search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
    X

    திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ந்தேதி அகற்றப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து 24-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும், வஜ்ஜிர கவசம் அணிவிக்கப்படுகிறது. வஜ்ஜிர கவசத்துடன் உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 2-வது நாளான 25-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    3-வது நாளான 26-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்படும் தங்கக் கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே அகற்றப்படாமல் இருக்கும்.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 24-ந்தேதி வசந்த உற்சவம், 25-ந்தேதி விசே‌ஷ பூஜை, வசந்த உற்சவம், 26-ந்தேதி அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட 3 நாட்கள் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமால சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
    Next Story
    ×