என் மலர்
உலகம்

2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையம் கட்ட இலக்கு: விமான போக்குவரத்து மந்திரி
- இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன.
- அடுத்த 5 ஆண்டில் 50 விமான நிலையம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டாவோஸ்:
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரியான ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விக்சித் பாரத் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வரும் 2047-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்களைக் கட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால், இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு. கடந்த 11 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
2047 விக்சித் பாரத இலக்கை அடைய விமானப் போக்குவரத்து மிக முக்கியமான துறையாகும். நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் துறை சிவில் விமானப் போக்குவரத்து என்பதை நாங்கள் காண்கிறோம்.
சிவில் விமானப் போக்குவரத்தில் மாநிலங்களை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வரும் நாட்களில் மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தார்.






