என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    மழலைச் செல்வம் வேண்டுவோர் தொடர்ச்சியாக 16 ஞாயிற்றுக்கிழமை சேத்ரபாலபுரம் ஸ்ரீ காலபைரவர் வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.
    ஸ்ரீ பைரவருக்கென்றே அமைந்த தனித்துவம் உடைய ஆலயங்களில் சேத்ரபாலபுரம் காலபைரவர் ஆலயம் காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம்- மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகே உள்ள இந்தத் தலத்தில்தான் பிரம்மனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறப்படுகிறது.

    வடக்கே உள்ள காசி தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடிய பலனை இங்குள்ள ஐந்து தீர்த்தங்களிலும் மூழ்கி ஒரே நாளில் அடையலாம் என்பது ஐதீகம். அதனால் இந்த க்ஷேஷத்ரபாலபுரத்தை காசிக்கும் வீசமதிகமான சிறப்பு பொருந்திய தலம் என்பர்.

    இந்த ஊரில் பிறந்தவர்களுக்கும், இந்த ஊரில் இறப்பவர்களுக்கும் ஸ்ரீ கால பைரவர் வலது காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து யம வாதனையை நீக்குவதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய கருவறையை உடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது என்று கூறப்படுகிறது.

    இத்தல கால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை என்பது சிறப்பானதாகும். காசியை விட அதிக பலன் தரும் தலம் என்பதால் காசிக்குச் சென்று காலபைரவரை வழிபட இயலாதவர்கள் இத்தல பைரவரை வழிபட்டும், காசி தீர்த்தமான கங்கையில் நீராட முடியாதவர்களும் இத்தலத்திற்கு வடக்கே ஓடும் காவிரியில் நீராடியும் காசிக்கு நிகரான புண்ணியத்தைப் பெறுகின்றனர்.



    சித்திரை மாதம் பவுர்ணமியன்று நடைபெறும் காவடி உற்சவமும், கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு தினத்தன்று நடைபெறும் சந்தனக்காப்பு வைபவமும் இத்தலத்தில் விசேஷ திருவிழாக்களாகும்.

    தினசரி இத்தலத்தில் ஒரு கால பூஜையே பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12 மணிக்கு நடைபெறும். உச்சிக்கால பூஜை சிறப்புத் தரிசனமாகக் கூறப்படுகிறது.

    காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணியளவில் சூலத்தீர்த்தத்தில் நீராடி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்ரீ காலபைரவரை தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒருசேரக் கிடைக்குமாம். அது மட்டுமல்ல, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ரோசம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டுமாம்.

    மழலைச் செல்வம் வேண்டுவோர் 16 ஞாயிற்றுக்கிழமை மேற்கூறியவாறு நீராடி ஸ்ரீ காலபைரவரை வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

    நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு வந்தது. மனிதர்களை, அவர் களின் பிறப்பை உணர்ந்து இறைவனுடன் இணையச் செய்வதற்காகவே அவதரித்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பிறந்த இடமும், அவர்கள் உலாவிய இடமும், சித்தர்கள் சமாதி அடைந்த இடமும், சித்தர்கள் அருளாசி கிட்டும் இடமும் சித்தர் பீடமாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றன.

    அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் கடுவெளி சித்தர். இவர் திருஇரும்பை மாகாளத்தில் (திண்டிவனம்) பிறந்து, வாழ்ந்து அங்கு பல சித்துகளை செய்து மக்களை மகிழ்வித்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கி அங்கு சில சித்துகளை செய்துள்ளார். பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கிருந்து கடுவெளியில் ஒளிவடிவான பரம் பொருளை தேடிவந்து சித்தாடல் புரிந்து 35 பாடல்களை இயற்றி உள்ளார். கடுவெளியில் உள்ள சிவபெருமானை பரமநாதர் என்று தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    கடும் தவம் செய்வதாலும், தான-தருமங்களை செய்வதன் மூலமும் இறைவனை அடைய முடியும் என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கியவர் கடுவெளி சித்தர்.

    கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்-சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது.

