என் மலர்
உலகம்

அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது - சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேச்சு
- அருணாசலப் பிரதேச பெண்ணின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என சீன அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.
- இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.
ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.
அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.
சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ""சாங்னான் சீனாவிற்கு சொந்தமானது. இந்தியாவால் சட்டவிரோதமாக "அருணாச்சலப் பிரதேசம்" என்று அழைக்கப்படுவதை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அப்பெண் துன்புறுத்தப்படவில்லை; விதிகள் மற்றும் சட்டங்களின் படியே சோதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விமான நிறுவனம் அப்பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதி செய்து கொடுத்தது. உணவு வழங்கியது" என்று தெரிவித்தார்.
"அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒன்று. அது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி" என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






