search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் மீண்டும் முதல் இடம்பெறும் நமச்சிவாயம்
    X

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் மீண்டும் முதல் இடம்பெறும் நமச்சிவாயம்

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுவை தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராஜ்யசபா எம்.பி., 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியவற்றோடு பாராளுமன்ற தொகுதியையும் பா.ஜனதா பெற்றது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    இருப்பினும் கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என கருதி பா.ஜனதா புதுவை தொகுதியை கூட்டணியில் பெற்றது.

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வசதியாக இருக்கும் என பா.ஜனதா தலைமை கருதியது.

    அதேநேரத்தில் தொகுதியை பெற்ற வேகத்தில் பா.ஜ.க.வால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. முதல்கட்ட பா.ஜனதா பட்டியலில் புதுவை தொகுதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதுவரை வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியான நபர் என பா.ஜனதா நிர்வாகிகளே அமைச்சர் நமச்சிவாயத்தை கைகாட்டியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    இதனால் வேட்பாளருக்காக பலரும் பரிசீலிக்கப்பட்டனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது. ஆனால் அவர்கள் வெளிமாநிலத்தினர் என்ற முத்திரையால் கைவிடப்பட்டது.

    இதனையடுத்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மீண்டும் நமச்சிவாயம் பெயர்தான் முதலிடத்திற்கு சென்றது.

    இதனிடையே புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறுமி படுகொலை பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. இந்த பிரச்சனையை அரசு சரியாக கையாளவில்லை என்ற புகார் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே காரைக்காலை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் என கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கட்சி மேலிடத்துக்கும் புகார் சென்றது.

    இதனால் அவரை வேட்பாளராக்கும் முடிவும் கைவிடப்பட்டுள்ளது. தற்போது புதுவையில் நிலவக் கூடிய சூழலை சமாளித்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள நபராக அமைச்சர் நமச்சிவாயத்தையே பா.ஜனதா தலைமை கருதுகிறது. இதனால் மீண்டும், மீண்டும் அமைச்சர் நமச்சிவாயமே வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

    அவரை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைக்க கட்சியின் தலைமை நேரடியாக பேச திட்டமிட்டுள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    Next Story
    ×