என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இயற்கை எழில் சூழ்ந்த கொல்லூர் கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம்.
    கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பசுமையான இயற்கை சோலைகள் கொண்ட சிற்றூர் கொல்லூர். இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.

    கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான். தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர். இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவப்பெருமானிடம் சென்று முறையிடுகின்றனர். அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் பொருத்தறுளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார்.

    அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்குகின்றனர். அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடத்தை மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.

    அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார். அப்போது சிவனை நோக்கி தவம் செய்யும்போது அவர் முன் வந்து ஆசி வழங்குகிறார். அவர் தங்களை பூஜை உருவம் வேண்டும் என்ற போது லிங்க பிரஸ்டை செய்யகூறுகிறார்.
     
    ஆனால் அம்பாளுடன் உடன் இருப்பது போல் பூஜிக்க வேண்டும் என எண்ணுகிறார்.  அவரின் ஆசைப்படி மாயசக்தியான மூகாம்பிகா உருவத்தை அவருக்கு காட்டுகிறார். சிவனின் சக்தியும் அதில் இருப்பதை உணர்ந்து அவ்வுருவத்தை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்.

    ஆதிசங்கரருக்கு அருள்:

    ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாக உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு – ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்தபாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர்.

    இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணுஅவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

    அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும், தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார்.

    அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான். கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார். அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள். ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது.

    அப்படி திரும்பினாள் அந்த இடத்திலேயே என்னை பிரஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆதிசங்கரரும் அதை ஏற்று அமபாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகாளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். அந்தயிடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.

    ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள்.

    சவுபர்னிக்கா :

    கோயிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபார்னிக்கா ஆறு ஓடுகிறது. கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசிர்வாதி நீரோடையை உருவாக்கி தந்தார்.

    அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக்கூறப்படுகிறது. கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 64  வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன. இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.

    தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.

    அதேபோல் கருவறையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன. இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோயில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார வலா வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை. தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வரிசையில் வரவைத்து அனைவரையும் சமமாக அமரவைத்து போதும் என்ற அளவுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    வழிதடம் - தங்கும்விடுதி :

    இங்கிருந்து ஆதிசங்கரர் தவம் செய்த இடமான கொடச்சேரி செல்ல ஜீப்கள் உண்டு. 1 மணி நேர பாதையே இல்லாத மலையில் ஜீப்பில் நம்மை அழைத்து செல்வது த்ரில்லிங்க். 1 மணி நேரம் மலையேறினால் தான் கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த கோயிலை காண முடியும்.

    சுவாமிக்கு அபிஷேகம் எல்லாம் பக்தர்களே செய்துக்கொள்ள வேண்டும். அந்தயிடத்தில் இருந்து திரும்பி வர மனம்மே வராது. அந்தளவுக்கு பசுமையான, மேகம் சூழந்த கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை பசேல் என்று குளிச்சியாக இருக்கும் அந்த பகுதி. இரவில் தங்க அனுமதியில்லை.
     
    செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரத்தில் மலைக்கோயிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரெங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார்.
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது செஞ்சி. செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவரத்துக்கு பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு! இங்கே... மலைக்கோயிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரெங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார்.

    ராஜா தேசிங்கு வழிபட்ட ஆலயம், மலையடிவாரத்தில் ஸ்ரீஅனுமன், புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை என இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம். பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதரை, தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு. போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத் துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்! தவிர, நீண்ட ஆயுளுக்கான திசை பார்த்து தரிசனம் தருகிறார் ரங்கநாதபெருமாள் என்றும் சொல்வர்!

    இந்தத் தலத்தில், மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மக நாளில் செஞ்சியில் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் தரும் உத்ஸவர், மறுநாள் புதுச்சேரியில் நடை பெறும் தீர்த்தவாரியிலும் கலந்துகொள்வாராம்!
    சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள வசந்த மண்டபத் தில், சர்வ அலங்காரத்துடன் வந்து காட்சி தரும் உத்ஸவரைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்கள்.

    பிறகு 'ரங்கா... ரங்கா...’ எனும் கோஷங்கள் விண்ணைத் தொட... தீர்த்தவாரி நடைபெறும். அரங்கனுக்கு தீர்த்தவாரி நடைபெறும்போது, அருகில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஸ்வாமியும் அம்பாளும் கலந்து கொள்வது சைவ-வைணவ ஒற்றுமைக்குச் சான்று! சிங்கவரம் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசியுங்கள்; நம் சிக்கல்கள் யாவும் விலகும்!

    குறை தீர்ப்பாள் கோலாரம்மா!

    பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சுமார் 68 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகர். இந்த நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, 3-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், கங்க மன்னர்கள். பிறகு, அந்த நகரத்தை சோழர்கள் கைப்பற்றினார்கள். அடுத்து ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு மன்னர்கள் எனப் பலரும் ஆட்சி செய்துள்ளனர்.

    தங்கச் சுரங்கம் உள்ள  கோலார் தங்கவயலுக்கும் கோலார் நகருக்கும் 27 கி.மீ. தூரம். இது ஆலயங்களுக்கும் பெயர் பெற்ற நகரம்.
    கோலார் நகரின் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அமைந்துள்ளது கோலாரம்மா கோயில். 11-ஆம் நூற்றாண்டில், சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம், தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மண்டபம் போன்ற நுழைவாயில். உள்ளே சென்றால், வெளிப் பிராகாரம், உட்பிராகாரம் இரண்டுமே உள்ளன. உட்பிராகாரத்தில் நுழையும் வாசலுக்கு வலது பக்கத்தில், சுவரில் ஐந்து அடி சதுரக் கல்லில் யுத்தக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான, அரியதொரு சிற்பம்!

    கருவறையின் வெளிச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள். அவற்றில் பெரும்பாலானவை தமிழில் அமைந்தவை. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னர் (1012-1045) காலத்துக் கல்வெட்டுக்களாம் இவை!  பிறகு, 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், சில கல்வெட்டுக்கள் கன்னட மொழி எழுத்துக்களைக் கொண்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    கருவறையில், நேரே பார்க்கும் பக்தர்களுக்கு சப்த மாதா சிற்பமே தெரிகிறது. உள்ளே, சப்த மாதாவுக்கு இடப்புறம் மகிஷாசுரமர்த்தினி (துர்க்கா) எட்டுக் கைகளுடன், ஒரு கையில் உள்ள திரிசூலத்தால் காலடியில் உள்ள அசுரனைக் கொல்லத் தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்கைதான் 'கோலாரம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறாள்!

