசங் களின் மீது ஊற்றிஅபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பா பிஷேகம் முடிந்ததும் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    கபாலீசுவரர் கோவிலில் உள்ள அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், நர்த்தன வினாயகர், கபாலீ சுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலவர் மற்றும் பரிவாரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி ரதவீதிகளில் சிவனடியார்கள் நாதஸ்வரம் முழங்க நடனம் ஆடியதையும் காண முடிந்தது. பக்தர்களின் வசதிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய தலம் திருமங்கலக்குடி.
    இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக ” பிராணவரதேஸ்வரரும்”. அம்பாளாக ” மங்கள நாயகியும் ” அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என ” பஞ்ச மங்கல ஷேத்ரமாக” வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது.“மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே”எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர்

    ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் “காலவர் ” என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ ” துறவியே, எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை” எனக் கூறினார். அதற்கு துறவியோ ” முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா” என வினவ.

    காலவர் ” நீர் யார் ? ” எனக் கேட்டார். துறவி ” நான் தான் கால தேவன் ” எனக் கூறி மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் ” குஷ்ட நோய் ” பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள் நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய் பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும் என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம் கொண்டார்.

    நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் ” என்றார் பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம் கேட்டனர்.

    மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், “அர்க்கவனம் என்ற தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும் வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் ” என்றார். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.

    நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும் வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம் அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார். அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார்.

    கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச் சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும் எனவும் விளக்கினார்.

    இவ்வாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து ” நவக்கிரகர்களே, உமது தவம் மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்கட்டும் ” என அருளினார்.

    இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ முனிவர், ஓடோடி வந்து நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் ” கோள் தீர்த்த வினாயகர் ” என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே, திருக்கோயில் ஒன்றை அமைத்து நவக்கிரக நாயகர்களை தனி சன்னதிகளில் பிரதிஸ்டை செய்தார்.

    பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் ” திருமங்கலக்குடி ” என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும்தலம் ” சூரியனார் கோவில் ” என்றும் வழிபடலாயிற்று. சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத்தலமாக விளங்குவது இத்திருமங்கலக்குடி.
    மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி

    நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத்திருத்தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப்பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என “பஞ்சமங்கள ஷேத்திரமாக” விளங்கும் திருத்தலம் இது.

    கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில், சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குரங்காடு துறை எனப்படும் ஆடுதுறை தலம். (திருவாவடு துறை என்பது வேறு.)

    இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இறைவி பவளக்கொடியம்மையுடன் அருள்புரிகிறார். இந்தத் திருத்தலத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்திருப்பதுதான் “பஞ்ச மங்கலத் தலம்’ என்று சிறப்பித்துப் போற்றப்படும் திருமங்கலக்குடி திருத்தலம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி, மங்களாம்பிகை ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

    இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும்; ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் இது. கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள்- தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு..

    ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு திசை நோக்கியுள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும் நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொருவர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்..

    கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் உள்ளார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன..

    சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப்பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

    பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தலவிருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தலவரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.

    பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது :

    காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
    ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் புகழப்படுகிறது, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன் கபாலீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம சிரச்சேத மூர்த்தியாக, பிரம்ம கபாலத்துடன், தாருகா வனத்து ரிஷிகளின் இல்லம் சென்று பிச்சை ஏற்ற காரணத்தால் கபாலீசுவரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
    தல வரலாறு :

    ஒரு முறை அன்னை பார்வதிக்கு ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் சிறப்பினையும் இறைவன் விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அன்னையின் கவனம் முழுவதும், அங்கே தோகை விரித்து ஆடிய மயிலின் மீதே சென்றது.

    இதனால் சினம் கொண்ட சிவபெருமான் அன்னையை பூவுலகில் மயிலாகத் தோன்றி தன்னை வழிபட்டு, அதன்பின் கயிலாயம் வந்து சேர வேண்டும் என்று பணித்தார்.

    அதன்படியே மயில் வடிவம் கொண்ட பார்வதிதேவி, தற்போதைய மயிலை திருத்தலத்தில் புன்னை மரத்தடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான் மீண்டும் அன்னையை ஏற்றுக்கொண்டார்.

    அதே போல அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பகுதி மயிலை என்று அழைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், 9 கலசங்களுடன் 132 அடி உயரத்தில் விண்ணை நோக்கி பிரமாண்டமாய் நிற்கின்றது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சுதைச்சிற்பங்கள் இந்தக் கோபுரத்தினை அலங்கரிக்கின்றன. இதன் எதிரே 16 கல் மண்டபம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே கபாலித் தீர்த்தம் எனும் பிரமாண்ட திருக்குளம் மூன்று லட்சத்து 25 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

    மூலவர் கபாலீசுவரர் மேற்கு முகம் நோக்கி காட்சி தர, எளிய மேற்கு கோபுரம் வாசலாக அமைந்துள்ளது. வலமாக, நர்த்தன விநாயகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் சன்னிதி, திருப்புகழ் பாடல் பெற்ற வள்ளி–தெய்வானை சமேத சிங்கார வேலர் சன்னிதிகள் உள்ளன.

    முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி–தெய்வானை யானை வாகனத்திலும் அமர்ந்து காட்சி தருவது அரிய கோலமாகும். மேற்கு வாசலில் கொடிமரம், பலிபீடம், பிரமாண்ட நந்தி கிழக்கு முகமாய் நோக்க, மூலவர் கபாலீசுவரர் மேற்கு முகமாய் அருளாசி வழங்குகிறார். இறைவன் பெரிய வடிவில் எழிலோடு காட்சி தருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

    கருவறைக் கோட்டத்தில் துர்க்கை, சண்டிகேசுவரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியவை அமைந்துள்ளன. துர்க்கை சன்னிதி எதிரே அறுபத்து மூவர் உள்ளிட்ட அனைத்து உற்சவர்களும் வரிசையாக அணி வகுக்கின்றன. உற்சவ மூர்த்திகள் அனைத்தும் கலைநயம் கொண்டு திகழ்கின்றன.

    அன்னை மயிலாகி வழிபடும் சன்னிதி, அருணகிரிநாதர், அங்கம் பூம்பாவை, தனி சனிபகவான் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, சிங்கார வேலர் சன்னிதிக்கு இடது புறம் பழனி ஆண்டவர் சன்னிதி, நாயனார் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. நர்த்தன விநாயகர் சன்னிதியில் இடது புறம் ஜெகதீஸ்வரர், சுந்தரேஸ்வரர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    பல நூற்றாண்டுகளாக இவ்வாலயத்திற்கு விழாக்கள் நடைபெற்றதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்கள் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன. பங்குனியில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தலமரம் புன்னை மரம், தலத் தீர்த்தம் கபாலித் தீர்த்தம் ஆகும்.

    பேயாழ்வார் :

    வைணவ நெறியைப் பின்பற்றி வாழ்ந்த பன்னிரெண்டு ஆழ்வார்களில், பேயாழ்வார் குறிப்பிடத்தக்கவர். கிணற்றில் தோன்றியவர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின், மூன்றாம் திருவந்தாதி பாடியவர். சைவம், வைணவம் என்ற இரு சமயத்திற்கும் இடையே இருந்து வந்த வேற்றுமையை நீக்கி ஒற்றுமைக்கு பாடுபட்டவர் என்பது இவரின் கூடுதல் சிறப்பு. இவர் அவதரித்த கிணறு, சென்னை கச்சேரி சாலையில் இணையும் அருண்டேல் தெருவில் அமைந்துள்ளதை இன்றும் கண்டு மகிழலாம்.

    பெண்ணை உயிர்ப்பித்த சம்பந்தர் :

    ஏழாம் நூற்றாண்டில் சிவனேசன் என்ற வணிகர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார். அவர் தனது மகளான பூம்பாவையை திருஞான சம்பந்தருக்கு மணம் புரிய விரும்பினார். ஆனால் எதிர்பாராத விதமாக பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். எனினும், நம்பிக்கையை இழக்காத சிவனேசர் தன் மகளின் உடலை எரித்து, அதன் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்.

    இந்த நிலையில் ஒரு முறை திருஞானசம்பந்தர், திருமயிலைக்கு வருகை தந்தார். அப்போது தனது மகளின் நிலையை அவரிடம் எடுத்துக்கூறினார் சிவனேசர். திருஞான சம்பந்தர், கபாலீசுவரரை மனதில் தியானித்து, பதினோரு பாடல்களை பாடினார். இறைவனின் அருளால், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். உடனே அவளை மணம் செய்து கொள்ளும்படி சம்பந்தரிடம் வேண்டினார் சிவனேசர். ஆனால் ஒரு உயிரை உயிர்ப்பித்துக் கொடுத்த வகையில், அவளுக்கு தந்தையாகிப்போனதாக கூறி அன்போடு மறுத்து விட்டார். இந்த நிகழ்வே அறுபத்து மூவர் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அறுபத்து மூவருக்கு சில குறிப்பிட்ட ஆலயங்களில் விழா எடுப்பது அறிந்ததே. என்றாலும் மயிலாப்பூரில் நடக்கும் எட்டாம் நாள் விழாவான அறுபத்து மூவர் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. பூம்பாவையை உயிர்பித்து 16 கால் மண்டபம் வரும் திருஞானசம்பந்தர், சிவனேச செட்டியார், பூம்பாவை, பஞ்ச மூர்த்திகள் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஆகியோர் வீதி உலா வருவது வெகு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம் :

    தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரின் மையப்பகுதியில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து தெற்கே 9 கிலோமீட்டர், சென்னை எழும்பூரில் இருந்து தென் கிழக்கே 8 கிலோமீட்டர், வேளச்சேரி – சென்னை கடற்கரை ரெயில் தடத்தில் திருமயிலை ரெயில் நிலையம் அருகே மயிலாப்பூர் கபாலீசுவரர் திருத்தலம் அமைந்துள்ளது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் மயிலாப்பூர் உள்ளது. வடக்கில் திருவொற்றியூர், தெற்கே திருவான்மியூர் நடுவில் திருவல்லிக்கேணி என பழம் பெரும் தலங்களுக்கு மையமாக மயிலாப்பூர் இருக்கிறது.

    ×