என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கோவை மாவட்டத்தில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் வரலாற்றை பற்றி பார்க்கலாம்.
    கோவில் வரலாறு:

    கொங்கு மண்டலம் மைசூர் அரசருடைய நேரடி நிர்வாகத்திலும், அவர்களது அரசு பிரதிநிதிகளின் நிர்வாகத்திலும் இருந்தது. அதன் பின்னர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. இந்த கால கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு ஆடை நெய்து அளிப்பதற்காக நெசவாளர் குடும்பங்களை தலைநகரையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் குடியமர்த்தினர்.

    கொங்கு மண்டலம் நிர்வாக வசதிக்காக 24 நாடுகளாக பிரிக்கப்பட்டது. கோவை நகரம் மற்றும் அவ்வூரைச்சுற்றியுள்ள கொங்கு மண்டலத்தின் ’ஆறை நாடு’ என்னும் பகுதியில் 415 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தேவாங்கர்கள் தங்கள் குல தெய்வமான ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட விரும்பி ஊரின் நடுவே ராஜ வீதியில் சிறிய அளவில் கோவில் கட்டினர். விநாயகர் ராமலிங்கேஸ்வரர், சவுடாம்பிகை அம்மன் ஆகிய மூல விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

    அதன் பின்னர் சிறிய சவுடாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்தியை ஐம்பொன்னில் வார்த்து உற்சவங்களும் நடத்தி வந்தனர். கடந்த நூற்றாண்டின் மத்தியில் தற்போதுள்ள ’சபா மண்டபம்’ பிரகாரங்கள், பரிவார மூர்த்தங்கள், திருமதில் மற்றும் அறுபத்து மூவர் சந்நிதிகளை அமைத்து ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டினர்.

    கோவிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள 8 தூண்களில் பல அர்த்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் தர்த்தன வினாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேதர சுப்பிரமணியர், மகாவிஷ்ணுவின் தசாவதாரத் திருவுருவங்கள் மகிஷாசுர மர்த்தினி, திருமூர்த்தி (தத்தாத்ரேயர்) நாகபந்தனத்தோடு கூடிய சிவலிங்கம், காமதேனு, கற்பகவிருஷம் ஆகியவை வேறெங்கும் காணக்கிடைக்காத அபூர்வ சிற்பங்களாகும்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் திருப்பணி செய்து சனீஸ்வரர் ஸ்ரீசப்தமாதாக்கள், ஸ்ரீகாயத்திரி தேவி அஷ்டலட்சுமிகள் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனி சன்னதிகள் நிர்மானிக்கப்பட்டது.

    ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கொடிமரம் முன் வாசலில் துவார பாலகர்கள் உள்ள மண்டபத்தின் மேற்கூரையில் கல்லினால் செதுக்கப்பட்ட சூரிய, சந்திர கிரகணங்கள் உள்ளதால் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்யும் பரிகாரஸ்தலமாக போற்றப்படுகிறது.

    விழாக்கள் :

    கோவிலில் நித்தியப்படி 4 கால பூஜைகளும், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம், வருடப்பிறப்பு நால்வர் குரு பூஜை ஆகியவை அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி, அம்மன் ஊஞ்சல் உற்சவமும் ஆவணி அவிட்டம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி கேதார கவுரி நோன்பு, ஐப்பசி பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகிய உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ஆண்டுக்கொரு முறை நவசண்டிகா ஹோமம், வருஷோற்சவம் திருக்கல்யாணம் திருவிளக்கு வழிபாடு ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. விசேஷமாக நவராத்திரி ஒன்பது நாட்களும் சுவாமி, அம்மன் நாளரு அலங்காரமாக கொலு வைத்து, பத்தாம் நாள் விஜயதசமியன்று அம்மனின் அம்சமாக விளங்கும் ’பாகு’ எனப்படும் உடைவாளை திருமஞ்சனக் குடத்தில் வைத்து அதை குல மக்களின் சிரசு மீது வைத்து குல மக்கள் நீளமான கத்திகளை கைகளில் ஏந்தி தம் மார்பின் மீதும் தோள்களின் மீதும் சாற்றிக்கொண்டு உடலில் இருந்து வெளிப்படும் ரத்தத்தையே அன்னைக்கு அர்ப்பணித்து பக்தி சிரத்தையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வருவர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நீராட்டி மாலையில் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் அசுரனை சம்ஹாரம் செய்யும் ஐதீகப்படி வாழை மரத்தை வெட்டி, பின்னர் கோவிலுக்கு திரும்புவர். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் கோவில் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
    திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்
    திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும்.

    தல வரலாறு :

    பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப்பேறடைந்தான் என்பது வரலாறு.

    சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

    தல சிறப்புக்கள் :

    * அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

    * "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.

    * பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

    * சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.

    * சப்த(ஏழு)ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

    * நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

    * மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

    * பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.

    * இத்தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது. பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

    * கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

    திருவையாறு சப்தஸ்தானம் :

    திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம்.

    சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும் அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறுநாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அமைவிடம் :

    தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை அங்காளபரமேஸ்வரி விளங்குகிறாள்.

    மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.

    பிரம்மஹத்தி தோஷம் :

    ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி அன்று சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம். இதற்கு ஒருபுராணக்கதை உண்டு.

    சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போல், தனக்கும் 5–வது தலை வேண்டும் என்று நினைத்தார் பிரம்மதேவர். ஆகவே சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வரம் கேட்டு பெற்றுக்கொண்டார். இதனால் பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்தது.

    ஒருநாள் பிரம்மா கர்வத்துடன் கயிலாயத்துக்கு சென்றார். பிரம்மதேவனை கண்ட பார்வதி, சிவபெருமான் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி பூஜை பொருட்களை சமர்ப்பித்தார். பின்னர் பிரம்மாவின் முகத்தை பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட பார்வதி ஆத்திரம் அடைந்தாள். பிரம்மாவை நோக்கி உன் ஒரு தலை அழியக்கடவது என்று சாபம் இட்டார். மேலும் நடந்ததை சிவனிடமும் கூறினார் பார்வதி. பரமசிவன் தன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். ஆனால் வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைத்தது. சிவன் தலையை வெட்டுவதும் அந்த இடத்தில் புதிய தலை முளைப்பதுமாக இருந்தது.

