என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நிமிஷாம்பாள் அம்மனை வழிபாட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
    பராசக்தி அன்னையின் சிறந்த பக்தனாக திகழ்ந்தவன் முக்தராஜன் என்ற மன்னன். அவன் தன்னுடைய நாட்டை எந்த வித குறைகளும் இல்லாதபடிக்கு ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வறுமை இன்றும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அசுரனால் இடையூறு ஏற்பட்டது.

    ஜானுசுமண்டலன் என்னும் அந்த அசுரனுக்கு, முக்த ராஜனின் பக்தியைக் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அந்த அசுரன், முக்தராஜனுக்கு இடையூறு செய்வதையே வேலையாக மாற்றிக்கொண்டான். முக்தராஜனுக்கு, ஜானுசுமண்டலனின் இடையூறுகளை சமாளிப்பதே பெரும் சுமையாக இருந்தது. ஆகையால் நாட்டையும், நாட்டு மக்களின் குறைகளையும் உடனடியாக கவனித்து, சரி செய்ய முடியாமல் திணறினான்.

    இப்படியே போனால் என்னதான் முடிவு. ஒரு நாள் இதுபற்றி முக்தராஜன் சிந்தித்தபோது, தன் அன்னையான பராசக்தியிடமே தன் குறையை கூறி வேண்டுவது என்று முடிவு செய்தான். ஜானுசுமண்டலனை அழிக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். மனமுருகி வேண்டும் பக்தனுக்கு மனம் இறங்காமல் இருப்பது தெய்வம் அல்லவே!

    யாகத்தில் உதித்த நிமிஷாம்பாள் :

    யாகத்தில் இருந்து உதித்த அம்பிகை, முக்தராஜன் மற்றும் அவனது நாட்டு மக்களின் வேண்டுகோளின் படி, ஜானுசுமண்டலனைப் பார்த்து ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள். அந்த நொடிப் பொழுதில் அசுரனான ஜானுசுமண்டலன் சாம்பலாகிப் போனான். கண நேரத்தில் தன் பக்தன் முக்தராஜனுக்கு அருள்புரிந்ததால், ‘நிமிஷாம்பாள்’ என அழைக்கப்பட்டாள்.

    அசுர வதம் செய்ததால், அம்பிகைக்கு உண்டான தோஷம் நீங்க, நிமிஷாம்பாள் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தின் அருகில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்தாள். அதைத் தொடர்ந்து அம்பிகையின் தோஷம் நீங்கியது. அம்பிகை வழிபட்ட அந்த லிங்கம், ‘முக்தீஸ்வரர்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.

    இந்த இறைவனை கர்நாடகாவில் ‘மவுத்திகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். தனக்கு அருள்புரிந்த அன்னைக்கு, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சம் என்னும் இடத்தில் கோவில் எழுப்பினான் முக்தராஜன். அந்த அம்பிகைக்கு, ‘நிமிஷாம்பாள்’ என்று பெயரிட்டான். சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி.

    ஆலய அமைப்பு :

    அம்மனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நிலை கோபுரம் முதலில் வரவேற்பு அளிக்கும். அதன் வழியாக கருவறைக்கு சென்றால், அங்கு அன்னை கிழக்கு நோக்கி நான்கு திருக் கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார். நிமிஷாம்பாள் தேவியின் முன்பாக சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள் உள்ளன.

    நிமிஷாம்பாள் வழிபட்ட சிவலிங்கமான மவுத்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அதன் அருகிலேயே லட்சுமி நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகர், அனுமன், சூரியன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.

    இத்தலத்தில் சிவராத்திரி, மாத பவுர்ணமி, நவராத்திரி, நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில்...

    கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. இதுதவிர பெங்களூரில் அக்கிப்பேட் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர், கர்நூல், தவணகிரி ஆகிய இடங்களிலும் நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவில் நிமிஷாம்பாள் கோவில் இருக்கிறது.

    சென்னை காசிச்செட்டி தெருவில் உள்ள கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதனுள் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்த வண்ணம் நிமிஷாம்பாள் எழுந்தருளி உள்ளாள். அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் உள்ளன. நிமிஷாம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சூட்டி தொடர்ந்து 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டும்.

    கருவறை வெளிப்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி, முக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகின்றனர். நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவக்கிரக சன்னிதி உள்ளது. இதில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பது போன்ற சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தலத்தில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும், துர்க்கா ஹோமமும் நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகிறது.

