என் மலர்
உலகம்

தாலிபான் அமைச்சர் இந்திய வருகைக்கு இடையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் - 10 பேர் பலி
- ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
- இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.






