என் மலர்
ஆன்மிகம்

லட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில் - திருநின்றியூர்
சோழ தேசத்தின் காவிரி வடகரை சிவாலயங்கள் 63–ல், 19–வது திருத்தலமாக திகழ்கிறது திருநின்றியூரில் உள்ள லட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்.
தேவர்களும், ஏனைய தெய்வங்களும் நித்தமும் தொழும் நிகரற்ற இறைவன் வீற்றிருக்கும் பதி இது. உலக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தும், ராஜபோகங்களையும் அள்ளித்தரும் அருள்மிகு பதியாகவும் விளங்கும் புண்ணிய பூமி இது. இங்குள்ள இறைவனை செல்வத்தின் அதிபதியாகிய “திரு” என்ற மகாலட்சுமி பூஜித்து வழிபட்டுள்ளார்.
ஆதியில் திருமாலின் திருமார்பில் நீங்காமல் இருக்கும் வரம் வேண்டி, அலைமகள் லட்சுமி தேவி இங்குள்ள ஈசனை வழிபட்டு வரம் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் செல்வத்திற்கும், தம்பதி ஒற்றுமைக்கும் குறைவிருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயைக் கொண்டு இத்தல இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்பது பரசுராமரின் எண்ணமாக இருந்தது. எனவே அவர் 300 வேதியர்களோடு இங்கு வந்து தங்கினார். மேலும் 360 வேலி நிலத்தை நீர்வார்த்து வளர்த்து அதில் வரும் விளைச்சல் வருவாயைக் கொண்டு, இந்தத் தல ஈசனுக்கு வழிபாடுகளை செய்து வந்தார். இதையடுத்து பரசுராமருக்கு, இத்தல இறைவன் திருவடிப்பேறு வழங்கி அருளினார் என்றும் தல புராணம் எடுத்துரைக்கிறது.
இது தவிர பசு ஒன்று தனது மடிப்பாலை பொழிந்து இத்தல பெருமானை வழிபட்டு, அவர் திருவடி புகுந்துள்ளது. இந்திரன் இந்த இறைவனை வணங்கி வழிபட்ட பின்பே, இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்தணர்கள் மிகுந்திருந்த இந்த நின்றியூர் ஈசனை சித்தர்களும், தேவர்கள் பலரும் வணங்கி பேறு பெற்றுள்ளனர்.
காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், அகத்திய மாமுனிவர், இந்த பரமனை பூஜித்து, பொதிகை மலையில் வாழும் பேறு பெற்றார். திருமால், பிரம்மதேவர் ஆகியோர் சில மந்திரங்களால் இத்தல இறைவனை வாழ்த்தி பல வரங்களைப் பெற்றுள்ளனர். இவை அனைத்துக்கும் சான்றாக விளங்குவது சுந்தரரின் தேவாரப்பாடல்கள் ஆகும்.
இத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தலா ஒரு பதிகமும், சுந்தரர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். வள்ளல் ராமலிங்கரும், பட்டினத்தாரும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். பெரியபுராணத்தில் இத்தலம் பற்றி சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
தல வரலாறு
ஒரு சமயம் பிரம்மஹத்தி தோஷத்தால் கோச்செங்கட்சோழன் என்னும் மன்னனுக்கு சித்த பிரமை ஏற்பட்டது. அதற்கு பரிகாரம் செய்வதற்காக அந்த மன்னன், தினமும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு அரண்மனைத் திரும்புவான்.
அப்போது திருநின்றியூர் காடாக இருந்தது. காட்டுப்பகுதியான அந்த இடத்திற்கு அருகே வரும்போது, மன்னன் முன்பாக அரண்மனைக் காவலர்கள் பிடித்திருக்கும் தீவட்டி அணைந்து போவது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இதனை கவனித்து வந்த மன்னன், அந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தான்.
ஒரு நாள் பகல் வேளையில் அந்த வழியாக மன்னன் வந்தான். அப்போதும் தீவட்டிகள் அணைந்து போயின. மேலும் அந்த அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பசு ஒன்று வானத்தில் இருந்து இறங்கியதையும், சிறிது நேரம் கழித்து அந்தப் பசு மீண்டும் வானத்தை நோக்கி பறந்ததையும் கவனித்தான். இதையடுத்து காட்டுப்பகுதியை சுத்தப்படுத்த காவலர்களுக்கு, மன்னன் உத்தரவிட்டான். அதற்கானப் பணியை காவலர்கள் தொடங்கினார்கள். அப்போது ஒரு காவலாளி, பாறையில் கடப்பாறையால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது.
அந்த இடத்தை மன்னன் உற்று நோக்கினான். அங்கு ஒரு சுயம்பு லிங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லிங்கத்தின் மீது ஆலயம் (மாடக்கோவில்) எழுப்பி, தினமும் வழிபாடு செய்து வந்தான். இதன் விளைவாக கோச்செங்கட்சோழனின் சித்த பிரமை முற்றிலும் நீங்கி நிவாரணம் கிட்டியது.
ஆலய அமைப்பு
ஊரின் உள்ளே நாலாபுறமும் மதில்கள் சூழ, ஆலயம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. பழைய மாடக்கோவில் முற்றிலும் சிதைந்ததால், நாட்டுக்கோட்டை நகரத்தாரால் ஆலயம் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், அதன் உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. சிலபடிகள் ஏறிச்சென்றால், மகா மண்டபம் காணப்படுகிறது. அதன் வலது புறம் அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் உலகநாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். லோகாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.
கருவறையில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் லட்சுமிபுரீஸ்வரர். மகாலட்சுமீஸ்வரர் என்றும் இறைவனை அழைக்கிறார்கள். லட்சுமி தேவி வழிபட்டு பேறு பெற்றதால் இந்தப் பெயர் வந்துள்ளது. கடப்பாறை பட்டத்தில் ஏற்பட்ட காயத்தை இன்றும், பாணத்தின் சிரசில் காண முடியும்.
இறைவனையும், இறைவியையும் வழிபட்ட பின்னர் ஆலயம் வலம் வந்தால், தேவ கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்களை தரிசிக்கலாம். மேற்கு திருமாளிகை பத்தியில் ஜமதக்னீஸ்வரர், பரசுராமேஸ்வரர், சுப்பிரமணியர், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோரது சிலை உருவங்கள் உள்ளன. மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு ஆலயத்தில் உள்ளனர். ஆலய தென்மேற்கு மூலையில் கணபதி சன்னிதியும், வடமேற்கு மூலையில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமையப்பெற்றுள்ளது. தல விருட்சமாக விளாமரமும், தல தீர்த்தமாக நீலமலர் பொய்கையும் விளங்குகின்றன.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த ஆலயம் இதுவாகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. செல்வச் செழிப்பு உண்டாக இங்குள்ள இறைவனுக்கு லட்சுமி ஹோமம் செய்தால் நன்மைகள் நடைபெறும். ஹோமத்தில் தாமரை இதழில் தேன் ஊற்றி, யாக குண்டத்திற்குள் இட வேண்டும். மேலும் குழந்தைப்பேறு இல்லாதவர்களும், இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேறப் பெறுகின்றனர்.
திருநின்றியூர் இறைவனை வழிபட்டால், அச்சம், பாவம், கேடு, நோய் யாவும் நீங்கும் என்பது சம்பந்தர் வாக்காகும். இத்தலம் பற்றிய அன்பர்களை வினைகளும், பாவங்களும் அண்டாது என்பது திருநாவுக்கரசரின் திருவாய்மொழியாகும். தினமும் 2 கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநின்றியூர் திருத்தலம்.

Next Story