    அம்பிகை வழிபட்ட லிங்கம் :

    கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சத்தில் அமைந்துள்ளது நிமிஷாம்பாள் ஆலயம். இங்கு அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் இருக்கிறது. மவுத்திகேஸ்வரர் என்னும் முக்திகேஸ்வரருக்கு, முகம் போன்ற கவசம் இந்த தலத்தில் சாத்தப்பட்டுள்ளது. இத்தல ஈசனை பிரதோஷ நாட்களில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
    புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
    திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் கரூர் குளித்தலை சாலையின் இடது ஓரத்திலேயே இருக்கிறது திருப்பாராய்த்துறை. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் திருத்தலம்.

    பராய் மரம் :

    திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் நடந்து வந்தால், தென் மேற்கில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் கன்னிமூலை கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச்சன்னிதியில் கோவில் கொண்டுள்ளார்.

    நடுவில் மிகப் பழங்காலத்து பராய் மரம், சுற்றிலும் கம்பி வேலி இடப்பட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க சிறிது இலைகளுடன் உயர்ந்து நிற்கிறது பராய் மரம். இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும் முழுவதும் மருத்துவ குணமுடைய பராய்மரம் தான் தலவிருட்சமாக உள்ளது. மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாது இங்கே மட்டும் தான் இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான் ‘தாடுகாவனம்’ என்று வடமொழியில் அழைக்கிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்.

    பிரார்த்தனை :

    கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்பது இன்றும் கடின நோயாகவே பார்க்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமான பெருக்கம் அடையும் தன்மை கொண்டது. இந்த நோய் உடலின் உள்ளுறுப்புகளிலும், வெளிப்புறத்திலும் தாக்கலாம். இடம், வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல, இந்த நோய்க்கு கதிரியக்கச் சிகிச்சை நவீன மருத்துவத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் ‘இறைவன் சர்வ வல்லமை பெற்றவன்; நம்மைக் காப்பான்’ என்ற நம்பிக்கையில், அவனையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    கோவிலின் அக்னி மூலையில் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து, ஒற்றைப்படை வரிசையில் தல விருட்சத்துக்கு நீர் ஊற்றிவிட்டு அதனை பன்னிரண்டு முறை சுற்றி வரவேண்டும். பதினோரு முறை சிவ நாமம் சொல்லியும், பன்னிரண்டாவது சுற்றில் பிரார்த்தனையையும் சொல்லி இறைவனை வழிபட வேண்டும்.

    மூலிகை மரக்காற்றே மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும். பிறகு பராய்த்துறைப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் மூலிகை பிரசாதத்தைத் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் அருந்திவிட்டு, சிவபெருமானின் அருள்பெற்ற விபூதியை உடலில் தரித்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

    வாரம் தோறும் திங்கட்கிழமைகளிலோ அல்லது மாத சிவராத்திரி காலங்களிலோ, இத்தல இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    திருக்கோவில் அமைப்பு :

    காவிரி தென்கரையோரம் 7 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. நந்தியம்பெருமானை வழிபட்டு, அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றால், அங்கே மற்றொரு கோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.

    அதையும் கடந்து சென்றால், கலை அழகுமிக்க மண்டபங்களுக்கு அடுத்தபடியாக இறைவனின் கருவறை காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய வண்ணம் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் திருப்பராய்த்துறை நாதர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜர் சபை உள்ளது. அங்கிருந்து வெளியே வந்தால் அருகிலேயே தெற்கு நோக்கிய படி அன்னை ‘பசும்பொன் மயிலாம்பாள்’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    உள் பிரகாரம் முழுவதும் கருங்கற்களால் மூடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கிறது. அந்த உட்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், சமயக் குரவர்கள் நால்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் சுப்ரமணியர், பஞ்சலிங்கங்கள், மகாலட்சுமி, விஷ்ணு, அவருக்கு அருகே துர்க்கை மற்றும் லட்சுமி சேர்ந்த துர்க்கா லட்சுமி ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.

    இந்த மூர்த்தங்களை அடுத்தாற்போல, அழகிய கோலங்கொண்ட ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளுடன் ஆயுதங்களைத் தாங்கி, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி– தெய்வானை வீற்றிருக்கிறார்கள். ஆறுமுகப்பெருமானின் முன்பாக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    தேவ கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மேதா தட்சிணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. இதில் சனீஸ்வரருக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. அருகே மேற்கு நோக்கிய திசையில் கால பைரவர் காட்சி தருகிறார்.