    கோலாரம்மா உக்கிரமாகக் காட்சி தருவதால், நேரடியாக பக்தர்கள் காண முடியாதபடி, ஒரு மூலையில் அமைக்கப்பட்டு, சப்த மாதாவுக்கு வலது பக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலைக் கண்ணாடி மூலமாக தரிசிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

    மிகவும் சக்தி வாய்ந்தவள் இவள் எனப் பூரிக்கின்றனர் ஊர் மக்கள். இவளின் சந்நிதியில் வந்து தங்களது குறைகளைச் சொன்னால் போதும்... விரைவில் கவலைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கின்றனர் பக்தர்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். ஆனால், காலை 9 மணிக்குப் பிறகு, கோயில் நடை சார்த்தி இருப்பதுதான் வேதனை.

    இது தெரியாமல் 9 மணிக்குமேல் வரும் வெளியூர் பக்தர்கள் பலரும், ''கோலாரம்மாவைத் தரிசனம் செய்தால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்னு கேள்விப்பட்டு வந்தோம். இங்கு கருவறை சாத்திக் கிடக்குதே! வெளியிலிருந்துகூட அம்மாவைப் பார்க்க முடியாதபடி, கனமான மரக்கதவு போட்டுப் பூட்டி வெச்சிருக்காங்களே'' என்று  புலம்பித் தவிக்கின்றனர்.

    காலை 9 மணிக்குள் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வருகிறார் அர்ச்சகர். அதன் பிறகுதான் கோலாரம்மனையும் சப்த மாதாவையும் தரிசிக்க முடியும்! செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகலிலும் ஆலயம் திறந்திருக்குமாம்.

    ஆவலுடன் கோலாரம்மாவைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் செல்வதானால், காலை 9 மணிக்கு உள்ளேயும், மாலை 6 மணிக்கு மேலும் செல்வது உத்தமம். இரவு 8 மணிக்கு ஆலயம் நடை சாத்தப்பட்டு விடும்.
    இவரை வணங்கினால், தீராத நோய் தீரும், நெஞ்சினில் உண்டாகும் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை, பூக்கடைக் காவல் நிலையம் அருகில் உள்ள தேவராஜமுதலி தெருவில் சென்னக் கேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பட்டணம் கோவில், பூக்கடைக் கோவில் என்ற பெயரிலும் இந்தக் கோவில் எல்லோராலும் அறியப்படுகிறது. நகரின் சென்னி (தலை) போல் இருந்த சென்னக் கேசவர் கோவிலால், இந்தப் பகுதி ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அதுவே மருவி ‘சென்னை நகர்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    கேசி என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் தீராத துன்பங்களைக் கொடுத்து வந்தான். அவனது தொல்லைகளை பொறுக்க முடியாமல் அனைவரும் அவதிப்பட்டு வந்தனர். ஒரு முறை தேவர்கள் அனைவரும் அசுரனிடம் இருந்து உலகத்தைக் காத்தருளும்படி, திருமாலை வேண்டி நின்றனர். அவரும் அசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தார்.

    கேசி என்ற அசுரனை வதம் செய்ததால், திருமாலுக்கு ‘கேசவர்’ என்ற திருநாமம் வழங்கப்படலாயிற்று. அவரே இந்தப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாளாக எழுந்தருளியுள்ளார். இவரை உள்ளன்புடன் வழிபடுபவர்கள், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்தப் பெருமாள் நாம் வேண்டும் வரத்தைத் தருபவராகவும், துன்பம் நீக்கி இன்பம் அருள்பவராகவும் திகழ்கிறார்.

    கோவிலுக்குள் நுழையும் முன்பாக, அழகிய பெரிய மண்டபம் நம்மை வரவேற்கிறது. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் வடக்கு பார்த்த நிலையில் எம்பார் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவர் திவ்யபிரபந்தத்திற்கு விளக்கம் அருளியவர் ஆவார். தொடர்ந்து சென்றால் கருவறையை அடையலாம்.

    கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என்ற காவலர்கள் உள்ளனர். கருவறையில் மூலவராக சென்னக் கேசவப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரது இடதுபுறத்தில் ஸ்ரீதேவி தாயாரும், வலதுபுறத்தில் பூமாதேவி தாயாரும் உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் அலங்காரப் பிரியர் என்றால், இத்தலத்தில் உள்ள சென்னக் கேசவப் பெருமாள் அன்னப்பிரியர் என்ற சொல் வழக்கு உள்ளது.

    உற்சவராக நரசிம்மர் :

    சென்னக் கேசவப் பெருமாள் ஆலயம் 1758–ம் ஆண்டு வரை, தற்போதுள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. கோட்டை விரிவாக்கப் பணிக்காக, அந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் கோவிலை அப்புறப்படுத்தியதாகவும், அதன்பிறகு சென்னக் கேசவப்பெருமாள் ஆலயம் அமைக்க, தற்போதுள்ள இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு, 1780–ம் ஆண்டு வாக்கில் ஆலயப்பணி நிறைவடைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு பழைய ஆலயத்தில் இருந்த கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் வரலாற்றுக் குறிப்புகள் மூலமாக அறியப்படுகிறது.

    தற்போதுள்ள இடத்தில் புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் தான், உற்சவர் விக்கிரகம் இல்லை என்பது தெரியவந்தது. அதுபற்றி விசாரித்தபோது, உற்சவர் விக்கிரகம், திருநீர்மலையில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அங்கு 5 பெருமாள் விக்கிரகங்கள் இருந்தது கண்டு, எது சென்னக் கேசவப் பெருமாள் உற்சவர் சிலை என்பதில் குழப்பம் அடைந்தனர்.

