என் மலர்
வழிபாடு

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி நாளை முதல் 21-ம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருமொழித் திருநாள் தொடங்கி 12-ம் தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடந்தது.
தொடர்ந்து, இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை திருவாய்மொழித் திருநாள் இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.
நாளை முதல் நடைபெறவுள்ள ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார். 19-ம் தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.
வரும் 22-ம் தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23-ம் தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும். நாளை முதல் 21-ம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து, 22-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Next Story