    சுவாமி அம்பாள் வீற்றிருக்கும் வெளி மண்டபத்தில் நுழைவு வாசலின் ஒரு தூணில், காலை முழுவதும் உயர்த்தி ஊர்த்துவத் தாண்டவமாடும் கோலத்தில் நடராஜர் வீற்றிருக்கிறார். அதற்கு எதிர் தூணில் அவருடன் போட்டி போட்டு நடனமாடும் கோலத்தில் காளியின் திருக்கோலம் அமைக்கப்பட்டிருப்பது அற்புதக் காட்சியாக உள்ளது.

    ‘அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
    பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
    இரக்கை மேவிய ஈசனை பேத்துமின்
    பொருக்க நம்வினை போயறுங் காண்மீனே’ –என்ற அப்பர் 11 பதிகங்களை இந்தத் திருத்தலத்தில் பாடியுள்ளார். மேலும் திருஞான சம்பந்தர் 11 பதிகங்கள் பாடியிருக்கிறார். இது தவிர இத்தல இறைவனைப் பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகரும், பட்டினத்தாரும் பாடி சிறப்பித்துள்ளனர்.

    தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    முதல் முழுக்கு :

    காவிரியின் தென்கரை சாலையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்திருப்பதால், காவிரி நதியே இந்த ஆலயத்தின் தல தீர்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தின் (ஐப்பசி), முதல் நாள் அன்று இங்கு ‘முதல் முழுக்கு’ என்ற நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் மயிலாடுதுறை திருத்தலத்தில் ‘கடை முழுக்கு’ என்ற நீராடல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல் முழுக்கு அன்று காவிரிக்கரையில் சுவாமியும், அம்பாளும் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அம்பாளும், இறைவனும் கோவிலுக்கு வருவார்கள். அப்போது அவர்களை வணங்கி வழிபட்டால், சகல தோஷங்களும், பாவங்களும் பறந்தோடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. புரட்டாசி மாதம் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் அர்ச்சித்து வழிபடுவதும் தனிச் சிறப்பாக கூறப்படுகிறது.
    விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை என்பவளின் தொழு நோய் இந்தத் தல இறைவனின் அருளால் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது.
    மயிலாடுதுறையில் இருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர், கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையிலேயே உள்ள ஊர் குத்தாலம். ஊரின் நடுவிலேயே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான உத்தவேதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கிய உடன் நடக்கும் தூரத்தில் உள்ளது ஆலயம். நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ‘துருத்தி’ என வழங்கப்படுவது இயல்பு. காவிரியின் தென்கரையில் சிறப்பு பெற்ற ஊராக இருப்பதால் திருத்துருத்தி என்று பெயர் பெற்றுள்ளது.

    உத்தால மரம் :

    பழங்காலத் திருக்கோவிலின் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், எதிரே இருப்பது கோவிலின் தல விருட்சமான உத்தால மரம். இது ஒரு வகை ஆத்தி மரம் ஆகும். மரத்தின் அருகில் உள்ள மேடையில் ஒரு ஜோடி காலணிகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

    சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து உமாதேவியை நிச்சயம் செய்ய இத்தலத்திற்கு வந்த போது, உடன் நிழல் கொடுப்பதற்காக தொடர்ந்து வந்த உத்தால மரத்தையும், காலணிகளையும் ஈசன் இங்கேயே விட்டுச் சென்றதாக ஐதீகம். உத்தாலம் என்பது தான் குத்தாலம் என்று மருவியதாக ஒரு வழக்கு உண்டு.

    உத்தவேதீஸ்வரர் :

    மூலவர் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கியபடி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் ‘உத்தால ஈசுவரர்’ எனவும், ‘உத்தவேதீஸ்வரர்’ எனவும், சொன்னவாறறிவார் பெருமான் எனவும் புகழப்படுகிறார். ராஜகோபுரம் அருகிலேயே தெற்கு பார்த்த தனிக் கோவிலில் அம்பிகை வீற்றிருக்கிறார். நின்ற கோலத்தில் காட்சி தரும் அன்னையை, ‘அரும்பன்ன வனமுலை நாயகி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

    இந்தத் திருத்தலத்தில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    உருத்திரன்மர் என்பவரை காசிக்குச் செல்லவிடாமல், ‘இத்தலமே காசிக்கு நிகரானது’ என்று பாம்பாட்டியாக சிவன் வந்து காட்சி தந்ததாக ஒரு வரலாறு உண்டு.