    இறுதியில் நரசிம்மரின் உற்சவர் சிலையை எடுத்து வந்து ஆலயத்தில் வைத்தனர். சில காலம் கழித்து தான் சென்னக் கேசவப் பெருமாள் உற்சவர் சிலை, திருநீர்மலையிலேயே தங்கிவிட்டது தெரியவந்தது. இருப்பினும் இங்கு நரசிம்மர் உற்சவர் சிலை இருப்பதுதான் இறைவனின் விருப்பம் போல என்று எண்ணி அப்படியே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    பெருமாள் சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வடக்கு பார்த்து அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி நம்மை வரவேற்கிறது. இவருக்கு சக்கரராஜர், சுதர்சனர், திருவாழி ஆழ்வான், சக்கரத்தண்ணல், நேமி என்று பலவாறான திருநாமங்கள் அமையப் பெற்றுள்ளன. இவரை வணங்கினால், தீராத நோய் தீரும், நெஞ்சினில் உண்டாகும் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவருக்குப் பின்பக்கத்தில் தெற்கு பார்த்த அழகிய சிங்கர் எனும் யோகநரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில், மேற்கு பார்த்த நிலையில் அனுமன் சன்னிதி இருக்கிறது. இவரை வழிபடுபவர்களுக்கு, இன்னல்களை களைவதோடு மட்டுமின்றி, வலிமையையும், வெற்றியையும் தருகிறார். இவரை கடந்து சென்றால், வடக்கு பார்த்த திசையில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இவர்களுக்கு அருகிலேயே திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இருவரும் வடக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இதற்கடுத்த தனிச் சன்னிதியில் திருக்கச்சி நம்பிகள், பட்டர், வேதாந்த தேசிகர் ஆகியோர் எழுந்தருளியிருக் கிறார்கள்.

    இவர்களை வழிபட்டு திரும்பினால், தனித்தனி கல்லினாலான வடிக்கப்பட்ட நான்கு யானைகள் கிழக்கு முகமாக வீற்றிருக்கும் கோதண்டராமர் சன்னிதிக்கு வழிகாட்டுகின்றன. இந்த சன்னிதியில் கோதண்டராமருடன், சீதை, லட்சுமணன், பரத, சத்ருக்கனன், அனுமன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இதைக் கடந்தால் கிழக்கு பார்த்தபடி தனிச்சன்னிதியில் செங்கமலவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். இந்தத் தாயார் கமல முகத்துடனும், கருணை வடிவாகவும், பக்தர்களின் கோரிக்கைகளை உடனே தீர்ப்பவளாகவும் வீற்றிருக்கிறாள்.

    மேலும் ஆலயத்தில் ருக்மணி– சத்யபாமா சமேதராக கண்ணன் வீற்றிருக்கும் சன்னிதியும், கருடாழ்வார் சன்னிதியும், வலதுபுறத்தில் ராமானுஜர், முதலியாண்டார், கூரத்தாழ்வார் அருள்பாலிக்கின்றனர். கிளிமண்டபத்தில் இருந்து கிழக்கு பார்த்து செல்லும் போது, வலப்புறத்தில் பரத மண்டபத்தில் ராமர் பாதங்கள் உள்ளன.

    புடைப்புச் சிற்பங்கள் :

    தாயார் சன்னிதி, கோதண்டராமர் சன்னிதி, சொர்க்கவாசல் நுழைகிற மண்டபம் மற்றும் கிளிமண்டபத்தின் தூண்கள் போன்றவற்றில் நிறைய புடைப்புச் சிற்பங்கள், கலை நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ராமர், சீதை, அனுமன், கண்ணன் மற்றும் கண்ணனின் லீலைகள், திருமால் சயனம், தசாவதார காட்சிகள், யோக நரசிம்மர், ஆழ்வார்கள், தும்புருநாதர், கோபியர்கள் போன்ற இன்னும் பல திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் விநாயகர், சிவலிங்கம், நந்தி ஆகிய சிற்பங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளது.

    பெருமாள் சன்னிதி நுழைவு மண்டபத்தின் வலது புற மேற்கூரையில், கல்லைக் குடைந்து மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அனுமன் சன்னிதிக்கு நேர்எதிரே உள்ள மண்டபத்தின் மேல் லட்சுமி மற்றும் கருடர் சிற்பங்கள் சுதை வடிவில் உள்ளன. பொய்கையாழ்வார் மற்றும் கோதண்டராமர் சன்னிதி மேற்கூரையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமர், சீதை, கஜேந்திர மோட்சம், மகாலட்சுமி, ஆழ்வார்கள் போன்ற சுதைச்சிற்பங்கள் மிக நேர்த்தியாக அமையப்பெற்று பார்ப்போர் கண்களை கவருகின்றன.

    கோவில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
    1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தியநாதர் திருக்கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சத்தியநாதர் திருக்கோவில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்தப் பகுதியில் முன்காலத்தில் காரைச்செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்பட்டுள்ளன. இதனால் இத்தல இறைவன் ‘காரைத்திருநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். திருக்காலீஸ்வரர் என்ற திருநாமமும் அவருக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 5–வது தலமாகும். திருஞான சம்பந்தர் இத்தல இறைவனைப் பற்றி தேவாரப்பாடல் பாடியுள்ளார்.

    தல வரலாறு :

    கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை. இவளை மணம் முடிக்க இந்திரன் முதலான தேவர்கள் பலரும் முயற்சி செய்தனர். இறுதியில் திருமணம் செய்தது கவுதமர். அகலிகைக்கு திருமணமான பின்பும் கூட இந்திரனுக்கு அவள் மீதான ஆசை போகவில்லை. அகலிகையை வஞ்சகமான முறையில் அடைய முயற்சி செய்தான். தவத்தின் வலிமையால், விரும்பிய வடிவம் எடுக்கும்படி பெற்றிருந்த வரம் அவனுக்கு கைகொடுத்தது.

    ஒரு நாள் அதிகாலை வேளைக்கு முன்பாகவே கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்றான் இந்திரன். வெளியில் நின்று கொண்டு சேவலைப் போல கூவினான். பொழுது விடிந்ததாக எண்ணிய கவுதமர் நீராடுவதற்காக வெளியே சென்றார். அந்த நேரத்தில் கவுதமர் போல் வடிவம் கொண்டு ஆசிரமத்திற்குள் நுழைந்த இந்திரன், அகலிகையை ஏமாற்றி காமுற்றான். ஏதோ ஒரு மாயையால் தான் வெளியே கிளம்பி வந்ததை உணர்ந்த கவுதமர், விரைந்து ஆசிரமம் சென்றார். அவரைக் கண்ட இந்திரன் தப்பிச் செல்ல முயன்றான். ஆனால் கவுதமர் அவனுக்கு உடல் முழுவதும் கண்ணாக மாறும்படி சாபம் கொடுத்தார். அதே போல் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன், பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவபெருமானை வழிபட்டு விமோசனம் தேடினான். அவ்வாறு இந்தத் தலத்திற்கு வந்தபோது, காரைச் செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தைப் போக்கி ‘காரைத்திருநாதர்’ என்ற பெயர் பெற்றார் என்கிறது தல புராணம்.