    இந்த புதிரை சிவபெருமானால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் வெட்டப்பட்டு கீழே கிடந்த பிரம்மாவின் தலைகளை ஒரு கயிற்றில் கோர்த்துக்கட்டி அதை தன் கழுத்தில் மாலையாக சிவன் அணிந்து கொண்டார். (இந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் வகையில் தான் சைவ பக்தர்கள் உத்திராட்ச மாலையை அணிகிறார்கள்).

    அதன்பிறகு பிரம்மனின் தலையை வெட்டி அதை கீழே போடாமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். இப்போது பிரம்மனின் தலை வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைப்பது நின்றுவிட்டது.

    ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. சித்தம் கலங்கி பித்து பிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும், உடலெங்கும் சாம்பலை பூசி ஊர் ஊராக அலைந்து திரிந்தார்.

    உருவம் மாறிய பார்வதி :

    பிரம்மாவின் ஒரு தலை அழிந்துவிட காரணமாக இருந்த பார்வதியிடம் கோபத்தோடு வந்தாள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

    ‘பார்வதி! இனி நீ அழகுமிக்க ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக கொக்கு, சிறகு, மயில் தோகைகளை அணிந்து பூமியில் புற்றாக இருக்க வேண்டும்’ என்று சாபமிட்டாள்.

    அதன்படி பார்வதிதேவி உருவம் மாறி நாடு, நகரம் என அலைந்து திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் வந்து புற்றாக அமர்ந்தாள். இந்த சூழ்நிலையில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு வடகயிலாயம் நோக்கி சென்ற சிவன், மேல்மலையனூரில் அங்காளம்மன் 4 ஆயிரம் நோய்கள், பில்லி–சூனியம் ஆகியவற்றை தீர்த்து வைப்பதை அறிந்து மேல்மலையனூர் வந்தார்.

    அங்காளம்மன் கோவில் முன்வந்து ‘அரகரா! அன்னதான பிச்சை’ என்று உரக்க சத்தம் போட்டார். இந்த சத்தம் அங்காளம்மன் காதில் விழுந்தது. உடனே அவர் மனம் மகிழ்ந்தார். யாசகம் கேட்கும் கணவருக்கு எதை வழங்குவது என்று யோசித்தார். அப்போது சிவனுக்கு எதை வழங்குவது என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார்.

    ‘அம்பிகையே! உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அதை அவரது கையில் உள்ள கபாலம் சாப்பிட்டு விடும். ஆதலால் நீ உலகத்தில் உள்ள பயிர் பட்சணங்களை எல்லாம் வரவழைத்து உணவாக சமைக்க வேண்டும். பின்பு அதை 3 கவளமாக தயார் செய்ய வேண்டும். இரண்டு கவளத்தை உன் கணவர் கையில் உள்ள கபாலத்தில் போட வேண்டும். 3–வது கவளத்தை கபாலத்தில் போடுவதை போல் நடித்து அதை கைதவறி கீழே போடுவதை போல் தரையெங்கும் சிதறிவிட வேண்டும். சாதத்தின் ருசி அறிந்த கபாலம் அதை பொறுக்க பரமசிவன் கையில் இருந்து கீழே இறங்கும். அப்போது நீ பெரிய உருவெடுத்து அதை காலால் நசுக்கிவிடு. அந்த நேரத்தில் உன் கணவரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகி விடும்’ என்றார்.

    அன்னையும் மிக மகிழ்ந்து திருமால் கூறிய யோசனைப்படி செயல்பட்டார். சாதம் தயாரானது. உடனே அங்காளி, மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து விஷயத்தை சொல்லி, ‘உன் தந்தையை அக்னி குளத்தில் குளித்து வரச்சொல்’ என்று கூற, சிவனும் அதன்படி அக்னி குளத்தில் தீர்த்தமாடி கோவிலுக்கு வந்தார்.

    அவருக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து பணிவுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு கவள சாதங்களை எடுத்து வந்து ஒரு கவளத்தை சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் போட்டார். உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது. 2–வது கவளத்தையும் போட அதையும் கபாலம் சாப்பிட்டது.

    3–வது கவளத்தையும் உண்டு விட கபாலம் காத்திருக்க சாதத்தை தரை முழுவதும் வாரி இறைந்தாள் அங்காளம்மன். சாதத்தின் ருசிக்கு அடிமைப்பட்ட கபாலம், பரமசிவனின் கையில் இருந்து விருட்டென்று கீழே இறங்கி தரையில் சிதறிய அன்னத்தை பொறுக்கியது.

    ஆனந்த தாண்டவம் :

    அப்போது அங்காள பரமேஸ்வரி அகிலமே நடுங்கும் அளவு, மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று அகோரவடிவில் கபாலத்தின் மீது ஓங்கி மிதித்தார். கபாலம் பெரும் கூச்சல் போட்டு, ‘நீயார்? என்னை ஏன் மிதித்தாய்?’ என்று ஆக்ரோஷத்துடன் கேட்டது. அதைக்கேட்ட அன்னை, ‘கபாலமே! நீ இனி சிவனிடம் போக முடியாது. என் கீழ் தான் இருக்க வேண்டும். உனக்குதேவையானவற்றை என்னிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்’ என்றாள். அதற்கு கபாலமும் உடன்பட்டது.

    இந்த நேரத்தில் பரமசிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சுயநிலை வரப்பெற்ற பரமசிவன் ஆனந்த நிலை அடையப்பெற்றார். சிதம்பரம் சென்று ஆனந்ததாண்டவம் ஆடினார். அப்போதும் அங்காள பரமேஸ்வரியின் சினம் தணியவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும், 40 ஆயிரம் ரிஷிகளும் ஒன்று கூடி அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க தேர்த்திருவிழா நடத்தினர்.

