என் மலர்

  செய்திகள்

  64 தீர்த்தகட்டங்களில் கோலாகலம்: மகா தீப ஆரத்தியால் ஜொலித்த தாமிரபரணி
  X

  64 தீர்த்தகட்டங்களில் கோலாகலம்: மகா தீப ஆரத்தியால் ஜொலித்த தாமிரபரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

  பல்வேறு ஆன்மீக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல்வரை தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா நடக்கிறது. நேற்று இந்த விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

  பாபநாசம், நெல்லை அருகன்குளம், திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகா புஷ்கர விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் ஜடாயுத்துறையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மகா ஆரத்தியை தொடங்கி வைத்தார்.

  தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் இந்திர கீல தீர்த்தத்தில் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. இதையொட்டி வேத பண்டிதர்கள், ஆதீனங்கள், சாதுக்கள் திரளானோர் கலந்துகொண்டு சதுர்வேதம், பஞ்சபுராணங்கள் பாடினர். தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாமிரபரணியில் புனித நீராடினார்கள்.  காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூர் புடார்ச்சன தீர்த்தத்தில் நடைபெற்ற மகா ஆரத்தியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, பழவூர், கோடகநல்லூர் தீர்த்தக் கட்டங்கள், படித்துறை களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடந்தது.

  நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சம் கொடுத்த சிறப்புடைய தீர்த்தக்கட்டத்தில் புஷ்கர விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள கோசாலையில் 54 யாக குண்டங்கள் அமைத்து ஓமங்கள் நடந்து வருகின்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலையில் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் நடந்த புஷ்கர விழாவில் கலந்து கொண்டார்.

  முன்னதாக கோசாலைக்கு வந்த அவருக்கு மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோசாலையில் கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்த கவர்னர் பின்னர், பசுக்களுக்கு பழங்கள் வழங்கி கோபூஜை செய்து அவரே ஆரத்தி காட்டினார். அவருக்கு கோசாலை சார்பில் 144 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

  மாலை 6.05 மணிக்கு கோசாலை ஜடாயு படித்துறைக்கு வந்த கவர்னர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தாமிரபரணி, அகஸ்தியர் சிலைகளுக்கும், தாமிரபரணி நதிக்கும் புனிதநீர் ஊற்றி மலர்களை தூவினார். அங்கு பரணி தீப ஆரத்திக்காக வைக்கப்பட்டு இருந்த குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து, சப்தரிஷிகளான அகஸ்தியர், காசியப்பர், அத்ரி, பரத்வாஜயர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகியோர் கங்கையில் கங்கா ஆரத்தி செய்வது போல் இங்கு ஏழு பரணி தீப மகா ஆரத்தியும், நாகஆரத்தியும் நடந்தது.  ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட்டது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்களும் வந்திருந்தார்கள். வேத மந்திரங்கள் முழங்க இந்த மகாபரணி ஆரத்தி நடந்தது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

  அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நெல்லை தைப்பூச படித்துறையில் நேற்று மாலை தாமிரபரணி நதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரபரணியில் தீபங்கள் ஏற்றி வணங்கினார்கள். தாமிரபரணி புஷ்கர குறுக்குத்துறை கமிட்டி சார்பில் வேணு வன தீர்த்தம் எனப்படும் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெற்ற விழாவில் தாமிரபரணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது.

  தெட்சண காசி எனப்படும் முறப்பநாட்டில் தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்காக தட்சண வாகினியாக பாய்கிறது. காசிக்கு நிகரான இந்த தலத்தில் புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் நதி ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை செய்திருந்தது.

  இதேபோல் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் தாமிரபரணி நேற்று ஆரத்தியால் ஜொலித்தது. எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
  Next Story
  ×