    கடும் தவம் மேற்கொண்டு தனது சித்துவிளையாடல்கள் மூலம் பக்தர்களை ஈர்த்தவர் கடுவெளி சித்தர். கடுவெளி சித்தர் இறைவனை வெட்ட வெளியில் வழிபட்டு வந்தார். அவர் வணங்கிய சிவனின் திருநாமம் பரமானந்தர். அம்பாளின் பெயர் பாலாம்பிகை. சித்தர்கள் அம்பாளை தங்களுக்கு சக்தி கொடுப்பதற்காக வணங்குவர். கடுவெளி சித்தர் பராசக்தியை வாலைக்குமரியாக வழிபட்டார்.

    ஆலயம் அமைந்துள்ள ஊர் கடுவெளி. சித்தர் உறைந்ததும் இங்கேதான். அதன் அருகில் உள்ள ஊர் சித்தாலத்தூர். அதாவது கடுவெளி சித்தர் அடக்கமானதால் கடுவெளி சித்தர் ஆலத்தூர் என்பது மருவி கடுவெளி சித்தராலத்தூர் என அழைக்கப்பட்டது.

    கடுவெளி சித்தர் சிவபெருமானை துதித்து உள்ளமுருக பாடி வழிபட்டார். அப்போது அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தம்முடைய பேரன்பை வெளிப்படுத்தும் வண்ணம் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாக பிளக்க வைத்தாராம். சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாக பல புராணங்களில் படித்திருந்தாலும், கடுவெளி சித்தரை மகிழ்விக்க இறைவன் வெளிப்பட்டதும் அவ்விதமே இருக்கவேண்டும்.

    ‘நந்தவனத்திலோர் ஆண்டி-அவன்

    நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

    கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்

    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ -என்ற பிரபலமான பாடலை இயற்றியவர் இந்த கடுவெளி சித்தர் தான்.



    ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையெடுத்து உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனம் ஒன்றை பார்க்கிறான். அதில் விதவிதமாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செடி, கொடிகளுக்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும் என்று நினைத்தான். உடனடியாக ஒரு குயவனிடம் சென்று, தனக்கு தோண்டி ஒன்றை கொடுக்குமாறு கேட்கிறான்.

    அதற்கு குயவன் ஒரு தோண்டிக்கு எட்டணா விலை கேட்கிறார். ஆண்டியிடம் காசு இல்லை. இப்படி ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியும் தோண்டியை பொறுமையுடன் கேட்டுவந்தான். ஒரு நாள் குயவன் மனமிரங்கி தோண்டி யொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டிக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் தோண்டியை தலையில் வைத்துக் கொண்டு ஆடியபோது, அது கீழே விழுந்து உடைந்தது.

    இது சாதாரண ஆண்டி, குயவன் கதையல்ல; மனிதனின் ஜீவ ரகசியம். ‘பத்து மாதங்கள் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை மனிதன் போற்றி பாதுகாக்காது, அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே’ என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.

    பத்து மாதங்கள் தவம் செய்து பெற்றது மனிதா. நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானோ? எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளி சித்தர்.

    கடுவெளி சித்தர் ஜீவசமாதியில் சிறிய அகல்விளக்கில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும்போது, அதன் வெளிச்சம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது பெரிய அளவில் தெரிகிறது. கோவிலில் அர்ச்சகர் சங்கு ஊதி பூஜை செய்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதி அருகில் நின்று கொண்டு நாய் (பைரவர்) சங்கு ஊதுவதைப் போன்றே ஒலி எழுப்பி சித்தரை வணங்கும் நிகழ்வு என்றே அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

    பிரபஞ்ச வெளியில் (கடுவெளி) இருந்துதான் ஆன்மாவானது தாயின் கருவறைக்குள் செல்கிறது. இங்கு வெட்டவெளியாக, கடுவெளியாக சித்தர் அருள் நிலவுவதால் நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கடுவெளி சித்தருக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்படும். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படுகிறது.

    மோட்ச தீபம் :

    கடுவெளி சித்தர் சூரிய கிரகத்துக்கு உரியவர். சூரிய கிரகத்தை ஆத்மகாரகன், பிதுர்காரகன் என்பார்கள். அதாவது முன்னோர்களாக என்றும் நிலைத்து விளங்குபவன். கடுவெளி சித்தர் வழியாக கடுவெளி பரமநாதரை (சிவபெருமானை) வணங்கினால், ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கும். மேலும் கடுவெளியில் மோட்ச தீபம் ஏற்றி நமது முன்னோர்களை நினைத்து கடுவெளி சித்தரையும், பரமநாதரையும் வணங்கினால் முற்பிறப்பு பாவங்களும், பித்ரு சாபங்களும் அடியோடு நீங்கி வாழ்க்கை வளமாகும்.
    தொடர்ச்சியாக 15 வாரம் பழமுதிர்சோலை ஸ்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்வழக்கு இருந்தாலும், முருகப்பெருமானுக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுபடை வீடு என்பது முக்கியமானது. ஆறுபடை வீடுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். இந்த ஆறுபடை வீடுகளில் 6-வது தலமாக விளங்குவது ‘பழமுதிர்சோலை’ திருத்தலம்.