    புராணச் சிறப்பு :

    பரதமா முனிவரின் கடுந்தவத்தால் பராசக்தி அவருக்கு மகளாகப் பிறந்தாள். சிவபெருமானைக் கணவனாக அடைய இத்தலத்துக் காவிரிக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள் அம்பிகை. இறைவன் தோன்றி அம்பிகையின் கரம் பற்ற முற்பட்டபோது, ‘என்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறினாள்.

    இதையடுத்து நந்தியை அழைத்து, பரதமா முனிவரிடம் சென்று திருமணம் பற்றி பேசி வரும்படி அனுப்பிவைத்தார் ஈசன். நந்தியும் முனிவரை சந்தித்து ஈசனுக்கு, அம்பாளை மணம் முடித்துக் கொடுக்கும்படி கேட்டார். பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் பரதமா முனிவர். இதையடுத்து இறைவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த திருமண நிச்சயம், இந்த ஆலயத்தில் நடைபெற்றது என்றும், அதன்பிறகு அருகில் உள்ள திருமணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.

    இதற்காக கயிலாயத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வந்தபோது, விநாயகர் முன்செல்ல, ‘உத்தாலம்’ என்னும் மரம் சிவனுக்கு நிழல் தந்தபடியே பின் தொடர்ந்து வந்தது. அந்த மரமும், ஈசன் அணிந்து வந்த பாதுகையும் தான் இந்த ஆலயத்தில் இருப்பதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.

    இத்தல இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும், சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.

    உள்பிரகாரத்தை வலம் வரும்போது தனிச் சன்னிதியில் சனீஸ்வரரும், அவருக்கு நேர் எதிரில் விநாயகர் சன்னிதியும் உள்ளன. சனி தோஷம் உள்ளவர்கள் பிரார்த்திக்க ஏற்றத் தலம் இதுவென சொல்லப்படுகிறது.

    காசிப முனிவர், கவுதமர், ஆங்கீரகர், புலத்தீயர், மார்க் கண்டேயன், அகத்தியர், வசிஷ்டர் ஆகிய சப்த முனிவர்களும், வருணன், காளி, அக்கினி பகவான், காமன் ஆகியோரும் இங்கே வந்து இறைவனை வணங்கியுள்ளனர்.

    விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை என்பவளின் தொழு நோய் இந்தத் தல இறைவனின் அருளால் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. மேலும் இறைவனின் தோழரும், நாயன்மார்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோல் நோய் தீர்த்த தலமும் இதுதான்.

    சுந்தரர் தீர்த்தம் :

    திருக்கோவிலின் முன்புறம் படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான தீர்த்தக்குளம் உள்ளது. இது ‘சுந்தரர் தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தின் அருகில் சுந்தரருக்கு சிறிய கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தரர் இத்தல இறைவனை வேண்டி பதிகம் பாடி தன் தோல் நோய் நீங்க வேண்டினார்.

    பின்னர் இறைவனை நினைத்தபடி ஆலயத்தில் அமைந்திருந்த தீர்த்தக்குளத்தில் நீராடினார். நீரில் மூழ்கி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலுமாக குணமாகி இருந்தது. இதையடுத்து இந்த தீர்த்தம், அவரது பெயரிலேயே அழைக்கப்படலாயிற்று.

    மனத்தூய்மையுடன் திருத்துருத்தி சிவாலயத்தில் உள்ள சுந்தரர் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி சுவாமியையும், அம்பாளையும் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு சிவனை நினைத்து திருநீற்றினை உடல் முழுவதும் அணிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால், சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 48 நாட்களும் ஆலயத்திற்கு வர முடியாதவர்கள், முதல் நாளிலும், கடைசி நாளிலும் வந்து வழிபடலாம். மற்ற நாட்களில் இல்லத்தில் இருந்தபடியே சுந்தரரின் பதிகத்தை பாடியபடி இறைவனை நினைத்து வழிபாடு செய்யலாம்.

    சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் :

    குருவின் பரிபூரண அருளைப் பெற வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து, நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபாடு செய்யலாம். குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். திருமணம் ஆக வேண்டியவர்கள் சுண்டல் மாலை அணிவித்தும், மற்ற கோரிக்கைகளை உடையவர்கள் சுண்டலை தானமாக கொடுத்தோ அல்லது தித்திப்பான சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து பிறருக்கு வழங்கியோ குருவை வழிபடலாம்.

