என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும்.

    ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.

    துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.
    கண் நிறைந்த கணவன் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பாவை நோன்பை கடைபிடித்தால் அந்த ஆசை நிறைவேறும்.
    பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

    அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

    திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

    காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.

    கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.
        
    திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

    அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.
    சிவனுக்கு உகந்த சோமவார விரதத்தை முறையாக கடைபிடித்தால் திருமண வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளும் தீரும்.
    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    நாள் : கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், வாரந்தோறும் வரும் திங்கள் கிழமைகள்.

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

    சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
    அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர்.
    விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும்.

    தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை. வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து உங்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து விரதத்தை கடைபிடித்து வந்தால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பது சாஸ்திர விதி.

    ஒருவருக்கு அதிர்ஷ்ட நிலையின் அளவீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்வது பிரகஸ்பதியான குருவே.
    வார நாட்களில் 5-ம் நாள் வியாழன் ஆகும். குரு, முதல் தர சுபக்கிரகமாக போற்றப்படக் காரணம், ஜாதக ரீதியான பல்வேறு தோஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக் கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை தரும்படி செய்து விடுவதேயாகும்.

    சுய முயற்சிக்கும், வெற்றிக்கும் உள்ள இடைவெளி அல்லது இரண்டையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளி எது என்ற வினாவிற்கு `அதிர்ஷ்டம்` என்ற விடை வருகிறது. ஒருவருக்கு அந்த அதிர்ஷ்ட நிலையின் அளவீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்வது பிரகஸ்பதியான குருவே.

    சர்வ சாஸ்த்ர ஞானம், பொருளாதார விருத்தி, ஒருவருக்கு அமையும் சந்தான பாக்கியங்கள், குருவின் ஆசீர்வாதங்கள் (அதாவது ஆன்மிக குரு) தான தர்மங்கள், தியானம், யோகம், வழிபாடுகள், அரசியல் தலைவர்கள், அமைப்பு ரீதியான தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், ஆன்மிகம் சார்ந்த அமைப்புகளை வழிநடத்தும் துறவியர் பெருமக்கள் ஆகிய பல்வேறு விஷயங்களை தேவ குருவான வியாழ பகவான் தமது நிலைக்கேற்ப வெளிப்படுத்துவார்.

    கபம் சம்பந்தப்பட்ட நோய்களையும், வயிறு சம்பந்தமான நோய்களையும் குரு குறிப்பிடுவார். ஒருவரது குழந்தைப்பேறு தாமதமான காரணங்களையும் குருவே குறிப்பிடுவார். பொருளாதார உயர்வு, பிறர் நம்மை மதிக்கும் நிலை, புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் அவரது பங்களிப்பு பெருமளவு உண்டு.

    குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும்.

    தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

    அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில் மவுன விரதம் இருப்பது மிகவும் சிறந்ததாகும்.

    குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின் ஆசிகள் ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

    முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும். அதன்மூலம் கிடைக்கும் ஆசீர்வாத பலம் விலைமதிப்பற்ற சொத்தாகும்.

    அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

    ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

    * சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

    * வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமய மலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    * ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

    * ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

    * ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

    * புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

    * ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

    * கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

    * மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது.

    * தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

    * மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.

    * பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

    * ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
    முஸ்லீம் மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாம் சந்திரமான மாதமாகும்.
    முஸ்லீம் மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாம் சந்திரமான மாதமாகும். அதுதான் நோன்பு நோற்கும் மாதம். திருக்குரான் அருளப்பட்ட மாதமும் அதுதான். அந்த மாதம் முழுமையும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க வேண்டும். சூரியோதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவும் பானமும் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நாளும் தொழுகையிலும், புனிதமான எண்ணங்களிலும் அர்ப்பணிக்க வேண்டும். மேலும், இதே ரமலான் மாதம் ஜகாத் - பித்ரா முதலிய தானங்கள் செய்யும் மாதமாகும்.

    நோன்பின் நன்மைகள் :

    அல்லாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒரு முஸ்லீமும் நோன்பு நோற்கிறான். பகல் முழுவதும் பட்டினியாக இருப்பதால் உடல் பலவீனமடைகிறது. அதனால் உலக இச்சைகள் குறைகின்றன. எனவே, ஆத்மா வன்மையடைகின்றது. ஆத்மிக உணர்ச்சிகளால் உந்தப்பட்ட நோன்பாளி இறைவனையும், இறைவன் நமக்கு அருளும் நன்மைகளையும் நினைக்கிறான். வேறு விதமான ஆத்மிக அனுகூலங்களையும் பெறுகிறான்.