    இயற்கை எழில் சூழ்ந்த சிறப்புமிக்க திருத்தலம் இது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. மற்ற படைவீடுகளில் இல்லாத சிறப்பு அது என்றால் மிகையல்ல. ஆம்.. ஆறுபடை வீடுகளில் இந்த படைவீட்டில் மட்டும் தான் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை என தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறார்.

    தன் வாழ்நாள் முழுவதும் தமிழை வளர்த்தபடி, முருகனையே நினைத்து பாடல்களைப் பாடியவர் அவ்வையார். அவர் ஒருமுறை இந்த தலத்திற்கு வந்தார். நெடுந்தூர பயணம் என்பதால் அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், ‘என்ன பாட்டி நாவல் பழம் தரட்டுமா?’ என்று கேட்டான். களைப்பாகவும், பசியாகவும் இருந்ததால் அவ்வை பாட்டியும், ‘சரி.. கொஞ்சம் பழங்களை உதிர்த்துக் கொடு’ என்றார்.

    உடனே அந்தச் சிறுவன், ‘பாட்டி! சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்றான்.

    ‘இது என்ன வேடிக்கையான கேள்வி.. பழம் சுடுமா?’ என்று நினைத்த அவ்வையார், ‘சரியப்பா.. சுடாத பழமாகவே உதிர்த்துக் கொடு’ என்றார்.

    அந்தச் சிறுவனும் மேலே இருந்து நாவல் பழங்களை உதிர்த்துப் போட்டான். கீழே விழுந்ததில் நாவல் பழங்களின் மீது மண் ஒட்டியிருந்தது. மண்ணை அகற்றுவதற்காக ஊதினார் அவ்வை. அதைப் பார்த்து சிறுவன், ‘என்ன பாட்டி.. பழம் சுடுகிறதா?’ என்று கேட்டான்.

    தன்னுடன் விளையாடுவது இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அவ்வையார், மரத்தின் மேல் இருந்த சிறுவனை நோக்கிப் பார்த்தார். அப்போது அந்தச் சிறுவன் முருகப்பெருமானாக மாறி அவ்வைக்கு காட்சியளித்தார் என்கிறது தல புராணம்.



    இங்கு நடந்தது இறைவனின் திருவிளையாடலே என்பதை உணர்த்தும் வகையில், இந்தத் தலத்தில் இருக்கும் நாவல் மரத்தில் சஷ்டி திருநாளில் மட்டுமே நாவல் பழங்கள் பழுத்துத் தொங்குகிறது. இந்த மரத்தின் கீழ்தான் சஷ்டி திருநாளில் சூரசம்ஹார விழா நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் வேலுக்கு தனிச் சன்னிதி உள்ளது. பழங்காலத்தில் இங்கு வேலை மட்டுமே வழிபடும் முறை இருந்ததாகவும், அதன் பிறகே முருகன் மற்றும் வள்ளி- தெய்வானை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் வேல் 3 அடி உயரத்தில் உள்ளது. அதற்கு பக்தர்கள் பால், பன்னீர், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, தங்களின் வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் உள்ள மலையில் இருந்து சிறிது தூரத்தில் ராக்காயி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் அருகில் ஒரு சுனை உள்ளது. இது ‘சரவணப் பொய்கை’ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சுவை மிகுந்த இந்தத் தண்ணீரை ‘நூபுர கங்கை’ என்றும் அழைக்கிறார்கள். இந்த தண்ணீரில் குளித்தால், தோல் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இந்த சுனை உற்பத்தியாகும் இடம் இதுவரை அறியப்படாத ரகசியம். முன்காலத்தில் சிறிய அருவியாக கிடைத்த தண்ணீர், இந்தப் பகுதிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக, குழாய் மூலம் வழங்கப்படுகிறது.