    அங்காளபரமேஸ்வரி கோபம் தணிந்து சிறிய உருவாக மாறி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார். உருமி மேளம் முழங்க மங்கள நாதம் இசைக்க வாணவேடிக்கை ஜாலம் காட்ட பிரமாண்டமான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    ஊஞ்சல் உற்சவம் :

    சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரியன்று தான் என்பதால் இக்கோவிலில் மகாசிவராத்திரியை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது மயானக்கொள்ளை, தேரோட்டம் நடைபெறும். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறு, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து அக்கினி தீர்த்தத்தில் நீராடி அம்மனை வணங்கி நோய் நீங்கி அவர்கள் நலம் பெறுகின்றனர்.

    சூறை விடப்படும் தானியம்:

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் மாசி சிவராத்திரி திருவிழாவில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா புகழ்பெற்றது. அப்போது பயிர், பட்சணங்கள் வாரி இறைக்கப்படும். இதை பக்தர்களும், விவசாயிகளும் போட்டி போட்டு கொண்டு எடுக்கிறார்கள். இந்த பயிரை எடுக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்யும் போது இந்த பயிரையும் கலந்து விதைக்கிறார்கள். அப்படி செய்தால் அந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக அளவில் அவர்களுக்கு மகசூல் கிடைப்பதாக நம்புகிறார்கள்.

    வருடம் தோறும் புதிய தேர் :

    மேல்மலையனூர் தலப்புராணம் கதைப்படி சிவ பெருமானை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய அங்காளம்மன் கோபத்தை தணிப்பதற்காக தேர்த்திருவிழா நடத்த ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அந்த ரதத்துக்கு தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசனமேடையாகவும் மாறி நிற்பதாக ஐதீகம். தேரோட்டத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதிவலம் வருவார். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுவதாக நம்பிக்கை.

    இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்து விடுகிறார்கள். அடுத்தவருட தேரோட்டத்திற்கு புதிய தேர் செய்கிறார்கள். இந்த முறை இன்றும் இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அமைவிடம் :

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மேல்மலையனூர் அமைந்துள்ளது. செஞ்சியில் இருந்து வடதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 30 கி.மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் உள்ளது.
    மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, 4 யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.
    திருஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும் ஒரு தலத்தைப் பற்றி பதிகம் பாடியுள்ளனர் என்றால், அது அவர்கள் வாழ்ந்த காலமாகிய நூற்றாண்டுக்கு முன் பிருந்தே சிறப்புற்று விளங்கிக் கொண்டிருக்கும் தலம் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி ஒரு சிறப்பு மிக்க தலம்தான் கோவில்வெண்ணி கரும்பேசுவரர் திருக்கோவில்.

    வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று அழைக்கப்பட்ட ஊர், இன்று கோவில் வெண்ணி என்ற சிற்றூராக இருக்கிறது.

    கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ வளநாட்டை ஆண்ட மன்னன் கரிகால் பெருவளத்தான், 16 வயது இளைஞனாக இருந்தபோதே அரியணை ஏறினான். மேலும் சேர, பாண்டிய மன்னர்களோடு, 11 வேளிர்குல சிற்றரசர்களையும் வென்று பேரரசனாக முடி சூட்டிக்கொண்டான். அவன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம், ‘வெண்ணிப்பறந்தலை’ என்று இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில்வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.

    வெண்ணி கரும்பேசுவரர் :


    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊரில் ‘வெண்ணி கரும்பேசுவரர்’ என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார் சிவபெருமான். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ஆலயத்தைப் பற்றி திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மட்டுமின்றி, சுந்தரரும் கூட தம் ஷேத்திரக் கோவையில் ‘வெண்ணிக் கரும்பே’ என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.

    பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர். அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, ‘எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்’ என்று அருளினார். அன்று முதல் இத்தல இறைவன் கரும்பேசுவரர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    பெயருக்கு ஏற்றாற்போலவே, சுயம்பு உருவான இத்தல லிங்கத்திருமேனியின் பாணத்தில், கரும்பு கட்டாக இருப்பது போன்ற தோற்றத்தில் மேடு பள்ளமாக காட்சி தருவது பெரும் சிறப்பம்சமாகும்.

    இறைவனின் பெயர் கரும்பேசுவரர் சரி.. அது என்ன வெண்ணி...

    வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது இந்த மலர்.

    சுவாமியின் பெயரும், ஊரின் பெயரும் மலரின் பெயராலேயே ‘வெண்ணி’ என்று அமைந்திருப்பது, தாவரங்களுக்கும் தமிழர்கள் கொடுத்த தனித்துவமாகும்.

    விண்ணவர்கள் கூட தொழும் வெண்ணி கரும்பேசுவரர் கோவிலுக்கு, கோவில்வெண்ணி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தேசெல்லலாம். பசுமையான கரும்புக்காடும், நெல் வயல் களும் சூழ்ந்த வழியே செல்லும்போது, ஒரு மரத்தடியில் கரிகாலன் இங்கு நடந்த போரின் போது வழிபட்டதாகச் சொல்லப்படும் பிடாரி அம்மன் திருஉருவம் காணப்படுகிறது. அதற்கு ஒரு வீர வணக்கம் செலுத்தி சற்றுதூரம் சென்றால் தீர்த்தகுளம் உள்ளது.

    அதன் எதிரே மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் அருள்பாலிக்கிறார். அதே பெருமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் சவுந்தர நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தி காட்சி தருகிறார். இறைவன் சன்னிதிக்கும், இறைவி சன்னிதிக்கு இடையே நடராஜ சபை இருக்கிறது.

