search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
    X

    வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது - பக்தர்கள் தரிசனம்

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.#vaikuntaekadasi #sorgavasal
    பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.



    வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.

    இதற்காக, அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பரமபத வாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். அதன்பின், காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை செய்யப்படுகிறது. காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 30-ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    முன்னதாக பகல் பத்து உற்சவத்தின் ஒன்பதாவது நாளான நேற்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
     
    சொர்க்கவாசல் திறப்பின்போது, சாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் கோவிலின் வளாகத்திற்குள் ஆரியபடாள் வாசல் அருகில் இரும்பினால் ஆன சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

    மேலும், ராப்பத்து திருநாள் நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. பக்தர்கள் பெருமாளை தரிசிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதேபோல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. #vaikuntaekadasi #sorgavasal


    Next Story
    ×