    நமது முன்னோர்களான மனித தெய்வங்களையும் நினைத்து, வியாழக்கிழமை வீட்டில் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அவர்கள் விரும்பிய பொருட்களைப் படைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. குரு கவசம் மூன்று முறை படித்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை சேரும். குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்றும் வழிபட்டு வரலாம். வியாழக்கிழமை அன்று சுண்டலை உணவாகத் சேர்த்துக் கொள்வதும் நன்மை தரும். சர்ப்ப தோஷ அமைப்பு உள்ளவர்கள் திசைமாறிய தெய்வங்களை வழிபடுவது நல்லது.

    இந்தத் திருக்கோவில் தருமபுர ஆதீனத்தின் ஆளுகையின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் ஒன்று. இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

    பழமுதிர்ச்சோலை :

    மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.

    இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

    மாலும்-முருகனும் :

    பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள்படும். சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கிறது. மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று.

    திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது.

    திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம்.

    முருகன் அடியார்கள் :

    திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார்.

    புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

    கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    சைவ-வைணவ ஒற்றுமை :

    அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.

    இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை.

    கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.

    இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

    அமைவிடம் :

    மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.
    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திட்டை திருத்தலம் குரு பகவானுக்கு உகந்த தலமாகும்.
    குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

    இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைப்பர்.

    பஞ்சலிங்க தலம் :

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

    இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

    மங்களம் தரும் மங்களாம்பிகை :

    மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

    கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.

    சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான்.



    இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.

    மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    குரு பகவான் :

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

    இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். இதையொட்டி, இத்தல ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ந் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பரிகார யாக பூஜை நடத்தப்படுகிறது.

    இறைவன் மீது சொட்டும் நீர்:

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

    திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :

    இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    குரு கிரக பரிகாரங்கள் :

    வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

    மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ‘அடாணா’ ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்வதும் நலம் தரும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

    அமைவிடம் :

    திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் - வள்ளிமலை - சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி - திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

    தணிகை :

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று கொள்ளுதலும் பொருந்தும்.

    திருத்தணிகை மலை :

    இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் "பிண்ணாக்கு மலை" என்றும் கூறப்படுகின்றன.

    ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. "சரவணப் பொய்கை" என வழங்கும் புகழ்மிக்க "குமார தீர்த்தம்" என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு "மடம் கிராமம்" என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

    திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

    அருணகிரிநாதர் தனது பாடலில் "அழகுத் திருத்தணிமலை" என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

    தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :

    திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

    தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று பாடியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

    தலச்சிறப்பு :

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

    இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

    வள்ளலார் பெற்ற அருள் :

    19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.

    கோவில் பற்றிய விவரங்கள் அறிய +91-44 2788 5303 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

    அமைவிடம் :

    தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.

    சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர். இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.

    இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

    பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான் :

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

    நான்கரை அடி உயர சுவாமிநாதன் :

    ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    முருகனை போற்றிப் பாடல்கள் :

    அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

    அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    மாடக்கோயில் :

    சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.

    இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

    மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.
    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

    பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.

    இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் "திரு ஆ இனன் குடி" என்று பெயர் பெற்றது.

    திரு - லட்சுமி
    ஆ - காமதேனு
    இனன் - சூரியன்
    கு - பூமாதேவி
    டி - அக்கினிதேவன்

    இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

    அமைவிடம் :

    மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

    இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

    மலையின் மகிமை :

    பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.

    திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

    கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.

    பழம் நீ - பழனி :

    முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.

    பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

    முருகனின் திருவிளையாடல் :

    பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

    இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இதில் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

    அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.

    சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் :

    திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

    லிங்க வடிவில் மலை :

    திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

    இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    தவம் செய்த முருகப்பெருமான் :

    குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

    புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    காட்சி கொடுத்த சிவன்-பார்வதி :

    கடைசியில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.

    அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    அவதரித்ததன் நோக்கம் :

    முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

    தெய்வயானை திருமணம் :

    தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

    அமைவிடம் :

    தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர். இம்மாமதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

     இந்த கோவிலை பற்றிய தகவல்கள் அறிய இந்த எண்ணில் +91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 - 82946 தொடர்பு கொள்ளலாம்.
    பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை ஆந்திர மானிலம் சுருட்டப்பள்ளியில் தரிசிக்கலாம்.
    சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை ஆந்திர மானிலம் சுருட்டப்பள்ளியில் தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள்.

    சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி  தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை. சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டினார்.



    அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள்  நான் தாங்கிக்கொள்கிறேன் “ என்று  நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். ஒருவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் எவ்வளவு கோபக்காரராயினும் அவரையும் கட்டுப்படுத்த ஒருவர் உலகில்  இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தைரியசாலிகளை இறைவனே விரும்புவர். அந்த வகையில் நந்தீஸ்வரன் சிவனின் அன்புக்குரியவர் ஆனார்.

    சிவன் நடனமடிய அந்த நேரம் மாலைப்பொழுதாக இருந்தது. அன்று திரயோதசி திதி. அதாவது அமாவாசை அல்லது  பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்திய திதி. அந்த நாளிலேயே சிவலாயங்களில் பிரதோஷம் நிகழ்கிறது. பிரதோஷ தரிசனம் இங்கு சிறப்பானது. காரணம் இந்த தலம் தான் பிரதோஷம் பிறப்பதற்கே காரணமாக இருந்தது.

    பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள்  ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.

    இவளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.42

    கோயில் ஆந்திராவில் இருந்தாலும் அர்ச்சகர்கள் தமிழில் பூஜை செய்கின்றனர்.  சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும்  அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

    திருவள்ளூர் திருப்பதி ரோட்டில் 60 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ளது.
    குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவர்.
    ஸ்தல வரலாறு :

    கும்பகோணத்திற்கு தென்மேற்கில் 8 கி.மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அன்னை பராசக்தி இத்தலத்தில் தவம் செய்த போது காமதேனு தன் மகள் பட்டியை தேவிக்கு துணையாக பணிவிடைகள் செய்ய அனுப்பியது. அப்போது பட்டியும் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

    தேவி வனம், சக்திவனம் என்ற திருப்பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. இத்தலத்தை நோக்கி சைவ செம்மல் திருஞானசம்பந்தர் நடந்து வந்த போது வெயில் கடுமையாக இருந்தது. இந்த வெம்மைக்கு மாற்றாக பட்டீஸ்வரர் முத்து பந்தலை தமது அடியார்க்கு அளித்த திருத்தலம் இதுவேயாகும்.

    ஐந்து கோபுரங்களையுடைய சிவாலயமாக திகழந்தாலும் துர்க்கைதான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள். வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சியளிப்பது துர்க்காதேவிதான். ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறாள்.

    இவ்வூரார், கோட்டை வாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள். திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவர்.

    இதனால் இக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. துர்க்கையம்மனின் உடம்பில் வேண்டுதலுக்குரிய மஞ்சள் கயிறுகளும், எலுமிச்சம் பழங்களும் ஏராளமாக இருக்கும். கோயிலில் நெய்விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

    இவ்வாலயத்தின் நந்திகள் இடப்புறம் அல்லது வலப்புறம் விலகியே இருக்கும். திருவலஞ்சுழியிலிருந்து பட்டீஸ்வரம் வந்த ஞானசம்பந்தருக்கு வழிவிட சொல்லி இறைவர் இட்ட கட்டளையால் நந்தி இவ்வாறுள்ளது.

    இந்த கோவிலை பற்றி தகவல்கள் அறிய இந்த எண்ணில் +91- 435- 2416976 தொடர்பு கொள்ளவும்.

    கோவில் முகவரி :

    பட்டீசுவரம் துர்க்கையம்மன் கோவில்,
    திரு பட்டீஸ்வரம்,
    தஞ்சாவூர்.
    தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானத்தை அழித்த ஈசன், அவர்களுக்கு மெய்ஞானம் வழங்கிய புனிதமான திருத்தலம் இது.
    மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வழுவூர். இங்கு 11-ம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்ட ஞானசபேசர் கோவில் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானத்தை அழித்த ஈசன், அவர்களுக்கு மெய்ஞானம் வழங்கிய புனிதமான திருத்தலம் இது.

    விஸ்வேஸ்வர சம்ஹிதை எனும் ஈசான சம்ஹிதையை, சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்தார். இது 10 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டது. இதில் கஜாசுர வதம் விரிவாக கூறப்பட்டுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூரைப் பற்றியும், அங்கு நடைபெற்ற கஜாசுர வத நிகழ்வையும் சிவபுராணம், கந்த புராணம் மற்றும் பத்ம புராணம் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கின்றன. பிப்பலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட இடமே ‘வழுவூர்’ என்று சொல்லப்படுகிறது.

    தல வரலாறு :


    தாருகாவனத்து ரிஷிகள் 48 ஆயிரம் பேர் வேள்விகளின் பலனாக, தவ வலிமை பெற்று விரும்பிய வரமனைத்தும் கிடைக்கப் பெற்றனர். இதனால் செருக்குற்று ஆணவத்துடன் இறைவனை மறந்து, தாங்களே எல்லாம் என்று நினைக்கத் தொடங்கினர்.