    தட்சிணாமூர்த்தி :

    மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது இத்தல ராஜகோபுரம். இத்தல இறைவன் சத்தியநாதர் என்ற பெயருடன் அருள்பாலித்து வரு கிறார். இவர் சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பவர் என்பது சிறப்பாகும். அம்பாளுக்கு காரார்குழலி என்பது திருநாமம். பிரமராம்பிகை என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கு எதிரே உள்ள நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு. கோவில் பிரகாரத்தில் புதன் பகவான் சன்னிதி அமைந்துள்ளது. அவருக்கு அருகில் இந்திரன் வீற்றிருக்கிறார்.

    ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக் கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி பகவான் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய 4 சீடர் களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இந்தத் தலத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    புதன் பகவான் :

    பிரகஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்ட சந்திரன், அவரிடம் கல்வி கற்று வந்தான். குரு என்பதையும், அவரது மனைவி தனக்கு தாய் போன்றவள் என்பதையும் மறந்த சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியான தாரை மீது காதல்கொண்டான். ஒரு சமயம் சந்திரன், மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் பிரகஸ்பதி, தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன், அவளை மயக்கி அவனுடனேயே இருக்கச் செய்துகொண்டான். சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன்.

    இந்த நிலையில் சிவபெருமானிடம் முறையிட்டு, தாரையை தன்னுடன் அழைத்துச் சென்றார் பிரகஸ்பதி. புதனை சந்திரனே வளர்த்து வந்தான். புதன் பெரியவனாக வளர்ந்ததும், தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனைப் பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையரைப் பிரிந்திருந்த புதன், இந்த தலத்திற்கு வந்து தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்தியநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், உரிய காலத்தில் கிரகப் பதவி கிடைக்கும் என்று அருள்புரிந்தார். இந்த புத பகவான், மூலவரின் வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

    ஞானகாரகன் என்று அழைக்கப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். புதன்கிழமைகளில், இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், பேச்சுத் திறமை, மொழியில் புலமை ஏற்படுவதுடன், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தில் தல விருட்சமாக காரைச்செடி உள்ளது. தல தீர்த்தம், இந்திர தீர்த்தம், சத்தியவிரத தீர்த்தம் ஆகியவை ஆகும்.

    மூலவர் அருகில் அம்பாள் :

    காஞ்சீபுரம் முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால், எந்த ஆலயங்களிலும் அம்பாளைப் பார்ப்பது அரிதானதாகும். ஆனால் இந்த ஆலயத்தில் மூலவரின் கருவறையிலேயே அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவர் கருவறையில் சுவாமிக்கு அருகில் தெற்கு பார்த்தபடி உற்சவர் வடிவில் அம்பாள் இருக்கிறார். உற்சவராக இருந்தாலும், மூலவருக்கு உரிய பூஜைகள் அனைத்தும், இந்த அம்மனுக்கும் செய்யப்படுகிறது. ஆனாலும் விழாக்காலங்களில் அம்மனை வெளியே கொண்டுவருவதில்லை. சுவாமி மட்டுமே திருவீதி உலா வருவார்.

    இந்த ஆலயத்தில் மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
    சோழ தேசத்தின் காவிரி வடகரை சிவாலயங்கள் 63–ல், 19–வது திருத்தலமாக திகழ்கிறது திருநின்றியூரில் உள்ள லட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்.
    தேவர்களும், ஏனைய தெய்வங்களும் நித்தமும் தொழும் நிகரற்ற இறைவன் வீற்றிருக்கும் பதி இது. உலக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தும், ராஜபோகங்களையும் அள்ளித்தரும் அருள்மிகு பதியாகவும் விளங்கும் புண்ணிய பூமி இது. இங்குள்ள இறைவனை செல்வத்தின் அதிபதியாகிய “திரு” என்ற மகாலட்சுமி பூஜித்து வழிபட்டுள்ளார்.

    ஆதியில் திருமாலின் திருமார்பில் நீங்காமல் இருக்கும் வரம் வேண்டி, அலைமகள் லட்சுமி தேவி இங்குள்ள ஈசனை வழிபட்டு வரம் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் செல்வத்திற்கும், தம்பதி ஒற்றுமைக்கும் குறைவிருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயைக் கொண்டு இத்தல இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்பது பரசுராமரின் எண்ணமாக இருந்தது. எனவே அவர் 300 வேதியர்களோடு இங்கு வந்து தங்கினார். மேலும் 360 வேலி நிலத்தை நீர்வார்த்து வளர்த்து அதில் வரும் விளைச்சல் வருவாயைக் கொண்டு, இந்தத் தல ஈசனுக்கு வழிபாடுகளை செய்து வந்தார். இதையடுத்து பரசுராமருக்கு, இத்தல இறைவன் திருவடிப்பேறு வழங்கி அருளினார் என்றும் தல புராணம் எடுத்துரைக்கிறது.

    இது தவிர பசு ஒன்று தனது மடிப்பாலை பொழிந்து இத்தல பெருமானை வழிபட்டு, அவர் திருவடி புகுந்துள்ளது. இந்திரன் இந்த இறைவனை வணங்கி வழிபட்ட பின்பே, இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்தணர்கள் மிகுந்திருந்த இந்த நின்றியூர் ஈசனை சித்தர்களும், தேவர்கள் பலரும் வணங்கி பேறு பெற்றுள்ளனர்.

    காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், அகத்திய மாமுனிவர், இந்த பரமனை பூஜித்து, பொதிகை மலையில் வாழும் பேறு பெற்றார். திருமால், பிரம்மதேவர் ஆகியோர் சில மந்திரங்களால் இத்தல இறைவனை வாழ்த்தி பல வரங்களைப் பெற்றுள்ளனர். இவை அனைத்துக்கும் சான்றாக விளங்குவது சுந்தரரின் தேவாரப்பாடல்கள் ஆகும்.

