என் மலர்
உலகம்

போர் முடிவுக்கு வருமா?... ரஷியா - உக்ரைன் இடையே இன்று நேரடி பேச்சுவார்த்தை
- உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
- இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது. போர் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது பிரதிநிதிகள் துருக்கி சென்றுள்ளனர்.
அதன்படி துருக்கியில் இன்று நடைபெறும் ரஷியா-உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்கவில்லை. அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ரஷியா சார்பில் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மிக்கேல் காலுஜின், பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், ரஷியா ராணுவ உளவுத்துறை தலைவர் இகோர் கோஸ்யுகோவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.