    இங்கு தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. திருமணம் தாமதமாகும் ஆண், பெண் இருபாலரும் இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறார்கள். தொடர்ச்சியாக 15 வாரம் இத்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம் மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் திருக்கோவில் உள்ளது. அதன் மீதுள்ள மலையில் 3 கிலோ மீட்டர் சென்றால், வெகு அழகான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது பழமுதிர்சோலை திருத் தலம்.
    வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகக் கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.
    தினமும் மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். பசுநெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். கோலம் போட்ட இடத்தின் மீது விளக்கு வைக்க வேண்டும். புள்ளிக் கோலத்திற்கு உறவுகளை இணைக்கும் ஆற்றல் உண்டு. வீட்டை வாரம் ஒரு முறையேனும் சுத்தம் செய்து, சாம்பிராணிப் புகை போடுதல் உத்தமம்.

    தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்தால் யோகம். குரு பகவான் படத்தை, நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபட வேண்டும்.



    பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தல் நல்லது. லட்சுமி கடாட்சம் உருவாகும். மயில் இறகு, சங்கு போன்றவற்றை வீட்டில் வைத்தல், தெய்வீக மூலிகைகள் துளசி, திருநீற்றுப் பச்சை, வில்வம் வைத்தல், நடையில் சங்கு பதித்தல், நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைப்பது போன்றவை திருஷ்டி தோஷம் போக்கும்.

    இவ்வாறு செய்வதால் பிரச்சினை தீருமா? என்று நினைக்கக் கூடாது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்தால் பிரச்சினைகள் விலகி ஓடும்.
    அசல தீபேஸ்வரர் கோவிலில், உள்ள சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.
    சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம். ஆனால் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை கிழக்கு நோக்கியும் வீற்றிருக்கும் தலம் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அசல தீபேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார். எனவே இந்தத் தலம் சோமாஸ்கந்தர் திருத்தலமாகவும் விளங்குகிறது.

    இந்தக் கோவில் சிவன் சன்னிதியில் சிறப்பு கருவறை முன்பு உள்ள அசல தீபம் எப்போதும் ஆடாது, அசையாது இருக்கும். எனவே அசையாத தீபம் கொண்ட சிவன், ‘அசல தீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகச்சிறப்பாகும். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு வித்திட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.

    அசல தீபேஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் சன்னிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.



    வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, கல்வி அறிவு, வீடு யோகம், காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் எலுமிச்சம் பழ மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற பூஜைகள் மற்றும் ஹோமம் செய்வது சிறப்பானது.

    சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபர் 30-வது மூர்த்தம் ஆகும். இவரது பாதி சரீரம் விலங்கினங்களிலேயே பயங்கர சக்தி படைத்த யாளியாகவும், பாதி சரீரம் பறவைகளிலேயே மிக சக்தி படைத்த சரபட்சியாகவும் அமைந்திருக்கும்.

    இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தன காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டு சாத்தி, தேங்காய் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி உண்டாகும். வெண் குஷ்டம் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ஞாயிறு ராகு காலத்தில் சனி ஓரை சேருகின்ற போது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தன காப்பு அலங்காரத்தில், சந்தனத்தில் புணுகு, பன்னீர் கலந்த அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் மீதான வீண் பழிகள், இடையூறுகள் அகலும். மேலும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, துர்க்கா தேவி, நரசிம்மர் ஆகிய 4 பேரும் ஒருசேர சரபேஸ்வரர் உருவத்தில் அருள்பாலிப்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றதாகும்.

    நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து கிழக்கில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், காட்டுப்புத்தூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், கரூர் மாவட்டம், வாங்கலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூரில் இந்த தலம் அமைந்துள்ளது.
    பல நோய்களை போக்கும் தீர்த்தமாக நத்தம் மாரியம்மன் கோவில் அபிஷேக தீர்த்தம் விளங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியின் தொகுப்பை பார்க்கலாம்.
    புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் கருவறை முதல் வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. ‘அம்மை’ என்பதை துரத்தும் அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் நீக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாக மாரியம்மன் கோவில் அபிஷேக தீர்த்தம் விளங்குகிறது.



