search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது- மாலையில் மகா தீபம்
    X

    திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது- மாலையில் மகா தீபம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.

    பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.

    பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.


    அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிலுக்குள் வந்த பக்தர்கள் பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.

    புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அர்த்த நாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபம் ஏற்றுவார்கள்.

    அப்போது கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்குவர். பவுர்ணமி நேற்று 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று மதியம் 12 மணியளவில் பவுர்ணமி முடிந்தாலும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளிக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

    கிரிவலப்பாதை கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போட மாட்டார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போடுவார்கள்.

    அப்போது திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். கோவிலில் நடக்கும் வாண வேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். பரணி தீபத்தை போலவே மகா தீப தரிசனமும், மெகா திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #AnnamalaiyarTemple #BharaniDeepam
    Next Story
    ×