    இத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தலா ஒரு பதிகமும், சுந்தரர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். வள்ளல் ராமலிங்கரும், பட்டினத்தாரும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். பெரியபுராணத்தில் இத்தலம் பற்றி சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

    தல வரலாறு

    ஒரு சமயம் பிரம்மஹத்தி தோஷத்தால் கோச்செங்கட்சோழன் என்னும் மன்னனுக்கு சித்த பிரமை ஏற்பட்டது. அதற்கு பரிகாரம் செய்வதற்காக அந்த மன்னன், தினமும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு அரண்மனைத் திரும்புவான்.

    அப்போது திருநின்றியூர் காடாக இருந்தது. காட்டுப்பகுதியான அந்த இடத்திற்கு அருகே வரும்போது, மன்னன் முன்பாக அரண்மனைக் காவலர்கள் பிடித்திருக்கும் தீவட்டி அணைந்து போவது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இதனை கவனித்து வந்த மன்னன், அந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தான்.

    ஒரு நாள் பகல் வேளையில் அந்த வழியாக மன்னன் வந்தான். அப்போதும் தீவட்டிகள் அணைந்து போயின. மேலும் அந்த அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பசு ஒன்று வானத்தில் இருந்து இறங்கியதையும், சிறிது நேரம் கழித்து அந்தப் பசு மீண்டும் வானத்தை நோக்கி பறந்ததையும் கவனித்தான். இதையடுத்து காட்டுப்பகுதியை சுத்தப்படுத்த காவலர்களுக்கு, மன்னன் உத்தரவிட்டான். அதற்கானப் பணியை காவலர்கள் தொடங்கினார்கள். அப்போது ஒரு காவலாளி, பாறையில் கடப்பாறையால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது.

    அந்த இடத்தை மன்னன் உற்று நோக்கினான். அங்கு ஒரு சுயம்பு லிங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லிங்கத்தின் மீது ஆலயம் (மாடக்கோவில்) எழுப்பி, தினமும் வழிபாடு செய்து வந்தான். இதன் விளைவாக கோச்செங்கட்சோழனின் சித்த பிரமை முற்றிலும் நீங்கி நிவாரணம் கிட்டியது.

    ஆலய அமைப்பு

    ஊரின் உள்ளே நாலாபுறமும் மதில்கள் சூழ, ஆலயம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. பழைய மாடக்கோவில் முற்றிலும் சிதைந்ததால், நாட்டுக்கோட்டை நகரத்தாரால் ஆலயம் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், அதன் உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. சிலபடிகள் ஏறிச்சென்றால், மகா மண்டபம் காணப்படுகிறது. அதன் வலது புறம் அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் உலகநாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். லோகாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.

    கருவறையில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் லட்சுமிபுரீஸ்வரர். மகாலட்சுமீஸ்வரர் என்றும் இறைவனை அழைக்கிறார்கள். லட்சுமி தேவி வழிபட்டு பேறு பெற்றதால் இந்தப் பெயர் வந்துள்ளது. கடப்பாறை பட்டத்தில் ஏற்பட்ட காயத்தை இன்றும், பாணத்தின் சிரசில் காண முடியும்.

    இறைவனையும், இறைவியையும் வழிபட்ட பின்னர் ஆலயம் வலம் வந்தால், தேவ கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்களை தரிசிக்கலாம். மேற்கு திருமாளிகை பத்தியில் ஜமதக்னீஸ்வரர், பரசுராமேஸ்வரர், சுப்பிரமணியர், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோரது சிலை உருவங்கள் உள்ளன. மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு ஆலயத்தில் உள்ளனர். ஆலய தென்மேற்கு மூலையில் கணபதி சன்னிதியும், வடமேற்கு மூலையில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமையப்பெற்றுள்ளது. தல விருட்சமாக விளாமரமும், தல தீர்த்தமாக நீலமலர் பொய்கையும் விளங்குகின்றன.

    அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த ஆலயம் இதுவாகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. செல்வச் செழிப்பு உண்டாக இங்குள்ள இறைவனுக்கு லட்சுமி ஹோமம் செய்தால் நன்மைகள் நடைபெறும். ஹோமத்தில் தாமரை இதழில் தேன் ஊற்றி, யாக குண்டத்திற்குள் இட வேண்டும். மேலும் குழந்தைப்பேறு இல்லாதவர்களும், இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேறப் பெறுகின்றனர்.

    திருநின்றியூர் இறைவனை வழிபட்டால், அச்சம், பாவம், கேடு, நோய் யாவும் நீங்கும் என்பது சம்பந்தர் வாக்காகும். இத்தலம் பற்றிய அன்பர்களை வினைகளும், பாவங்களும் அண்டாது என்பது திருநாவுக்கரசரின் திருவாய்மொழியாகும். தினமும் 2 கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநின்றியூர் திருத்தலம்.
    கோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாசாணியம்மன்.

    கோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபேறாகியும் விட்டது. எனினும் இது ஆதிபராசக்தியின் கோயில் தான் என்பதும் பரவலாகவே அறியப்பட்டு உள்ளது.

    அம்மன் திருக்கோலம் :

    பதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது.

    வரலாற்றுச் சிறப்பு :

    இந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனைமலையில் மயான பூமியில் மகாசக்தி தோன்றி ராமபிரானுக்கு அருள் வழங்கியிருக்கிறாள். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக வழிவழியாகக் கூறப்பட்டு வரும் வாய்மொழிக்கதையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகின்றது.

    மயான ருத்திரி :

    உப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார். ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள். இப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசனியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள்.

    குறுநில மன்னனின் கூற்று :

    நன்னன் எனும் குறுநில மன்னன் கொங்குச் சீமையின் இந்தப் பகுதியை ஆண்டு வந்த போது அவருக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு மரத்தின் மாங்கனியானது கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம், அதை கரையில் இருந்த பென் ஒருத்தி எடுத்துத் தின்ன முற்பட்டபோது அந்த குறுநில மன்னன் அவளை வாளால் வெட்டித் தண்டித்து விட்டான்.

