என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகதீஸ்வரருக்கு இன்று 2,500 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்
    X

    பிரகதீஸ்வரருக்கு இன்று 2,500 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

    கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு இன்று 2,500 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகந்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சோழ மன்னனான முதலாம் ராஜேந்திர சோழன் 1000 வருடத்திற்கு முன்பு கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்த கோவில் கட்டப்பட்டது.

    சோழர் சிற்பங்களுடன் தஞ்சை பெரிய கோவிலின் பிரதிபலிப்பாக, அறுபது அடி சுற்றளவும் 13½ அடி உயர மும் மிக பிரமாண்டமாக பிரகந்நாயகி உடனுறை மூலவர் பிரகதீஸ்வரருடன் கோவிலை நிறுவினார்.

    அனைத்து உற்சவங்களுடன் ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெற்று வருகிறது. பிற்காலத்தில் தடைபட்ட நிலையில், தற்போது ஐப்பசி பவுர்ணமி அன்று சிவஸ்தலத்திற்கு சென்று வழிபடுவதோடு அன்னாபிஷேகத்தை காண்பது புண்ணியமாக கருதப்படுகிறது.

    அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாற்றப்பட்டு, ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ்வரூபமாக மாறுவதால். அன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



    எனவே கடந்த 32 வருடத்திற்கு முன் காஞ்சி மகா பெரியவர் திரும்பவும் அன்னாபிஷேகத்தை தொடங்கினார். அவரின் ஆசைப்படி, காஞ்சி மடத்து பக்தர்களால் 33-வது ஆண்டாக இந்த வருடம் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    நேற்று முன்தினம் கணக்க விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிரகதீஸ்வரர், பிரகந்நாயகி, மகிஷாசுரமர்த்தினி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனாதி தைலம், நெல்லி முல்லி பொடி, அரிசி மாவு, திரவிய பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், எலுமிச்சை பழம், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர், கங்கை தீர்த்தம் உட்பட 48 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது.

    வில்வ இலை உட்பட 11 வகையான இலைகள், 21 வகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 100 சிப்பம் சுமார் 2,500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைக்கத் தொடங்கினர். இன்று மாலை 6 மணியளவில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம், செய்து மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் பிரகதீஸ்வரருக்கு ருத்ரா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையும், காஞ்சி சங்கர மட பக்தர்கள் சார்பில் கமிட்டி குழுவும் செய்துள்ளது.
    Next Story
    ×