என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாள பிரதமர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம்
    X

    நேபாள பிரதமர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம்

    • சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
    • நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

    நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 20 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது

    பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் சர்மா ஒலி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே சமயம், போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×