என் மலர்
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
Live Updates
- 12 Oct 2023 6:58 PM IST
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
- 12 Oct 2023 6:57 PM IST
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க தயார் நிலையில் இந்திய விமானப்படை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப் படையில் உள்ள சி-17, ஐ.எல்-76, சி-130ஜே ரக விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Oct 2023 6:49 PM IST
ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஹமாஸ் அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் போன்றது. ஐஎஸ்ஐஎஸ் போன்று ஹமாஸ் அமைப்பும் அழிக்கப்படும்" என்றார்.
- 12 Oct 2023 5:53 PM IST
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா குற்றச்சாட்டு.
- 12 Oct 2023 5:11 PM IST
பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 12 Oct 2023 5:06 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஒரு இந்தியர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல்.
- 12 Oct 2023 4:39 PM IST
காசா உடனான எகிப்தின் ரஃபா எல்லையை திறப்பதாக, எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- 12 Oct 2023 3:36 PM IST
பாலஸ்தீன மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 12 Oct 2023 3:33 PM IST
சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.
- 12 Oct 2023 3:22 PM IST
இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