    இதே நோன்பினால் உடலுக்கும் நன்மையுண்டாகின்றது. நோன்பாளி உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்கும் பொழுது உடலிலுள்ள நீர் சுரக்கும் உறுப்பு (சுரப்பி) களிலிருந்து உண்டாகும் அமிலங்கள் மனிதனுடைய இரைப்பையிலுள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று விடுகின்றன. மேலும், கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் பொழுது அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியை வழக்கம் போல் தன் தினசரி வாழ்க்கையின் கடமைகளைச் செய்யவும் பழகிக் கொள்கிறான்.

    இறைவனுடைய அன்பைப் பெறுவதற்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது அவனுக்கு உடல் சம்பந்தமான நன்மைகளும் கிடைக்காமல் போகவில்லை. ஆண்டவனுக்காகவே ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அது உடல் - ஆத்மா இரண்டிற்கும் பயனுள்ளதாக அமைகின்றது.

    இஸ்லாம் கட்டளையிட்டுள்ள தொழுகை - ஜகாத் - ஹஜ் போன்ற ஆத்மீக அனுஷ்டானங்கள் இதே குறிக்கோளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருவன் உலக இச்சைக்காக மட்டும் ஒரு செயலைச் செய்தால் அவன் ஆத்மீகப் பலன் அடைய மாட்டான்.

    நோன்பு தனி மனிதனுக்கு மட்டும் உயர்வு தந்து நின்றுவிடவில்லை. உலகிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தார் அனைவரும் ஒரே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இறையச்சமுள்ளோராக வாழ்க்கை நடத்துவதால், சமுதாய உணர்ச்சியும் தொடர்பும், அன்பும் அனுதாபமும், தரும சிந்தனையும் உண்டாகின்றன. ரமலான் மாதத்தில் பட்டினியிருக்கும் முஸ்லீம் செல்வந்தர், அதே சமயத்தில் பட்டினியாயிருக்கும் ஏழையின் கஷ்டத்தை உணர முடிகிறது.

    இஸ்லாமியச் செயல்முறைகள் எல்லாம் ஆண்டவனுடைய சொல்லாகிய குர் - ஆனிலிருந்து கட்டளையிடப்பட்டுள்ளன. இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கை வழியாதலால் அது இம்மைக்கும் மறுமைக்கும், உடலுக்கும் ஆத்மாவுக்கும் வழி காட்டுகின்றது. எனவே, ஒரு முஸ்லீம் உலகக் கடமைகளைச் செய்யும் பொழுது, ஆத்மாவுக்கும் அனுகூலம் உண்டாகிறது. அதைப் போன்று ஆத்மிகக் கடமைகளைச் செய்யும் பொழுது உடலுக்கும் பயனுண்டாகிறது.

    ரமலான் மாதம் சந்திரமான மாதம். இந்த நோன்பு மாதம், இலையுதிர்க் காலம், குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என்று அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் வருவதால் பல மாதிரியான கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள நோன்பாளி பழகிக் கொள்கிறான். இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இவ்விதமான ஆத்மிகப் பயிற்சியை ஏற்றுக் கொள்கிறான். இதையன்றி, உலக விசயங்களில் உடலுக்காகச் சுகாதார சம்பந்தமான பயிற்சியும், இராணுவப் பயிற்சியும், மனவுறுதியை வளர்க்கும் பயிற்சியும் பெறுகிறான். இறைவனுக்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது இருலோக பாக்கியங்களையும் பெறுகிறான்.

    இஸ்லாம் மாதத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், தீமையிலிருந்து விலகியிருத்தல் முதலிய புறக்கடமைகளும், இறைநம்பிக்கை, இறைவனுக்கு நன்றி செலுத்தல், நேர்மை, கர்வமின்மை முதலிய அகக்கடமைகளும் உள்ளன. ஆனால், புறக்கடமைகளும் ஆத்மாவைத் தூய்மையாக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    நோன்பின் சன்மானம்

    நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும் அவர்களுக்காக மன்னிப்பையும், மேலான சன்மானத்தையும் அல்லா ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான். (அஹ்ஸாப் - 33:35)
    ஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிசனத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப்படுகின்றன.
    உலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம் பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திரு மஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

    ஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிசனத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப்படுகின்றன.

    இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

    நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷே கங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.

    செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம்.
    பணமில்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதுமா? அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் வேண்டும். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம்.

    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர்.
    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.

    ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக்கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,

    “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
    தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
    என்கிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.

    விரத முறைகள் :

    தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

    இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம்.

    அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


    கார்த்திகை விரதத்தின் பலன் :

    முறையாக ஒருவன் விரதம் மேற்கொள்ளும் போது அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும்
    சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
    சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.

    1. சோமவார விரதம்  - திங்கள் கிழமைகளில் இருப்பது

    2. உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது

    3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது

    4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது

    5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

    6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது

    7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

    8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
    குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
    வாழ்வில் சில எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
    ×