என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை கோவில்
    X
    சபரிமலை கோவில்

    சபரிமலை கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றம்- தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

    ஆராட்டு விழா மற்றும் பங்குனி மாத பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவிலை திறந்து வைத்தார். இன்று முதல் ஆராட்டு விழா தொடங்கியது.

    இதற்கான கொடியேற்றம் காலை 10.30 மணிக்கு நடந்தது. திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்தார்.

    இன்று தொடங்கும் ஆராட்டு விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீபூதபலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.

    17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது. 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. அதன்பின்பு வழக்கமான பூஜைகளுக்கு பிறகு அன்று மாலை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. மறுநாள் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.

    ஆராட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்கலாம் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

    ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆராட்டு விழா மற்றும் பங்குனி மாத பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், கொட்டாரக்கரை, பத்தினம்திட்டை, எர்ணாகுளம், செங்கனூர் உள்பட பல்வேறு நகர்களில் இருந்து விடப்படுகிறது.

    Next Story
    ×