    தவறெதுவும் செய்யாத பெண்ணை அவன் இப்படித் தண்டித்தது தவறு என்று உரியவர்கள் எடுத்துக் கூறினராம் எனினும் இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை அமைதியடையாத அவள் உள்ளம் மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசானியம்மனாக உருவெடுத்தாக ஒரு பழங்கதையும் கூறப்படுகிறது.

    துக்க நிவாரணி :

    இங்கே வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.

    மிளகாய் பூசும் நீதிக் கல் :

    அம்மனின் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது.

    பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து மேற்குறித்த இடத்தில் உள்ள லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

    இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.

    அமைவிடம் :

    பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
    முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தணியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு; முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று.

    அமைவிடம் :

    அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம்.

    திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

    ஆலய வரலாறு :

    தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

    ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

    இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. "சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

    இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    வள்ளி திருமணம் :

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

    வழிபடும் முறைகள் :


    திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.
    மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும்.

    மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.
    தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.
    தமிழகத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் கோவில்களை பார்க்கலாம்.
    இரண்யகசிபுவை அழிப்பதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அகோபிலம் ஆகும். அந்த நரசிம்ம மூர்த்தி தமிழகத்திலும் 8 தலங்களில் தன் பக்தர்களுக்குக் காட்சி தரு கிறார். இவை‘அஷ்ட நரசிம்மர்’ தலங்களாக போற்றப்படுகின்றன.

    பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல், அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில் முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர் தலங்களில் நடுநாயகமாகமானதுமாக உள்ளது பூவரசங்குப்பம். இதன் கிழக்கில் சிங்கிரிக்குடியும், மேற்கில் பரிக்கல் மற்றும் அந்திலியும், வடக்கில் சோளிங்கர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவிலும், தெற்கில் நாமக்கல் மற்றும் சிந்தலவாடியும் உள்ளன.

    பூவரசங்குப்பம் :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.

    தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    சிங்கிரிக்குடி :

    பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

    இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

    கடலூர்–புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.

    பரிக்கல் :

    இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

    யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

    சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

    சோளிங்கர் :

    சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

    விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்– சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

    சிங்கப்பெருமாள் கோவில் :

    ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் :


    திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

    கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

    அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    சிந்தலவாடி :

    ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

    திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    அந்திலி :


    நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.

    எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

    திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலி திருத்தலம்.
    இந்தத் தலத்தில் 2½ அடி உயரத்தில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
    இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் உறையங் குமரவேளே’ என கச்சியப்பரும், குமரன் எழுந்தருளியுள்ள இடங்களை புகழ்கின்றனர். இதன்படி பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் பொய்யா பெருநதிக்ரையில் அமைந்த திருத்தலம் திருவுருமாமலை எனும் குறுக்குத்துறையாகும்.

    இந்தப் பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் தெய்வ திருவுருவை வடிப்பது மரபு. எனவே இத்திருத்தலம் திருவுருமாமலை எனப்பட்டது. உலக உயிர்கள், இறைவனின் அருளை எளிதில் பெற, முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதால் ‘குறுக்குத்துறை’ எனவும், திருநெல்வேலி நகரில் இருந்து ஆற்றுக்கு செல்ல, குறுக்கு வழியாக உள்ளதால் ‘குறுக்குத்துறை’ என்றும் ஊரின் பெயருக்கு இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    வெகு காலத்திற்கு முன்பு இங்குள்ள கருவறை, ஒரு கற்பாறையாக இருந்துள்ளது. இந்தப் பாறையில் ஒரு சிற்பி, தனது உள்ளத்தில் நெடுநாளாக தீட்டி வைத்திருந்த முருகப்பெருமானின் திருவுருவை வடித்திட நினைத்தார். அவரது எண்ணப்படியே தன் முயற்சியால் முருகனின் உருவத்தை அந்தப் பாறையில் உருவாக்கினார். இது புடைப்பு சிற்பமாகும். அழகிய இத்திருவுருவம் வெயிலிலும், மழையிலும் கவனிப்பார் இன்றி கிடந்தது.

    ஒரு சமயம் அந்த வழியாக வந்து ஒரு மூதாட்டி, இந்தத் திருவுருவைக் கண்டார். முருகனின் திருவுருவை கண்டதும் உளம் மகிழ்ந்த அந்த மூதாட்டி, முருகன் திருவுருவுக்கு ஆட்பட்டு அங்கேயே தங்கியிருந்து இறை பணி செய்யத் தொடங்கினார்.

    தினமும் முருகன் திருவுருவை நீராட்டி, மலரிட்டு வழிபட்டு வந்தார். அவரை தொடர்ந்து பலரும் வழிபடத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகியது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு நிழலிடம் அமைக்கப்பட்டது. வழிபாடு தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்றது.

    பின்னர் இத்திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீன ஆளுகைக்கு வந்தது. இந்த ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று இன்று இக்கோவில் சீரோடும், சிறப்போடும் விளங்குகிறது.

    ஆலய அமைப்பு :

    திருநெல்வேலி நகரில் இருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. ஊரின் நடுவில் நான்கு வீதிகள் உள்ளன. இதுவே ஆலயத்தின் தேரோடும் வீதியாகும். மேல ரதவீதியும், வடக்கு ரதவீதியும் சந்திக்கும் பகுதியில் கோவில் அமைந்திருக்கிறது.

    கோவிலின் முகப்பில் ராஜகோபுரம் சிறிய வடிவில் எழிலுடன் விளங்குகிறது. அதன் வழியே கோவிலுக்குள் நுழைந்தால் மணி மண்டபம் உள்ளது. இங்கு பலிபீடம், மயில் கொடி மரம், அலங்கார மண்டபம் உள்ளது.

    இந்த மண்டபத்தை தாண்டி உள்ளே நுழையும்போது தென்புறம் விநாயகரும், வட புறம் முருகனும் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். அந்த மண்டபத்தின் நடுவில் மயிலும், நந்தியும், தென்புறம் விநாயகரும், வாயிற் காப்போனும் உள்ளனர்.

