என் மலர்
புதுச்சேரி

வீடு வாடகைக்கு வருவதாக கூறி புதுவை ராணுவவீரரிடம் ரூ.1.62 லட்சம் மோசடி
- புதுவையில் வீடு வாடகைக்கு வருவதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாட்ஷா வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ராஜாஜி நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். அவரது மனைவி யசோதா (வயது 66). இவர்களது மகன்கள் அனந்த கிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் இந்திய ராணுவத்தில் கடற்படை பிரிவில் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
யசோதா தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட விரும்பினார். இதை தனது மகனிடம் தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கார்த்திகேயன் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தான் ராணுவத்தில் பணி செய்து வருவதாகவும், லாஸ்பேட்டை என்.சி.சி. அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் கிடைத்துள்ளது என்றும், அந்த வீட்டை வாடகைக்கு தருமாறும் கேட்டுள்ளார்.
மேலும் தான் ஏற்கனவே பணி செய்யும் இடத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதுவை வருவதற்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. அதனை அனுப்பினால் நான் புதுவை வந்தவுடன் வீட்டு வாடகை முன்பணத்துடன் சேர்த்து தருவதாக கூறினார்.
ராணுவ வீரர் என்பதாலும், தானும் ராணுவத்தில் பணிபுரிவதால் இதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் தனது மற்றும் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 498 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை கார்த்திக்கேயன் உணர்ந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாட்ஷா வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்.






