என் மலர்tooltip icon

    உலகம்

    Iran War | ஈரான் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..!- இஸ்ரேல் பிரதமர் பகிரங்க எச்சரிக்கை
    X

    Iran War | "ஈரான் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..!"- இஸ்ரேல் பிரதமர் பகிரங்க எச்சரிக்கை

    • இதுவரை மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை.
    • மொஜ் தபா கமெனி உயிருடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.

    இதையடுத்து புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை.

    அவர் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே நேற்று மொஜ்தபா கமெனி முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அமெரிக்கா-இஸ்ரேலை பழிவாங்குவோம். அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இந்தநிலையில் மொஜ் தபா கமெனி உயிருடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர்,"மொஜ்தபா கமெனி ஒரு வேளை காயமடைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

    இதற்கிடையே மொஜ் தபா கமெனிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எப்போதையும் விட தற்போது வலிமையாக உள்ளது.

    ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.

    மொஜ்தபா கமெனி, பொதுவெளியில் தனது முகத்தைக் காட்ட முடியாது. அவர் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கைப்பாவையாக உள்ளார்.

    ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை நாங்கள் நசுக்கி வருகிறோம்.ஈரானில் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை அந்நாட்டு மக்களுக்கு உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டு வருகின்றன. ஈரான் மக்கள் புதிய சுதந்திரப் பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவுகிறோம். ஆனால் இறுதியில் அது உங்களைச் சார்ந்தது. அது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.

    இதற்கிடையே துனிசியாவிற்கான ஈரானியத் தூதர் மிர் மசூத் ஹொசைனியன் கூறும்போது,"தாக்குதல்களில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி அதிலிருந்து தற்போது மீண்டு வருகிறார். அவர் நலமாக உள்ளார்" என்றார்.

    அமெரிக்கா,இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 14-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஈரான் தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரான் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டபடி இருந்தன.

    அதேபோல் இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அதனை இஸ்ரே லின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

    மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியா தனது வான்வெளியில் 12 டிரோன்களை இடைமறித்தது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஏவுகணைகள், 26 டிரோன்களை இடைமறித்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பக்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் சீல் வைக்கப்பட்டன.

    இதற்கிடையே லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர்.

    Next Story
    ×