    கருவறை வாசலில் இருபுறமும் வாயிற்காவலர்களும், வடபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், ஐம்பொன் வடிவில் நடராசர், சமய குரவர்கள் நால்வர், விநாயகர், படைத்தேவர் முதலிய திருமேனிகள் உள்ளது. தென்புறம் உள்ள அறையில் முருகனின் உலாத்திருமேனி உள்ளது. இதற்கு அடுத்து இடைநாழி. அதற்கு அடுத்து கருவறை அமைந்து உள்ளது.

    திருச்செந்தூர் போல :

    இந்தத் தலத்தில் 2½ அடி உயரத்தில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் திருச்செந்தூர் கருவறை மூர்த்தம் போலவே, வலது மேல் கரத்தில் வச்சிராயுதமும், வலது கீழ்க்கரத்தில் மலர் எடுத்தும், இடது மேற்கரத்தில் அக்க மலையும், இடது கீழ்க்கரத்தை இடது தொடையில் வைத்த நிலையிலும் உள்ளார். மேலும் முருகப்பெருமானின் இடது பக்கம் சிவலிங்க திருமேனி உள்ளது. இந்த கருவறை மூர்த்தி சிவபூஜை செய்யும் நிலையில் உள்ளது.

    அதன்பின்னர் வெளியே கருவறை திருச்சுற்று உள்ளது. இங்கு தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தியும், தென்மேற்கு முனையில் விநாயகரும், வடமேற்கில் முருகனும், பைரவரும் உள்ளனர். வடக்கு சுற்றில் சண்டீசரும், அவருக்கு பின்புறம் வடக்கு சுற்றின் மேல்புறம் சுவரில் பஞ்சலிங்கம் தேவியாருடன் உள்ளார்கள். இப்பகுதி ஒரு பெரும்பாறையாக காட்சி தருகிறது. இப்பகுதியில் பாறைகள் உள்ளமைக்கு சான்றாக இது அமைந்துள்ளது.

    இதனை கடந்து வந்தால் மீண்டும் மகா மண்டபத்தை அடையலாம். இங்கு தென்முகமமாக எழிலுடன் ஐம்பொன் படிமமாக ஆறுமுகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். அவரை வணங்கி வெளியே வந்தால் மணி மண்டபம். இங்குள்ள தெற்கு வாசல் வழியாக கோவிலின் வெளியே உள்ள திருச்சுற்றுக்கு வரலாம். தெற்கு சுற்றில் வாசலுக்கு எதிரில் தீர்த்த மண்டபம் உள்ளது. இது தவிர இங்கு கல்மண்டபம் பல உள்ளது.

    செவ்வாய் தோஷம் நீக்கும் முருகன் :

    இந்த ஆலயத்தின் அருகில் காணப்படும் கற்பாறைகளில் இருந்து இறைவனின் உருவங்கள் உருவாக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படியே திருச்செந்தூர் கருவறை இறைவனின் திருமேனி இங்குள்ள கல்லில் வடிக்கப்பட்டது. எனவே திருச்செந்தூருக்கு செலுத்தும் காணிக்கைகளை இந்தத் திருத்தலத்தில் செலுத்தலாம் என்பது ஐதீகம்.

    தினமும் நண்பகல் உச்சி காலத்தில் திருக்குட பூஜையும், இரவு பள்ளியறை வழிபாடும் நடக்கிறது. செவ்வாய் தோஷம் உடையவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றில் நீராடி, முருகப்பெருமானை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி 11 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கி திருமண வாழ்க்கை கூடும் என்பது ஐதீகம்.

    திருவிழாக்கள் :

    இந்தத் தலத்தில் தினமும் விசுவரூபம், உச்சிக்காலம், உதயமார்த்தாண்டம், சாயரட்சை, சித்தக்கட்டளை, அர்த்தசாமம், சிறுகாலசந்தி, ஏகாந்தம், காலசந்தி எனும் 9 கால வழிபாடு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொடியேற்றி 11 நாள் தேரோட்ட திருவிழா நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவும் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும்.

    ஆண்டுதோறும் வைகாசி விசாக தினத்தன்று இந்தக் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள மூலவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தங்க அங்கி அணிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்காலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெறும்.

    இதேபோல் இந்தக் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.
    துர்க்கையை வழிபட்டு வந்தால் செவ்வாயின் அருள் பெறலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.

    மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார்.

    அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார். அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார்.

    அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார்.

    அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார். செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.

    அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.

    கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
    இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.
    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது.
    சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள்.
    அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி.
    தலவிருட்சம் : மகாலிங்கமரம்.

    தலச்சிறப்பு :

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை. இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.

    தல வரலாறு :

    250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே, வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை.

    மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "கவலைப்படாதே பக்தா!, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார்.

    காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, கன்றுடன் பசு நின்றிருந்தது, அதே இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர்.

    பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த நீ! பொய்ப்பொருளான, உன் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாய், என்னே உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள்.

    அதே கம்பம் தான் நீ பார்த்தாய், தொடர்ந்து கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான் என்பதை அறிந்துகொள்.

    கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் "கலியுக பெருமாள்” எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தான் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.

    நடைதிறப்பு :

    காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை,
    மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

    கோயில் முகவரி :

    அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
    கல்லங்குறிச்சி - 621 705,
    அரியலூர் மாவட்டம்.

    செல்லும் வழி :

    அரியலூரில் இருந்து கலியபெருமாள் கோவிலுக்கு  நேரடி மினி பேருந்துகள் செல்கின்றன. அரியலூர் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 
    சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களில் திருவதிகைத் திருத்தலமும் ஒன்று.
    திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில், புகழனார்–மாதினியார் என்ற தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் மருள்நீக்கியார். திருநாவுக்கரசரின் இயற்பெயர் இதுதான். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த, மருள்நீக்கியார், தனது அக்காள் திலகவதியின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து வந்தார். திலகவதி அம்மையார், சைவ சமயத்தின் மீது அதீத பற்றுகொண்ட மிகச்சிறந்த சிவ பக்தை ஆவார்.

    ஒரு சமயம் மருள் நீக்கியார் சமண சமயத்தில் சேர்ந்து தொண்டாற்றத் தொடங்கினார். அங்கு அவரது பெயர் தருமசேனர் என்று மாறிப்போனது. இந்த நிலையில் மருள்நீக்கியாருக்கு, தீராத வயிற்று வலி (சூலைநோய்) தோன்றியது. பல மருந்துகளை உட்கொண்டும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனது அக்காள் திலகவதியிடமே திரும்பி வந்தார்.

