என் மலர்
உலகம்

அனுமன் பொய்யான கடவுள்: டிரம்ப் கட்சி பிரமுகரின் சர்ச்சை பதிவு
- டிரம்பின் அமெரிக்க குடியரசு கட்சி பிரமுகர் அனுமன் குறித்து வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமெரிக்காவை சேர்ந்த ஹிந்து அமைப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சுகர்லேண்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைந்துள்ளது. கடந்தாண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை வட அமெரிக்காவின் மிக உயரமான கடவுள் சிலைகளில் ஒன்று என்றும், அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் போற்றப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டெக்சாஸ் மாகாண குடியரசு கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
அலெக்சாண்டர் டங்கன் எக்ஸ் வலைதளத்தில் கடவுள் அனுமன் பற்றி ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
டெக்சாஸில் ஒரு பொய்யான இந்து கடவுள் சிலையை ஏன் அனுமதிக்கிறோம். இது ஒரு கிறிஸ்தவ நாடு என பதிவிட்ட அவர், பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர், அஷ்டலட்சுமி கோவிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
இந்நிலையில், அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க இந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புகார் ஒன்றை டெக்சாஸில் உள்ள குடியரசு கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவு மூலம் அனுப்பியுள்ளது.