    ரிஷி மற்றும் ரிஷி பத்தினிகளின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு, பரமேஸ்வரன் ‘பிட்சாடனராகவும்’, திருமால் ‘மோகினி’யாகவும் தாருகாவனம் சென்றனர். ஆணவத்தால் ஞானத்தை இழந்திருந்த ரிஷிகளுக்கு வந்திருப்பது திருமால் என்று அறிய முடியாமல் போயிற்று. அவர்கள் மோகினியின் அழகில் மயங்கி, தங்களது தவ வலிமை அனைத்தையும் இழந்தனர்.

    இதே போல் ரிஷி பத்தினிகள் அனைவரும் பிட்சாடன மூர்த்தியின் சவுந்தர்யத்தால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் சென்றனர். மிக தாமதமாக இந்த மாயையை உணர்ந்து கொண்ட முனிவர்கள், சிவபெருமான் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் வேள்வி செய்து, அக்னி, புலி, மான், நாகம் போன்றவற்றை இறைவன் மீது ஏவினார்கள். அவை எல்லாவற்றையும் சிவனார் அருள் கூர்ந்து தன் உடைமைகளாக ஏற்றுக்கொண்டார்.

    இறுதியில் வேள்வியில் இருந்து யானை ஒன்று தோன்றி சிவபெருமானை நோக்கி மதம் கொண்டு ஓடியது. அந்த கஜாசுரனை, சிவபெருமானை தலையில் தாக்கினார். இறைவனின் தாக்குதலை தாங்க முடியாமல் கஜாசுரன், தம்மை ஏவிய முனிவர்களை நோக்கி, அவர்களை அழிக்க முற்பட்டான்.

    தங்களது ஆணவத்தால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்த முனிவர்கள், தங்களை காத்தருளும்படி சிவபெருமானை பிரார்த்தித்தனர். கருணையே வடிவான இறைவனும், தவறை உணர்ந்த முனிவர்களை காக்கும் பொருட்டு கஜாசுரனின் உடலினுள் புகுந்தார். இறைவனது வெம்மையை தாங்க முடியாமல் யானை பஞ்ச பிரம்ம தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் விழுந்தது. இதனால் இத்தீர்த்தம் ‘ஹஸ்தி புஷ்கரணி’ என்று பெயர் பெற்றது.

    கணவனை காணாத அம்பிகை வருத்தம் அடைந்தாள். அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றபோது, இறைவன் யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது முருகப்பெருமான், தன் தாயாருக்கு ‘இதோ தந்தை’ என்று சுட்டிக்காட்டினார். யானையில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி சம்ஹார தாண்டவம் நிகழ்த்தினார் என்பது தல வரலாறு.

    அருள் தரும் இறைவன் :

    இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாவார். இவர் கிருத்திவாசேசர், வீரட்டேஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி மற்றும் ஞானசபேசர் போன்ற திருநாமங்களுடன் போற்றப்படுகிறார். இத்தல இறைவன் உயிர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை வழங்குவதால் ஞானசபேசர் என்ற பெயர் சிறப்புக்குரியதாக உள்ளது.



    அம்பாள் இடுப்பில் முருகப்பெருமானை வைத்தபடி, அழகிய திருமேனியுடன் காட்சி தருகிறார். முருகன் ஒரு விரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தை தூக்கி வைத்து, நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் தலபுராணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

    சுவாமிமலையில் குழந்தையான முருகப்பெருமான், தந்தையான ஈஸ்வரருக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக காட்சி தருகிறார். அதேபோல இந்த தலத்தில் அம்பிக்கைக்கு ஞான வடிவாகிய ஈஸ்வரனை சுட்டிக்காட்டும் தோரணையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    தீர்த்தக் குளம் :

    இந்த தலத்தில் உள்ள ‘ஹஸ்தி புஷ்கரணி’ தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வாத, பித்த, கப நோய்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புஷ்கரணி தீர்த்தம், ‘பஞ்ச பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்டது என்கிறது தல புராணம்.