    இத்தல அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. கோவில் இருக்கும் ஊர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களில் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு முடிந்ததும், கொஞ்சம் வளையல்களை எடுத்து வந்து அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டி விட்டு, தமக்கு பிரசவம் எளிதாக நடக்க வேண்டும் என்று வேண்டிச் செல்கின்றனர். அதற்கு சான்றாக அங்கே ஏராளமான வளையல்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

    ஆலயத்தின் தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேசர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. மேலும் சோழர் கால கல்வெட்டுகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பாக ராஜராஜ சோழன், குலோத்துங்கச் சோழன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ஒரே ஒரு வெளி பிரகாரம் மட்டும் உள்ள இவ்வாலயத்தில் மேற்கு மண்டபத்தில் கன்னிமூலை கணபதி, வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் வடகிழக்கு மூலையில் பைரவர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். குடமுழுக்கு காண வேண்டிய நிலையில் இந்தத் திருக்கோவில் உள்ளது.

    சர்க்கரை நோய் :

    சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து, வெள்ளை சர்க்கரையும், ரவையும் கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர வேண்டும். அதனை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், போட்ட சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயும்நீங்கி விடும் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகமாக உள்ளது. பிறகு 18 அல்லது 24 அல்லது 48 முறை கோவிலை வலம் வந்து, வெண்ணி கரும்பேசுவரருக்கும் அழகிய நாயகி அம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, 4 யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. பங்குனி மாதத்தில் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள், சிவனின் திருமேனி மீது சூரியஒளி படர்ந்து சூரிய பூஜை நடத்துகிறது.

    இத்தலத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் வெகு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கோவில்வெண்ணி திருத்தலம். இந்த இடத்திற்கு தனி பஸ்நிலையமும், ரெயில் நிலையமும் இருக்கிறது.

    நீதிமன்ற வழக்கு பிரச்சனை இருக்கிறவங்க இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், சுந்தரபாண்டிய சாஸ்தாவை மனமுருகி வேண்டினால் புத்திர பாக்கியம் எளிதில் கிடைக்கும்
    ஸ்வாமி: அருள்மிகு சுந்தரபாண்டிய சாஸ்தா

    அம்பாள்: இல்லை. ஸ்வாமி தனியாகவே அருள்கிறார்.

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் செய்துங்கநல்லூர்.  இன்றைக்கு திரள் திரளாக தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் அல்லவை நீக்கி நல்லவை அருளும் நல்லூராக திகழ்கிறது இவ்வூர். அதற்குக் காரணம், இவ்வூரின் ஒரு பகுதியான ஐயனார்குளப்பட்டியில் அருளாட்சி நடத்தும் சுந்தரபாண்டிய சாஸ்தா!

    இவ்வூருக்கு மேற்கே இருந்த ‘சிவந்திபட்டி’ எனும் ஊரில் வசித்த பெண்ணொருத்தி, தினமும் செய்துங்கநல்லூர் பகுதிக்கு வந்து பாலும் மோரும் விற்பனை செய்வாள். ஒருநாள் அவள் இவ்வழியே வரும்போது கல் இடறி தடுமாற, தலைக்குமேல் வைத்திருந்த பாலும் மோரும் தரையில் சிந்தின. அன்று மட்டுமின்றி, ஒரு வார காலமாகத் தொடர்ந்தது இந்த நிகழ்வு. அதனால் பயந்துபோன மோர்க்காரி, ஒரு வாரத்துக்குப் பிறகு தன் மகனையும் வழித் துணையாக அழைத்து வந்தாள்.

    குறிப்பிட்ட இடம் வந்ததும் வழக்கம்போல் கல் இடறியது. உடனே அவளுடைய மகன், இரும்புத் தடியால் அந்தக் கல்லை இடித்துப் பெயர்க்க முயன்றான். ஆனால், அவன் கல்லின் மீது ஓர் அடி அடித்ததும், அதிலிருந்து ரத்தம் பீறிட்டு பொங்கியது. அவ்வளவுதான், தாயும் மகனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்கள். மெள்ள மெள்ள மயக்கம் நீங்கி அவர்கள் கண் விழித்தபோது, ஓர் அசரீரி ஒலித்தது.

    ‘நான்தான் சுந்தர பாண்டிய சாஸ்தா. மேற்கு தேசத்தில் என் தர்மபத்தினியான பூரணாவுக்குத் தெரியாமல் புஷ்கலையை காந்தர்வ விவாஹம் செய்துகொண்டேன். இதை பூரணாவிடம் தெரிவித்து அவளை சமாதானம் செய்யலாம் என்று பயணப்பட்டேன். ஆனால், இந்த விஷயத்தை முன்னதாகவே அறிந்து கொண்ட பூரணா என்னைச் சபித்ததால், கல்லாக மாறினேன்’’ என்ற அசரீரி தொடர்ந்து, ‘‘இந்த பகுதிக்கு அக்னி மூலையில் இருக்கும் ‘இரட்டை புளிக்காடு’ எனும் இடத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தொன்றுதொட்டு என்னை வழிபட்டு வருகிறது.

    அவர்களைக் கொண்டு கைங்கரியங்கள் செய்தால், எல்லோருக்கும் அனுகூலம் நல்குவேன்’’  என்றது. அசரீரி வாக்கைக் கேட்ட அம்மாவும் மகனும் சிறிதும் தாமதிக்காமல் சென்று, ஊர்ப் பெரியவர்களிடம் நடந்ததை விளக்கினார்கள்.உடனே, அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற ஊர்க்காரர்கள், கல்லாக இருந்து ரத்தம் பீறிட்ட ‘சுயம்பு சுந்தர பாண்டிய சாஸ்தாவை’ எடுத்து, கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அன்றிலிருந்து இன்று வரை, அம்மக்களின் காவல் தெய்வமாக அருள்புரிந்து வருகிறார் சுந்தரபாண்டிய சாஸ்தா.