    நினைத்ததை நிறைவேற்றும் அம்மன் :

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    திருஷ்டி தோஷங்களைப் போக்கும் தெய்வ வழிபாடுகளை முறையாக அறிந்து செய்தால் வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி வளர்ச்சி கூடும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.
    ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது முன்னோர் வாக்கு. சிலரது பார்வைகள் பட்டாலே உடனடியாக அதன் பலன் தெரியும். பொதுவாகவே குழந்தைகள் அழகாக இருந்தால் பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளின் மீது பதியும் சிலரது பார்வையின் பலத்தால் அந்தக் குழந்தைகள் இரவில் அழத் தொடங்கும். சாப்பாட்டைக் கூடத் தவிர்த்து விடும். எனவேதான் அழகான குழந்தைகளுக்கு அலங்காரம் செய்பவர்கள் குழந்தையின் கன்னத்தில் பொட்டு வைத்துவிடுவர். அதுவும் கருப்பு பொட்டு வைப்பதுதான் முக்கியத்துவம்.

    கைகளில் கருப்பு வண்ணக் காசிக்கயிறு கட்டிவிடுவர். அதே போல தலைமுடியைக் கூடக் கலைத்து விடுவர். இதன் மூலம் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது நம்பிக்கை. சிலருடைய பார்வையின் வலிமையில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது வழிபாடாகும்.

    ஒருசிலர் பிரம்மாண்டமான வீடு களைச் சிலர் கட்டிப் புதுமனை புகுவிழா நடத்துவர். அப்பொழுது அந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் வருவர். ஒருவர் பார்வையைப் போல மற்றொருவர் பார்வை இருக்காது. அதற்காகத்தான் திருஷ்டிப் பூசணிக் காயைத் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் அடுக்கு மாடியாக இருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே கட்டிடம் ஆஹா இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்று வியப்பில் ஆழ்வர். மனதில் நம்மால் முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பும் ஒருசிலருக்கு இருக்கும். இந்த ஏக்கப் பெருமூச்சுகளைத் தவிர்ப்பவை தான் யோகங்களை வழங்கும் யாகங்கள்.

    ஒரு மனிதன் கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து யோகமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் ஹோமங்கள் தான் கைகொடுக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை முழுமையாக ஆராய்ந்து அவர்களது ராசி, நட்சத்திர அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் வீட்டில் உள்ள மையமான இடத்தைத் தேர்ந்தெடுத்து எந்த அமைப்பில் ஹோமம் வைத்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



    கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், வித்யார்த்த ஹோமம் என எத்தனையோ ஹோமங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்த ஹோமம் நமக்குப் பொருத்தமான ஹோமம் என்பதை ஆராய்ந்து வீட்டில் செய்வதா, கோவிலில் செய்வதா என்பதை முடிவு செய்து செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

    இல்லையெனில் அதுபோல ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொண்டும் நற்பலன் பெறலாம். கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்ற ஹோமங்களை வீட்டில் வைக்கலாம், இல்லையென்றால் கோவிலில் கூட யோகம் தரும் நாளில் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். அதனால் நற்பலன்களை நாம் உடனடியாகப் பெற முடியும். தடைகள் அக லும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    ஹோமங்களை வீட்டில் நடத்துபவர்கள் அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்வது நல்லது.

    பொதுவாகவே நல்ல திறமையிருந்தும் முன்னேற முடியவில்லையே என்று நினைப்பவர்கள், நாள் கடந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள், எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்கும் போதே தடை ஏற்படுகின்றதே என்று நினைப்பவர்களும், நல்ல நிலையில் இருந்து சாதாரண நிலையை அடைந்தவர்களும் சகல யோகங் களைப் பெறவும், சக்கரவர்த்தியைப் போல வாழவும் துர்க்கை, வராஹி போன்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.

    மற்றவர்களின் பார்வை பலன் நம் மீது பதிவதால் தேக ஆரோக்கியங்களில் கூடச் சிலருக்கு சீர்குலைவுகள் ஏற்படுகின்றது. அவைகள் எல்லாம் மாறி தேகநலம் சீராக வேண்டுமானால் தெய்வ வழிபாடுகள் கைகொடுக்கும். திருஷ்டி தோஷங்களைப்போக்கும் தெய்வ வழிபாடுகளை முறையாக அறிந்து செய்தால் வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி வளர்ச்சி கூடும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.
    மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தீர்த்தத்தில் நீராடுவது எப்படி?

    மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

    மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    கடல், புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக் கூடாது. உடுத்திய ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து சிறிதளவு தெளிக்க வேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது.



    புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் உரிய பலனை வழங்குவார். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவ சிந்தனையுடன் மாசி மக புராணம் படிக்க வேண்டும்.

    மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் வந்தடையும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணம் வீசும் மலர்களால் வழிபட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.
    திருமணமாகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன்.

    மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு.

    நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகா தானம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாள், நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களுடன் காட்சியளித்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு சகல நைவேத்தியமும் செய்யப்படுகிறது. உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சன்னிதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டு செல்லக்கூடாது.



    அதனாலேயே இந்த பெருமாளுக்கு உப்பை விலக்கிய பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் தனியாக தாயாருக்கு சன்னிதி கிடையாது. பெருமாளுக்கு பக்கத்தில் பூமி நாச்சியார் மட்டுமே இருக்கிறார். பூமி நாச்சியாரை பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக ஆஸ்தானத்தை விட்டு எழுந்தருளும் வழக்கம் கிடையாது.

    இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.

    ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.
    திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் விஷ்ணு துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர்.
    மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம் துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

    தேவக் கோட்டத்தின் தென் திசையில் உள்ள இந்த துர்க்கைக்கு தனியாக ஒரு சன்னிதியே உள்ளது. இந்த துர்க்கையை வழிபடுவோருக்கு நவக்கிரக தோஷம் நீங்குவதுடன், பில்லி, சூன்யம், சித்தபிரமையும் நீங்குவது நிஜம்.

    இந்த துர்க்கையை பிரார்த்தனை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் விலகுவது உண்மை என சொல்கின்றனர் பக்தர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் இந்த துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர்.



    இப்படி வேண்டிக் கொள்ளும் பெண்கள் தங்களது வயது எண்ணிக்கையில் தீபமேற்றி, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழம், பூ, நாணயம் இவைகளை கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய துர்க்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர். ஆலயத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது ஆலயத்தின் எதிரே உள்ளது.

    பில்லி, சூன்யம் பாதிப்பு உள்ளவர்களை துர்க்கைக்கு எதிரே சன்னிதியில் அமரச்செய்து, கடம் வைத்து பூஜை செய்து, அந்த தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, பிணி கண்டவர்கள் குணமாகும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சி.

    7 தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, 7-ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாத்தினால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். இந்த துர்க்கைக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் நடைபெறும் ராகு கால பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
    தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் தொழு நோய், திருமண தடைக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் மூலவர் சுயம்புலிங்கமாய் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் எனவும், அகத்தியருக்கு தம் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் எனவும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் போற்றப்படுகிறார். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும், கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலைசூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம்வந்து வழிபட்டுச்சென்றால் தடைப்பட்டிருந்த அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.



    ஒரு சமயம் பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நன்னாள். கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். அதைக் கேட்ட குந்திதேவி பெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமான், குந்தி தேவிக்காக பிரம்ம தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய ஏழு கடல்களையும் வருமாறு செய்தார்.

    அதில் குந்திதேவி நீராடிப்பேறு பெற்றார். இந்த ஏழுகடல்களைக் குறிக்கும் ஏழுகிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை பன்னிருமுறை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்ற நம்பிக்கை இன்றும் பக்தர்களிடம் உள்ளது.

    பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யசூர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.
    கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில் ஸ்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம், குழந்தை பாக்கியம் பெறலாம்.
    நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.

    இந்த கோவிலில் உள்ள பெருமாள் எமபயம் போக்கும் பெருமாளாக விளங்குகிறார். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.

    தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் பெயரில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து 10 அப்பம் வாங்கி அதை நைவேத்திய தானம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    குழந்தை இல்லாதவர்கள் கோவிலடி கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு வர வேண்டும். தேங்காய், பழங்கள், துளசிமாலை வெண்ணைய், கற்கண்டு, விளக்குக்கு நெய் வாங்கி வந்து குருக்களிடம் கொடுத்து, தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.



    குருக்கள் மந்திரங்கள் சொல்லி கோபாலகிருஷ்ணன் சிலை விக்கிரகத்தை தம்பதியர்கள் கையில் கொடுத்து மந்திரங்களை கூறுகிறார். பின்னர் நைவேத்தியம் செய்த கற்கண்டுகளை 10 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

    தஞ்சாவூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவிலடி கிராமம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லவேண்டும். திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.
    ×