என் மலர்
உலகம்

ஈரானில் ஆட்சியை அகற்ற திட்டம்?- அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசக தகவல்
- அணுசக்தி தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
- மிக விரைவில் அமெரிக்காவின் 2-வது போர்க்கப்பல் ஈரானை நோக்கி புறப்படும்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டு யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணுசக்தி தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பலை (யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு) அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி ஆட்சியை அகற்ற அழுத்தம் கொடுப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் போது, ஈரானில் அதிகார-ஆட்சி மாற்றம் ஒரு சிறந்த விஷயமாக இருக்கும். அது நடக்கக்கூடிய சிறந்த விஷயமாகத் தெரிகிறது.
அவர்கள் 47 ஆண்டுகளாக பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால் அது எங்களுக்கு தேவைப்படும் என்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் 2-வது போர்க்கப்பல் ஈரானை நோக்கி புறப்படும் என்றார். இதன்மூலம் ஈரான் ஆட்சியாளர்களுக்கு டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.