    ஆழிப்பூதத் தேவர் :

    சபரிமலையில் இருப்பது போன்றே இத்தலத்திலும் துவார பாலகர்கள் கருவறைக் காவலர்களாக அருள்பாலிக்கிறார்கள். பெரும்பாலான தலங்களில் பூரணை-புஷ்கலா தேவியருடன் தம்பதி சமேதராகக் காட்சியளிக்கும் சாஸ்தா, இந்த ஊரில் அம்பாளின் சாபத்தின் காரணமாக, தனியே காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.

    இவருடைய காவல் பரிவார தெய்வமான ‘ஆழிப்பூதத்தேவர்’ விஸ்வரூப தரிசனத்தில் கோயில் எல்லையில் காட்சி தருகிறார். மேலும் தளவாய் மாடசாமி, மாடத்தி, கருத்தசாமி, கருத்த அம்பிகாசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி, இசக்கியம்மன், சுடலைமாடன், சுடலை மாடத்தி, பாதாளகரண்டி அம்பாள், பலவேஷக்கார சாமி, வன்னியசாமி, வன்னியச்சி, முண்டன்சாமி, சப்த கன்னியர் ஆகியோரையும் இங்கே தரிசிக்க முடிகிறது.

    இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வேம்புத்துரை என்ற பக்தர் நம்மிடம் பேசியபோது, “நீதிமன்ற வழக்கு பிரச்சனை இருக்கிறவங்க இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், சுந்தரபாண்டிய சாஸ்தாவை மனமுருகி வேண்டினால் புத்திர பாக்கியம் எளிதில் கிடைக்கும்” என்றார்.

    இன்னொரு பக்தரான சுடலைமுத்துவின் வேண்டுதல் சுவாரஸ்யமானது. “எங்கள் தோட்டத்தில் பிறக்கும் நாய்க்குட்டிகள் ஒருநாள்கூட உயிர் தங்காமல் இறந்துவிடும். மனம் நொந்து போனோம். சாஸ்தாவை வேண்டிக்கிட்டு, ஒரு நாய் சிலை செய்து எடுத்து வந்து கோயிலில் வைத்தோம்.

    அதற்குப் பிறகு நாய்க்குட்டிகள் உயிர்ச்சேதம் இல்லவே இல்லை. அதேமாதிரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யணும்னு சாஸ்தாவிடம் இருந்து உத்தரவு கிடைத்தது. என்னோட பொருளாதாரச் சூழலில் அது சாத்தியமான்னு தயங்கினேன். ஆனால் சாஸ்தாவின் அருளால், இப்போ எந்தக் குறையுமில்லாமல் தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறேன்’’ என பூரிப்புடன் பகிர்ந்து கொண்டார் சுடலைமுத்து.

    பங்குனி உத்திரத்தில் பாலபிஷேகம் :

    பங்குனி உத்திரம் சாஸ்தாவின் அவதார தினம் என்பதால், இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்மக்கள் அனைவரும் ‘பால் குடம்’ ஏந்தி வந்து, சாஸ்தாவுக்கு அபிஷேக ஆராதனை செய்கிறார்கள். அத்துடன் அன்று சுந்தரபாண்டிய சாஸ்தாவுக்கு பொங்கலிட்டு படைத்து வழிபட்டால், பொங்கல் பொங்குவது போல் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிப்பெருகும் என்பது நம்பிக்கை.

    பிரார்த்தனைச் சிறப்பு :

    அவரவர் பிறந்த நட்சத்திர நாள்களில் இங்கு வந்து சாஸ்தாவுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், இன்னல்கள் யாவும் நீங்கும். மேலும், பங்குனி உத்திர நாளன்று பாற்குடம் எடுத்துவந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வெகுவிசேஷம்.

    நடை திறந்திருக்கும் நேரம் :

    திருக்கோயிலின் நடை தினமும் காலை 9 மணியிலிருந்து 11 வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து 6.30 வரையிலும் திறந்திருக்கும்.

    எப்படிச் செல்வது :

    திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறினால், சுமார் 40 நிமிட நேர பயணத்தில் செய்துங்கநல்லூரை அடையலாம். வழியிலேயே சிற்பச் சிறப்பு மிக்க கிருஷ்ணாபுரம் கோயிலையும் தரிசிக்க இயலும். மேலும் செய்துங்கநல்லூரைத் தாண்டி வைகுண்டம், இரட்டைத் திருப்பதி, ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
    திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது.
    அமைவிடம்

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூசை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராசகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசட்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

    சூரசம்கார மூர்த்தியானதிருச்செந்தூர் முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவருக்கு அருகில் இடப்புறத்தில் சிவலிங்க செகநாதர் இருக்கிறார். முருகப்பெருமானை சுப்பிரமணியர் வணங்குகிறார் என்று புராணம் கூறுகிறது.

    இவரது வலதுமேல் கையில் சக்தி வேலாயுதம் ஏந்தி, இடது மேல் கையில் செபமாலை தரித்தவராகவும், அழகிய இடதுஇடுப்பில் வைத்துக்கொண்டு வலது கீழ்க் கையில் பூவை வைத்தவராகவும், வீரமுடையவராகவும், முக்கண்ணனைச் சதா பூசை செய்பவராகவும், கடற்கரையில் நின்றபடி காட்சி அளிக்கிறார். முருகப்பெருமான் தன்னைநாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுவதெல்லாம் கொடுப்பவராகவும் காட்சி அளிக்கிறார்.

    சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான்.

    சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னிமுகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில், மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இருகூறாகச் சிதைந்தது. ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு.

    சூரசம்காரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் “”வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர்.

    கந்தசட்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சட்டியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது.

    முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார்.

    இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசட்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்பசிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசட்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

    12 நாள் விழா :


    முருகத்தலங்களில் கந்தசட்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சட்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசட்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறுநாட்களில் சட்டி விரதம், சூரசம்காரம், ஏழாம் நாளில் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.

    சட்டி யாகம் :

    திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் செயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, திருமால், விநாயகர், சப்தகுரு, பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூசை முடிந்தவுடன் செயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்காரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்காரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புகிறார்.

    மும்மூர்த்தி முருகன் :

    முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்காரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

    இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், பெருமாள், பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற ஆடை சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.

    மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை ஆடை சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.

    கண்ணாடிக்கு அபிஷேகம் :

    செயந்திநாதர், சூரனை சம்காரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் செயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை, முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்காரம் நிறைவடைகிறது.
    விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர்.
    கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர்.

    எந்த ஒரு நல்ல காரியம் தொடங்க, வீடு கட்ட, வியாபாரம் தொடங்க, திருமணம் நன்கு நடைபெற, தேர்வுகளில் வெற்றி பெற, புது மனையில் நல்ல வாழ்வு நிலைத்திட, இப்படி அனைத்து காரியங்களிலும், விநாயகரைத் தொழுது தொடங்கிட எல்லை இல்லா ஆனந்தம் நல்கிடுவார் என்பது உறுதி. இவர் வேத மந்திரங்களின் தலைவன் என போற்றப்படுவர்.

    முழு முதற்கடவுள், பிரணவ மந்திரத்தின் உட்பொருளானவர். இந்த கோவில் இறைவன் எம்பெருமான் விநாயகர் 6 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்டவர். கோவை அருகிலுள்ள, மேலச்சிதம்பரம் என போற்றப் படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருத்தலத்திற்கு பிரதிஷ்டை செய்ய உருவாக்கி, மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர்.

    வண்டியின் அச்சு முறிந்தது :

    இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகிய பொழுது விநாயகரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலானார். இத்திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990--ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டு விருத்தி செய்யப்பட்ட பின்பு, கோவிலை இந்து அறநிலையத்துறை எடுத்து அரசின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும். மண வாழ்க்கை அமைவது நிச்சயம் :

    மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும். இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.

    தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர், இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

    முக்கிய விழாக்கள் :

    சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, மாதத்தில் கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சித்திரை திருவிழா 2 நாட்கள், தைப்பூசம், கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ்-ஆங்கில வருட பிறப்பு ஆகியவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தினமும் 500 முதல் 1000 வரை பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தினமும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கினால் பதிவெண்ணை வாகனத்தில் எழுதுவதற்குமுன் விநாயகரிடம் சமர்ப்பித்த பின்தான் (அதாவது ஈச்சனாரியில் வருகைப் பதிவு செய்தபின்தான்) மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம் இது.

    தினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார். அம்மையப்பன் அம்சமாக (அர்த்தநாரி) இங்கு விநாயகர் அருள்புரிகிறார். அன்பே சிவம் என்பதற்கேற்ப, காலணி விடும் இடத்திலும் சரி; தரிசனம் செய்யும் இடத்திலும் சரி; அர்ச்சகர்களிடமும் சரி; திருக்கோவில் நிர்வாகிகளிடமும் சரி- இன்முகத்துடன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம்.

    குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் என்பது கண்கூடு. தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, சதவிகித அடிப்படையில் பகிர்ந்துகொள்கின்ற பண்பு வேறெங்குமில்லாத சிறப்பம்சம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.


    திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும்.
    திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.

    இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

    தல வரலாறு :

    திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

    ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான்.

    அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

    கோயில் அமைப்பு :

    இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன.

    இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

    நவ தீர்த்தம் :

    சந்திர புஷ்கரணி
    வில்வ தீர்த்தம்
    சம்பு தீர்த்தம்
    பகுள தீர்த்தம்
    பலாச தீர்த்தம்
    அசுவ தீர்த்தம்
    ஆம்ர தீர்த்தம்
    கதம்ப தீர்த்தம்
    புன்னாக தீர்த்தம்

    விழாக்கள்  :

    மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

    இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

    குட முழுக்கு :


    இக்கோயிலில் 2001ஆம் ஆண்டு மார்ச் 15இல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோயிலில் 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் 18 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்ள கடவுள்களை வணங்கினால் நினைப்பது எல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    மதனகோபால சுவாமிக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டாலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலோ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
    பெரம்பலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் பாண்டிய நாட்டு மன்னனான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சாபம் ஒன்றால் புலியாக மாறிய வியாக்ரபாத மகரிஷியின் சாபம் நீங்கிய தலம் இதுவாகும்.

    புலியாக மாற சாபம் :

    முன்பொரு முறை துர்வாசரிடம் சீடராக இருந்தார் ஒரு முனிவர். ஒரு நாள் கவனக் குறைவாக தனது குருவின் கமண்டல நீரை தட்டிவிட்டு விட்டார் அந்த முனிவர். இதனால் கோபமடைந்த துர்வாசம், அந்த முனிவரை புலியாக மாறி காட்டில் உலவும்படி சாபம் கொடுத்தார். இதனால் பயந்து போன முனிவர், தன்னுடைய சாபம் நீங்க வழி கூறும்படி துர்வாசரிடம் வேண்டினார்.

    இதையடுத்து, ‘நீ புலியாக காட்டில் உலவும் வேளையில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனால் தாக்கப்படுவாய். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று கூறி அருளினார்.

    சாபத்தால் புலியாக மாறிய முனிவர், காட்டில் சுற்றித்திரிந்தார். மேலும் முன்வினை பயனாக, காட்டிற்குள் இருந்த பெருமாளையும் தினமும் பூஜித்து வந்தார்.

    இந்த நிலையில் வன வாசம் காரணமாக பஞ்ச பாண்டவர்கள் அந்த வனத்திற்கு வந்தனர். அவர்களும் அங்கிருந்து பெருமாளை வழிபாடு செய்தனர். ஒரு நாள் பூஜைக்காக தண்ணீர் கொண்டுவர அருகில் இருந்த குளத்திற்கு சென்றாள் திரவுபதி. அப்போது அங்கிருந்த புலி ஒன்று அவளைத் துரத்தியது. அதனிடம் இருந்து தப்பித்து இருப்பிடம் திரும்பினாள். அவளது பதற்றத்தைக் கண்ட பீமன், நடந்தது பற்றி விசாரித்தான். அப்போது திரவுபதி தன்னை புலி ஒன்று துரத்தியதைக் கூறினாள்.

