search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் கூட்டம்.
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    நாளையுடன் மகா தீப தரிசனம் நிறைவு- திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

    திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் மகாதீப தரிசனம் இன்னும் நடைபெற்று வருகிறது.

    இதை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளது. நேற்று, இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். நேற்று மாலை தரிசனத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    மகா தீபத்தை தரிசித்த பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது அருணாசலேஸ்வரர் சன்னதி அருகில் குறுக்கு வழியில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டதால் பலர் வாக்குவாதம் செய்தனர். இருந்த போதிலும் அந்த வழியாக தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

    சிறப்பு தரிசன கட்டணம் செலுத்தியும் விரைந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனைப்பட்டனர். நேற்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

    நாளையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் மகா தீப தரிசனம் நிறைவு பெறுகிறது.

    பவுர்ணமி தினத்தில் வருகை தரும் பக்தர்கள் கூட்டம் போல் நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சே‌ஷத்திரி, ரமணர் ஆசிரமம், அடிமுடி சித்தர் கோவில் உள்ளிட்ட சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலர் ஆட்டோக்களில் சென்று அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்தனர்.

    தீபத் திருவிழாவின் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இப்போதுதான் திருவிழா நடைபெறுவது போல பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பலர் ஆன்மிக சுற்றுலாவாக திருவண்ணாமலை வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.

    இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×