search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
    X

    திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

    திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும்.
    திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.

    இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

    தல வரலாறு :

    திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

    ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான்.

    அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

    கோயில் அமைப்பு :

    இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன.

    இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

    நவ தீர்த்தம் :

    சந்திர புஷ்கரணி
    வில்வ தீர்த்தம்
    சம்பு தீர்த்தம்
    பகுள தீர்த்தம்
    பலாச தீர்த்தம்
    அசுவ தீர்த்தம்
    ஆம்ர தீர்த்தம்
    கதம்ப தீர்த்தம்
    புன்னாக தீர்த்தம்

    விழாக்கள்  :

    மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

    இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

    குட முழுக்கு :


    இக்கோயிலில் 2001ஆம் ஆண்டு மார்ச் 15இல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோயிலில் 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் 18 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்ள கடவுள்களை வணங்கினால் நினைப்பது எல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    Next Story
    ×