    விமோசனம் பெற்ற முனிவர் :

    அந்த இடத்திற்கு சென்றான் பீமன். அவனைக் கண்டதும் புலி, அவன் மீதும் பாய்ந்தது. ஆனால் தன்னுடைய கதாயுதத்தால் புலியை தாக்கினான் பீமன். கீழே விழுந்த புலி, எழுந்தபோது முனிவராக மாறியிருந்தது. முனிவரை தாக்கிவிட்டோமே என்று பதறிப்போனான் பீமன். முனிவரிடம் மன்னிப்பு வேண்டினான். அவனைக் கனிவுடன் பார்த்த முனிவர், தனது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சென்னார். தனக்கு நன்மை செய்த அவனது வீரம், பன் மடங்கு பெருகும்படி வரம் அருளினார்.

    வியாக்ரம் என்றால் புலி என்று பொருள். புலியின் வடிவில் இருந்ததால் அந்த முனிவர் வியாக்ர முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்தத் தலமும் வியாக்ரமபுரம் என்றானது. தமிழில் பெரும்புலிவனம், பெரும்புலியூர் என்பதாகும். பெரும்புலியூர் என்பதே மருவி பெரம்பலூர் என்றானதாகவும் சொல்வார்கள்.

    ஆலய அமைப்பு :

    ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது திருக்கோவில். ராஜகோபுரத்தின் முன்பாக பெரிய தீப ஸ்தம்பம் உள்ளது. இதன் கீழ் திருமாலின் சிறிய திருவடியான அனுமன் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னிதிகள் இருக்கின்றன.

    அதைக் கடந்து முகப்பு மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து மூலவரான மதனகோபால சுவாமி சன்னிதி காணப்படுகிறது. கருவறை வாசலில் துவாரபாலகர்களான ஜெயன்– விஜயன் வீற்றிருக்கின்றனர். உள்ளே மூலவர் மதனகோபால சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அருகிலேயே மரகதவல்லி தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அம்பாளை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் மதில் சுவரின் நீளம் 274 அடி, அகலம் 138 அடி ஆகும். கோவிலுக்கு 2 பிரகாரமும், கோவிலுக்கு வெளியே அக்ரகாரத்தில் மற்றொரு பிரகாரமும் உள்ளது. கோவிலின் உட்பிர காரத்தில் தும்பிக்கை ஆழ்வார், வைகுண்ட நாதன், வியாக்ரபாதர், விஷ்ணுதுர்க்கை மற்றும் பன்னிரு ஆழ்வார்கள், விஷ்வக்சேனர் சிலைகளும் அமைந்துள்ளன.

    மகாமண்டபத்தின் வெளியே வடபுறம் ஆண்டாள் சன்னிதி, கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர், தென்புறம் உடையவர் சன்னிதி, கல்யாண விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. மரகதவல்லி தாயார் சன்னிதியின் பின் பகுதியில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. இது தவிர லட்சுமி ஹயக்கிரீவர் சன்னிதி, நவநீதகிருஷ்ணன் சன்னிதி, தன்வந்தரி, ஞானசரஸ்வதி சன்னிதி, கணேசர், நாகர் சன்னிதி மற்றும் ராம, சீதா, அனுமன் ஆகியோர் வீற்றிருக்கும் சன்னிதி போன்றவை உள்ளன.

    வனவாசத்தின் போது இங்கிருந்து பெருமாளை வழிபட்டனர் பஞ்ச பாண்டவர்கள். அப்போது அருகில் இருந்த தீர்த்தத்தில் தினமும் திரவுபதி நீர் எடுத்து வர, அனைவரும் பெருமாளை பூஜித்து வழிபட்டார்கள். இதனால் அந்தத் தீர்த்தக்குளம் ‘திரவுபதி குளம்’ என்றே அழைக்கப்படுகிறது. மேலும் அங்கு வியாக்ரபாதர் புலி வடிவில் சுற்றித்திரிந்ததால், ‘புலியங்குளம்’ என்ற பெயரும் இந்த தீர்த்தக் குளத்திற்கு உண்டு.

    இந்த ஆலயத்தில் கண் நோய் தீர்க்கும் சஞ்சீவியான நந்தியாவட்டை மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் கடுமையான கோடை காலத்திலும் கூட பசுமையாக தோற்றம் அளிக்கும் என்கிறார்கள். இந்த மரம் பெருமாளை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களால் நடப்பட்டது என்கிறது தல புராணம்.

    குடும்ப ஒற்றுமை :

    இத்தல இறைவனை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களுக்கும், நாராயணன் காட்சியளித்து அருளாசி வழங்கினார். அவரிடம் பஞ்ச பாண்டவர்கள், ‘இறைவா! இந்தத் தலத்தில் தாங்கள் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். மேலும் நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் எங்கள் உறவினர்களால் வந்தது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும் படி அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினர். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.

    குடும்ப அமைதிக்காகவும், உறவினர் ஒற்றுமைக்காகவும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இதுதவிர மதனகோபால சுவாமிக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டாலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலோ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவல்லி தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றினால் நிம்மதியான வாழ்வு அமையும்.

    காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், கோவில் நடை திறந்திருக்கும்.

    திருவிழாக்கள் :

    பங்குனி உத்திர பெருந்திருவிழா, சித்திரை திருநாள், கோகுலாஷ்டமி, உரியடி திருவிழா, ஆண்டாளுக்கு திருவாடிப்பூர திருவிழா, மார்கழி தரிசனம், வைகுண்ட ஏகாதசி, திருமங்கை வேடுபறி விழா, தீபாவளியை ஒட்டி காரடையான நோன்பு விழா, நரசிம்ம ஜெயந்திவிழா, ஆஞ்சநேயர் கம்பத்திற்கு தினமும் ஒருகால பூஜையும், அனுமன் ஜெயந்தி அன்று வடைமாலை அணிவித்து, சிறப்பு பூஜைகளும், ஆடி 18 அன்று காவிரி தீர்த்த திருமஞ்சனவிழா ராமநவமி விழா உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகிறது.