    அப்போது திருவதிகையில் வீற்றிருக்கும் வீரட்டானேஸ்வரருக்கு, தொண்டு செய்து கொண்டிருந்தார் திலகவதி. அவர் தனது தம்பியின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தார். உடனடியாக தம்பியை திருவதிகை ஆலயம் அழைத்துச் சென்று, சிவபெருமானின் திருநீற்றுச் சின்னத்தைத் தரிக்கும்படி செய்தார். அப்போது சிவபெருமானின் மீது பக்தி பெருக்கெடுத்த மருள்நீக்கியார், வயிற்று வலியால் துவண்ட போதிலும், திருவதிகை ஈசனை நினைத்து மனமுருக பதிகம் பாடினார்.

    ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடியார்க் கேஇரவும் பகலம் பிரியாது வணங்குவேன் எப்போழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே’

    என முதல் பதிகம் தொடங்கி, தனது வயிற்று வலியைப் போக்கும்படி 10 பதிகங்களை கண்ணீர் மல்கப் பாடினார்.

    இதையடுத்து சிவபெருமானின் பெரும் கருணையால், மருள்நீக்கியாரின் சூலை நோய் என்னும் வயிற்று வலி தீர்ந்தது. இதையடுத்து அவர் சிவன் பக்தராக மாறினார். சிவபெருமானாலேயே, ‘திருநாவுக்கரசர்’ என்று பெயர் சூட்டப்பட்டார்.

    இந்தத் திருவதிகைத் திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

    தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள், பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றனர். அந்த வரங்களைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன் புறுத்தி வந்தனர். அவர்களால் துன்புற்றவர்கள் அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். இதையடுத்து பூமியைத் தேராகவும், சூரிய– சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களையும் குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும், மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் வரச் செய்தார்.

    மேலும் மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். தேரில் வந்த அனைத்து தேவர்களும், தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று ஆணவத்துடன் நினைத்துக் கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில், அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. மாறாக, அசுரர்களைப் பார்த்து சற்றே சிரித்தார். அவரது சிரிப்பில் அசுரர்கள் மூவரும் எரிந்து சாம்பலானார்கள்.

    அழகிய ராஜ கோபுரமும், மண்டபங்களும் கொண்ட இந்தத் திருத்தலத்தில் சிவபெருமான், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர் என்பதாகும். இவர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். மூலவருக்கு பின்புறத்தில் சுதையால் செய்யப்பட்ட சிவ–சக்தி திருகல்யாணக் காட்சி காணப்படுகிறது.

    திருநாவுக்கரசருக்கு இறைவன் திருமணக் கோலத்தை காட்டி அருளிய தலம் இது என்று கூறப்படுகிறது. மூலவரின் கருவறை விமானம் முழுவதும் தேர் போல அமைந்திருக்கிறது. இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்ததை விளக்கும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட தாக கூறப்படுகிறது.

    சுவாமியின் வலது புறம் தனிச்சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘திரிபுரசுந்தரி’ என்பதாகும். அம்பிகை சன்னிதி அருகே தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, திருநாவுக்கரசர் மட்டுமின்றி, திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் தேவாரப் பாடல்களால் போற்றியுள்ளனர்.

    வீரட்டானத் தலங்களிலேயே அதிக பதிகங்களைக் கொண்ட திருத்தலம் இதுவாகும். திருஞான சம்பந்தருக்கு, இங்கு இறைவன் திருநடனக் காட்சியை காட்டியருளியிருக்கிறார். திருநாவுக்கரசருக்கு, திருமணக்கோலம் காட்டியதால், இந்த ஆலயத்தில் திருமண பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    பிரகாரத்தின் தென்பகுதியில் மஞ்சள் நிறப் பூக்களுடன், சரகொன்றை மரம் தல விருட்சமாக இருக்கிறது. அதன் அருகே திருநாவுக்கரசருக்கும், திருக்கோவிலில் தொண்டு செய்த அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் வடக்கு நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விநாயகர், அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகப்பெருமான், நடராஜர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, கல்யாண சுந்தரர், ஏகபாதர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    பிற கோவில்களைக் காட்டிலும், இந்த ஆலயத்தில் தல மரங்களின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அற்புத கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தை அடுத்த வடபுறத்தில் ஒன்பது நவக்கிரகங்களும், அவற்றுக்கு என்னென்ன விருப்ப விருட்சங்கள் என்பதும் கட்டம் கட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரிசையாக 27 நட்சத்திரத்துக்குரிய தாவரங்களும், மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டு பக்தர்களை பசுமை வளாகத்துக்குள் அழைத்துச் செல்கின்றன.

    இத்தல இறைவனை வழிபட்டால், நாள்பட்ட வயிற்று வலியால் துன்பப்படுபவர்களின் பிணி நீங்கும் என்பது ஐதீகம். நோய் உள்ளவர்கள் மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து, அபிஷேக பாலை பருகுவதுடன், அவர் திருமேனி தழுவிய திருநீற்றை நெற்றியிலும், வயிற்றிலும் பூசிக்கொண்டு, தனது வாய்க்குள்ளும் போட்டுக் கொண்டு, அப்பர் பெருமான் பாடியருளிய தேவாரப்பாடல் பதிகத்தை பாடினால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், எதிரிகளின் தொல்லை உள்ளவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெறு கிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறக்கப்பட்டிருக்கும்.

    திருவிழாக்கள்  :

    பங்குனி மாதத்தில் இந்த ஆலயத்தில் 10 நாள் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் 10 நாட்கள் அப்பர் மோட்சம், திருக்கயிலாய காட்சி போன்றவை நடக்கிறது. வைகாசியில் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு விசேஷமானதாகும்.

    இது தவிர ஆடிப்பூரம், மாணிக்கவாசகர் உற்சவம், மார்கழி மாத நிகழ்வு, நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, கார்த்திகை தீப உற்சவம், சோமவாரம், பங்குனி உத்திரம் போன்ற உற்சவங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவதிகை திருத்தலம்.
    ×