    இந்தத் தீர்த்தக் குளம் நந்தி தேவருக்கும், சிவபெருமானுக்கு இடையே அமைந்திருப்பது விசேஷமானதாகும். இங்கு நீராடி முன்னோர்களுக்கு செய்யப்படும் பித்ரு கடன், காசி மற்றும் கயாவில் செய்வதற்கு ஒப்பானதாகும். ஐப்பசி அமாவாசை அன்று 66 கோடி தீர்த்தங்கள் இத்தடாகத்தில் கூடுவதாகவும், அப்போது இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள் விரும்பியதை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

    இங்குள்ள நவக்கிரக சன்னிதி மிக விசேஷமானதாகும். வழக்கமாக வெவ்வேறு திசைகளில் தோன்றும் சனியும், குருவும், இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நேரெதிரே வீற்றிருப்பது போல் காட்சி தருகின்றனர். இது ஒரு சனி தோஷ நிவர்த்தி தலமாகும். சனிக்கிழமைகளில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய், குளத்து நீர், இளநீர், பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, நீல பட்டாடை உடுத்தி, வன்னி, வில்வ இலைகளால் அர்ச்சித்து, உளுந்து வடை, எள் கலந்த உளுந்தன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, நீண்ட ஆயுளும், நிலைத்த செல்வமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். இத்தலத்தில் சனி பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. சனி பகவான் வில்லுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

    திருவிழாக்கள் :

    இந்த ஆலயத்தில் மாசி மகம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் பூசம், ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திர தினங்களில் கஜசம்ஹார உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ இரண்டாம் நாளில் கஜசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படுவது காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    பங்குனி மற்றும் சித்திரையில் பத்து நாள் நடைபெறும் வசந்த உற்சவ விழா, சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அப்பருக்கு மோட்சம் அளித்த நாள், வைகாசி மாதத்தில் பத்து நாள் நடைபெறும் பிரமோற்சவம், ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூரம், மார்கழி மாதத்தில் நடைபெறும் மாணிக்கவாசகர் உற்சவம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியுடன் நடைபெறும் உற்சவம் போன்றவை சிறப்பானதாகும்.

    அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.

    கோவில் சிறப்புகள் :

    * திருவாலங்காடு, திருவெண்காடு, சிதம்பரம், மதுரை, கும்பகோணம், திருவதிகை, திருச்செங்காட்டான்குடி, கயிலாயம் ஆகிய எட்டு தலங்களுடன், இந்த வழுவூரும் ஒரு தாண்டவ ஷேத்திரமாகும்.

    * மயிலாடுதுறையை சுற்றியுள்ள புகழ்பெற்ற அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி இவற்றுடன் திருவழுவூரும் இடம்பெறும்.

    * திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளிசபை), திருநெல்வேலி (தாமிரசபை), திருக்குற்றாலம் (சித்திரசபை) உள்ளிட்ட சபைகளில், முனிவர்களுக்கு ஞானம் வழங்கிய வழுவூர் தலம் ஞானசபையாக போற்றப்படுகிறது.

    * தட்சிண கயிலாயம் என்ற புகழ் பெற்ற காளஹஸ்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை முதலியவற்றுடன், வழுவூரும் தென் கயிலாயம் என்ற புகழைப் பெற்றது.

    * லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பீஷண பைரவர் முதலிய பைரவர்களில், வழுவூரிலுள்ள கஜாசுர சம்ஹார மூர்த்தியான கங்கால பைரவரும் இடம்பெறுவார்.

    * பிரளய காலத்திலும் கூட அழியாத தலங்களாக போற்றப்படும் காஞ்சி, சீர்காழி, கும்பகோணம், நீடூர், சாக்கோட்டை, கீழ்வேளூர், திருப்புறம்பியம், திருநெல்வாயில் முதலிய ஷேத்திரங்களுடன் வழுவூரும் முக்கிய இடம்பெறும். பிரளயத்திலிருந்து வழுவிய காரணத்தாலேயே இந்த ஊர் ‘வழுவூர்’ என்று பெயர் பெற்றதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. வழுவூரை நான்கு யுகங்கள் பழமையான ஷேத்திரமாக புராணங்கள் விவரிக்கின்றன.

    * வசிஷ்டர், அத்திரி, அகஸ்தியர், கண்வர், காத்யாயனர் முதலிய ரிஷிகளும், வீரசோழன் உள்ளிட்ட பல சோழ அரசர்களும் வழிவழியாக பூஜித்து வந்த இத்தலம் இது என்று அறியப்படுகிறது.

    * நாட்டிய சம்பந்தமான 108 கரணங்கள் மற்றும் தல வரலாறு சம்பந்தமான தொன்மையான ஓவியங்கள் போன்றவை இந்த ஆலயத்தின் பிரகார சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன.
    ×