    ஸ்ரீமந் நாராயணன் பிரமனுக்கு 5 இரவுகளில் உபதேசித்த ஆகமம் பாஞ்சராத்ரம், விகனச மகரிஷியால் வகுக்கப்பட்டது வைகானச ஆகமம். மதனகோபால சுவாமி கோவில் வைகானச ஆகம முறையில் தினமும் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய 4 கால பூஜை நடைபெறுகிறது. இதுதவிர மாதாந்திர பஞ்சப்பருவம் எனும் தமிழ் மாதப்பிறப்பு, மாத ஏகாதசிகள், அமாவசை போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
    சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது.
    எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நவகோள்கள் வையகத்தை இயக்குகின்றன. இதில் சனி கிரகத்தின் பங்கு முக்கியமானதாகும். வாழ்விலே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். முற்பிறவியில் செய்த கர்மத்திற்கு ஏற்ப இப்பிறவியில் பலனை சனீஸ்வரன் கொடுக்கிறார்.

    சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது. இங்கு சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராக இருப்பது தனிச்சிறப்பு.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது குச்சனூர் தலம். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்க உருவில் உள்ள இந்த சுயம்பு வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்டுள்ளது.

    கால வரம்பிற்கு அப்பாற்பட்ட குச்சனூர் சனீஸ்வரனைப் பற்றி அகஸ்திய கவுசிக, சிவ நாடி ஜோதிடங்களில் குறிப்பிட்டுள்ளது. சுயம்பு மூலவர் நெற்றியில் நாமம் இடப்பட்டிருப்பது சூரிய நாராயண புத்திரன் என்பதை உணர்த்துவதற்கே. ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் கிரீடத்தில் விபூதி பட்டம் அணியப்பட்டுள்ளது.

    சனி பகவானுக்கு இத்தலத்தில் பிரம்மஹத்தி தோசம் விலகியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் நம்மை பிடித்திருக்கும் செவ்வாய் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும். சனி தோசம் உள்ளவர்கள் வழிபட்டால் சோதனை விலகி சுபிட்சம் உண்டாகும்.

    குடும்பத்தில் மங்கலம் ஏற்படும். தொழில், வியாபார விருத்தி உண்டாகும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கோவில் அருகே சுரபி நதி ஓடுகிறது. வற்றாத இந்த ஜீவ நதியில் பக்தர்கள் புனித நீராடி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்கிறார்கள். தோசம் உள்ளவர்கள் எள் விளக்கேற்றி காக்கைக்கு உணவளித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகுகின்றன.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சனி பெயர்ச்சி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் உள்ளன.

    சனி பகவான் நீதிதேவனாக செயல்படுகிறார். முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து கஷ்டத்தை சனீஸ்வரன் தண்டனையாக கொடுக்கிறார். அதேபோல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினர் பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார். கஷ்டத்தை தாங்க முடியவில்லை என்று சனீஸ்வரனை வழிபட்டால் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார். அதனால்தான் ‘சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை’, ‘சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை’ சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன.

    நடை திறப்பு நேரம் :

    கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.30 மணி, நடை அடைக்கும் நேரம் பிற்பகல் 1 மணி. மறுபடியும் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். சனிக்கிழமைகளில் காலை 6 மணியில் இருந்து 8.30 மணிவரையிலும், திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    போக்குவரத்து வசதி :

    குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கிலோ மீட்டர் தூரம் பஸ் வசதியும் உண்டு. தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்களில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குச்சனூரை அடையலாம். பஸ், ஆட்டோ வசதிகளுண்டு.

    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

    +91- 4554 247 285, 97895 27068, 94420 22281



    மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.
    சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.

    சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.

    முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.

    சமாதி அடைய விருப்பம் :


    இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

    பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.


    அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.

    இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

    கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாக்கள் :

    ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.

    கசப்புத் தன்மை :

    ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்திருந்தார். இதையடுத்து அனைவருக்கும் அன்னமும், பருப்பும் பரிமாறப்பட்டது. அப்போது உணவு வைத்தவர், தவறுதலாக நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்து பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும், அவரது சீடர்களும் எந்த வித வேறுபாடுமின்றி உணவருந்தினார்கள். ஆனால் கண்ணப்பர் என்ற சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்து, அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

    இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள், ‘நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும்’ என்றார்.

    தனது தவறை உணர்ந்த கண்ணப்பர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி வாழ்ந்து வந்தார். சில காலம் சென்ற நிலையில், தன் குருவும், மற்ற சீடர்களும் சமாதி நிலையை அடைவது பற்றி அவருக்கு செய்தி கிடைத்தது. இதையடுத்து அவர் குருவின் இருப்பிடம் தேடி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் சமாதிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் சமாதிகளை வணங்கிய அவர், குருவின் சமாதி முன்பாக அமர்ந்து கண்ணீர் விட்டார்.

    ‘ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா

    மீண்டும் எழுந்தருள வேண்டாவோ– நீண்டவனும்

    ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்

    பூரணமா வையாத போது’

    – என்று மனமுருகிப் பாடினார்.

    அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரை, தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார் சிற்றம்பல நாடிகள்.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.
    காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.
    சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.

    மருதவனம் :

    காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

    காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

    சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.

    பிரம்மஹத்தி தோஷம் :

    வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.

    இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

    கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

    வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.

    மனநோய்க்கு மருந்து :

    இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

    தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.

    எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

    பழிபாவம் நீக்கும் பரமன் :

    திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.

    “பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.

    வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து

    பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்

    மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்

    கருதிடத்தான் நில்லா கரந்து”.

    இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.

    தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.

    வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

    மூகாம்பிகை :

    சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.

    அமைவிடம் :

    கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
    ×